உயிரே உனக்காக ... தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் - பகுதி (2)
உயிரே உனக்காக ... தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் - பகுதி (2)
PUBLISHED ON : டிச 12, 2010

இதுவரை:
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கம்ப்யூட்டர் விஞ்ஞானி நரேனுக்கும், கதக் நடன கலைஞரான மதுரிமாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், இருவரும் அமெரிக்கா புறப்பட்டனர் —
மதுரிமாவிற்கு வியப்பாக இருந்தது. ஏர்ஹோஸ்டஸ் என்ன சொன்னாள்... நரேன் ஏன் இவ்வளவு வேகமாக எழுந்து சென்றான் என்பதை நினைக்கும் போது புதிராக தோன்றியது.
எங்கு போனான் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், எழுந்து போய் பார்த்து விடலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். மறுவிநாடியே அந்த யோசனையை கைவிட்டுவிட்டு அமைதியானாள்.
பத்து நிமிடம், பத்து யுகங்களாக நீண்டது. கையில் கிடைத்த இன்ப்ளைட் புத்தகங்களை, 'படபட'வென்று புரட்டினாள்.
கைக்கடிகாரத்தை பார்த்தாள். உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர் என்று எண்ணினாள். அவள் சிந்தனை, இலக்கில்லாமல் சிதறிக் கொண்டிருந்தது.
மெதுவாக நடந்து வந்து, அவள் அருகே உட்கார்ந்தான் நரேன்.
அவனை புதிதாக பார்ப்பதை போல் உணர்ந்தாள் மதுரிமா.
ஹோஸ்டஸ் மீண்டும் பிரசன்னமானாள்.
''எனிதிங்!'' என்று கேட்டுவிட்டு, கண்களால் விசாரித்தாள்.
''நத்திங்...'' என்றான் நரேன். அவன் குரலில், பாவனையில் சற்றே படபடப்பு தெரிந்தது.
மதுரிமாவை பார்த்து, ''ஆப்பிள் ஜூஸ் சாப்பிடலாமா?'' என்று மெதுவாக வினவினான். ''இப்போ தானே சாப்பிட்டோம்.''
சற்றுமுன் சாப்பிட்டதையே மறந்து போயிருந்தான்.
''ஆமாம்... ஆமாம்...'' என்று தலையாட்டினான். அவன் செயல் அவளுக்கு விநோதமாகப் பட்டது.
''நரேன்... என்ன ஆச்சு?'' - அதிகரிசனத்துடன் வினவினாள் மதுரிமா.
''நத்திங் டார்லிங்,'' என்று அவசர அவசரமாக மறுத்து, பாசத்தோடு அவள் கரத்தைப் பற்றி, மிக மெதுவாக அழுத்தினான்.
குலுக்கல் இல்லாமல் அமைதியாகப் பறக்கத் தொடங்கியது விமானம்.
ஏதாவது பேச வேண்டுமே என்று இருவருக்கும் தோன்றியிருக்க வேண்டும்.
''வழக்கமா, நான் சிங்கப்பூர் ஏர்லைன்சில் தான் பறப்பேன்,'' என்றான் நரேன்.
''தெரியுது...''
''எப்படி?''
''அதான் ஏர்ஹோஸ்டஸ், உருகி வழியுறாங்களே!''
''ஓ...'' என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்தான் நரேன்.
''அதுமட்டுமா... காதோடு ரகசியம் வேறு...''
மதுரிமாவைப் பற்றியிருந்த கரங்களை விலக்கி, அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.
''மதுக்கண்ணு... சின்ன விஷயத்துக்கு இப்படி அப்செட் ஆயிட்டியே...'' என்றானே தவிர, அது என்ன விஷயம் என்று சொல்லவில்லை.
ஆனால், அவன் பார்வையில் விஷமமோ, தப்பான திசையோ இல்லை. அது மதுரிமாவுக்கு இதமாக இருந்தது.
நாட்டியத்தைப் பற்றி, அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் பாராட்டிப் பேசுவார்ன்னு அறிவிப்பு வந்ததும், அவள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.
அமெரிக்கா என்பது தொலை தூரமாக இருந்தது ஒரு காலம். அறிவியல் இப்போது தூரத்தை வென்று விட்டது. மொபைல் போனும், சாட்டிலைட் தொலைக்காட்சியும் தூரத்தை தொட்டு விட்டது.
இவன் என்ன பேசப் போகிறான்? நாட்டியம் நல்லா இருந்ததுன்னு, 'தத்து பித்து'ன்னு பேசப் போறான்னு அலட்சியமா இருந்தவளுக்கு, அவன் நடந்து வந்த மிடுக்கும், பேசும்போது தேர்ந்தெடுத்த சொற்களும், அவளைப் பரவசப்படுத்தியது.
'இவன் வித்தியாசமானவன்...' என்று கண்டு கொண்டாள்.
அதனால் தான், சட்டென்று அவன் கரம் பற்றி, இல்லற வாழ்விற்கு தலையாட்டினாள்.
பார்த்தாலே பரவசம் என்ற உணர்வு உடனே பற்றிக் கொண்டது. திருமணத்திற்கு வந்தவர்கள், 'ஐடியல் கப்பிள்... மேட் பார் ஈச் அதர்...' என்று, அவர்கள் காதுபடவே உதிர்த்த மொழிகளைக் கேட்டு, மகிழ்ச்சியில் திளைத்துப் போன அந்த இளஞ்ஜோடி, இதையெல்லாம் பேசிப் பேசி மகிழ்ந்தனர்.
கட்டிலில் சாய்ந்து கொண்டு, மதுரிமாவைக் குறுகுறுவென பார்த்தான். புதிய பெண்ணை, தனக்கே உரிமையான யுவதியை அவ்வளவு அருகில் பார்த்ததால், கிளர்ந்த வியப்பு நீண்டு கொண்டே போனது.
இளமை கொழிக்கும் அந்த பொன்னுடல், 'எனக்கே, எனக்கே...' என்ற பெருமிதத்துடன், அவள் கரத்தை சிக்கெனப் பிடித்தான். வெட்கத்தால் அவள் தலை சாய்த்தாள்.
தலை சாய்வதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடம், நரேனிடம் பரந்த மார்பு. தன் கரத்தால், அவள் முதுகைச் சுற்றி இறுக கட்டிப் பிடித்தான் நரேன். அந்த இறுக்கத்தில் அவள், வலி மறந்த சுகம் பெற்றாள். உணர்ச்சியால் அவள் உடல் அதிர்ந்தது; காதலால் உள்ளம் பரவசமானது.
தன் வலிய கரத்தால், அவள் முகத்தைத் திருப்பினான். நேருக்கு நேர் அவளுக்கு முதல் முத்தத்தைப் பரிசாகத் தர யத்தனித்தான்.
மகிழ்ச்சியால் அதிர்ந்தாள் மதுரிமா.
'கடவுள் அற்புதமாக உன்னைப் படைச்சிருக்கார் என்று சொல்லிக் கொண்டே அவள் கைகள், மெத்தென்ற கன்னங்கள், செழிப்பான செவிகள், எடுப்பான நாசி, அமிழ்தூறும் உதடுகள், கழுத்து, இடுப்பு... என்று வர்ணித்துக் கொண்டே, கழுத்துக்குக் கீழே...' என்ற அவன், மிக மெதுவாக உணர்ச்சியான குரலில் சொல்லிக் கொண்டு போவதை, அந்த கட்டத்தில் தடுத்து, 'போதும் வர்ணனை...' என்று சிணுங்கிக் கொண்டே, தன் பங்குக்கு, முதல் முத்தத்தை அவனுக்கு பரிசாகத் தந்தாள்.
இந்த உணர்வுகள், பரஸ்பரம் இருவர் மனதிலும் நிரந்தரமாக பதிந்திருந்தாலும், இப்போதைக்கு, மதுரிமாவின் நினைவில் மீண்டும் சுழன்றது.
நாட்டியம் என்றால் அவளுக்கு உயிர். தாய் குடும்பத் தலைவி மட்டுமல்ல, ஒரு நாட்டிய பள்ளியை, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தும் பெண்மணி. அவர்களின் ஒரே வாரிசு மதுரிமா.
ஆரம்பத்தில் பரதம் கற்றுக்கொண்ட மதுரிமாவுக்கு, கதக் நடனத்தில் அபார பற்று ஏற்பட்டு, டில்லிக்கு பறந்து வந்து, கதக் அகாடமியில் இரண்டு வருடம் இருந்து கற்றுக் கொண்டாள். கதக் நடனத்திற்கு ஏற்ற உடல்வாகும், முக அமைப்பும், அவளுக்கு வெகு எளிதில் உரிய அந்தஸ்து கிடைக்கச் செய்தது.
அமெரிக்கா, லண்டன், மும்பை, டில்லி என்று பறந்து நாட்டியமாடி, தன் முத்திரையைப் பதித்தாலும், சென்னையில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கிய மதுரிமாவிற்கு, நாரதகான சபையின் அழைப்பு, நல்ல சகுனமாகப்பட்டது.
ஆத்ம திருப்தியோடு ஆடி மகிழ்ந்தவளுக்கு, கடவுளே தந்த பரிசாக, நரேனை ஏற்றுக் கொண்டாள்.
தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று மதுரிமா கற்பனை செய்தது கிடையாது. அவளுடைய தோழிகள் கூட கிண்டலாக கேட்பர்...
'உன் உட் பி எப்படி இருக்கணும்?'
'இவள் ஆட்டத்துக்கு, அவர் மிருதங்கம் தட்ட வேண்டும்!'
'இல்லை... ஜதி சொல்லணும்.'
ஆளாளுக்கு எதையாவது சொன்னாலும், மதுரிமாவிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வரும்.
விமானத்தில், எல்லாம் நேரப்படி நடக்கும். இப்போது இரவு உணவு, வரிசையாக வந்து கொண்டேயிருந்தது.
சூப், சாலட், சிப்ஸ், பப்படம்... எல்லாம் இந்திய வகை உணவு. இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் என்று கொறித்தாலும், வயிறு நிரம்பி விடும்.
ஏர்ஹோஸ்டஸ் வைத்துவிட்டுப் போனதை, நரேனும், மதுரிமாவும் பரிமாறிக் கொண்டனர்.
வெள்ளரித்துண்டு ஒன்றை அவளிடம் நீட்டினான்.
மெதுவாக, மிக மெதுவாக வாயைத் திறந்து கடித்தாள்.
அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தவன், கையை நீட்டினான். கடிபட்ட வெள்ளரித்துண்டு, இப்போது இவனுக்கு சுவையானது.
''மதும்மா... வெள்ளரித்துண்டு இனிக்குது...'' வெட்கிப் போன மதுரிமா, ''பழைய ஜோக்...'' என்றாள்.
''மெய்யாலுமே இனிக்குது...''
சின்ன சின்ன சரசத்தால், தொடுதலால், சீண்டலால் அவர்கள் திளைத்துப் போய், தங்களைச் சுற்றியிருந்தவர்களை மறந்தனர்.
சரியாக மூன்றரை மணி நேரம் பறந்ததும், தன் கடமை முடிந்ததாக, அந்த விமானம், பிரமாண்டமான சிங்கப்பூர் விமான நிலையத்தைத் தொட்டது.
மாறாத சிரிப்போடு அவர்களை நெருங்கினாள் ஹோஸ்டஸ்.
''மேடம்... வாழ்த்து எதற்கு என்றீர்களே... இப்போது சொல்லட்டுமா?''
''எஸ் ப்ளீஸ்...'' என்று விழி உயர்த்தினாள்.
''உங்கள் நடனம் எனக்குப் பிடிக்கும்...''
''நிஜமாவா?''
''லண்டன்ல பார்த்திருக்கேன். பாரதீய வித்யா பவன்ல...''
''இவங்களும் ஒரு டான்ஸ் ஆர்டிஸ்ட் தான்.''
நரேன் இடைவெட்டினான். ஹோஸ்டஸ் மகிழ்ந்தாள்.
''ஹவ் ஸ்வீட்...'' - மெலிதாகச் சிரித்தாள்.
''அதுமட்டு மல்ல... இவரும், என் நடனத்தைப் பார்த்து பாராட்டி யிருக்கார்...'' என்றாள் ஹோஸ்டஸ்.
'இது என்ன புது வம்பு!'
''ஆமா!'' என்று தலையாட்டினான்.
''நாட்டிய ரசிகருக்கு நீங்க மனைவியானதுக்குத் தான் வாழ்த்து சொன்னேன் மேடம்,'' என்று அபிநயத்துடன் கும்பிட்டாள்.
லேசாக புன்னகைத்தாள் மதுரிமா.
''சார்... ஒரு நிமிஷம்,'' என்றவாறு, மீண்டும் அவன் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு, 'விசுக்'கென்று அங்கிருந்து அகன்றாள், அந்த ஹோஸ்டஸ்.
அவன் முகத்தில் எந்த சலனமுமில்லை. எல்லாரும், 'பரபர'வென இறங்கிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில், இன்னொரு விமானத்தில் பறப்பதற்குத் தயாராயினர், நரேனும், மதுரிமாவும்.
அவசர அவசரமாக குளித்து, உடை மாற்றி, சிற்றுண்டி எடுத்துக்கொண்டு, அடுத்த விமானத்தில் ஏறி உட்கார்ந்தாலும், மதுரிமாவின் மனதில் லேசான நெருடல் நீங்காமலிருந்தது.
நரேன், அவன்பால் காட்டும் காதல் கரிசனம், வெகு இயல்பாக இருந்தாலும், எதையோ போலியாக மறைக்கிறானோ என்ற எண்ணம், லேசாக அரும்புவிடத் தொடங்கியது.
குளிரிலும் அவளுக்கு வியர்த்தது. தன் இரண்டு கைகளாலும், முகவியர்வையை துடைத்தவாறு கேட்டாள் -
''நரேன்... அவ பேர் என்ன சொன்னீங்க?''
''யார் பெயர்?'' - சட்டென்று திருப்பி கேட்டான்.
''அதான், அந்த ஏர்ஹோஸ்டஸ் கம் நடனமணி.''
''அவளா... அவ பேரு கவிதா. சும்மா ஒரு பேச்சுக்கு, உங்க டான்ஸ் நல்லா இருந்ததுன்னு சொன்னேன். அதைப் போயி, ஏதோ மேடை போட்டு பாராட்டின மாதிரி உன்கிட்டே சொல்லிட்டா.''
கலகலவென சிரித்தான்; மதுரிமா சிரிக்கவில்லை.
திரும்பவும் கேட்டாள் —
''எந்த ஊர்ல நடனத்தை பார்த்தீங்க?''
''எங்கேயும் பார்க்கலையே,'' என்றான் வெகு இயல்பாக.
''என்ன... பார்க்கலையா... பின்னே நீங்க பாராட்டினதா சொன்னா?''
''போன தடவை ப்ளைட்டிலே வர்றப்போ, அவளோட பயோடேட்டாவை கொடுத்தா... அதுல அவ படம், டான்ஸ் உடையோடு இருந்தது. 'உங்க நாட்டியத்தை பார்த்திருக்கேன். நல்லா ஆடறீங்க...'ன்னு ஒரு வார்த்தைக்கு சொன்னேன்.''
''பொய் சொன்னீங்களா?''
''மதும்மா... இதென்ன விசாரணை?'' - அவன் குரலில் சலிப்பு தெரிந்தது.
அவள் முகம் வாடியது. நொடியில் அதை உணர்ந்த நரேன், ''இந்த லைட் ஊதா கலர் சாரி உனக்கு பொருத்தமா இருக்கு.''
''ம்...'' என்றாள்.
''சாரி மட்டுமா என்று கேட்காதே... கண்ணை உறுத்தாத அந்த லிப்ஸ்டிக் பூச்சு...'' என்றவாறு அவள் கன்னத்தை லேசாக கிள்ளினான்.
''இன்னும் பதினெட்டு மணி நேரம் பறக்கணுமே!'' என்றாள்.
''ஆமாம்... ஆனா, நேரம் பறந்துடும். கொஞ்சம் கொஞ்சலாம், கொஞ்சம் சீண்டலாம்; மீதிக்கு சண்டை போடலாம்...''
அவள் தளிர் கரத்தால், அவன் வாயை அடைத்தாள்.
''அது மட்டும் வேண்டாம். சண்டை மட்டும் வேண்டாம்.''
''விளையாட்டுக்குத் தானே சொன்னேன்.''
''விளையாட்டுக்குக் கூட வேண்டாம். விளையாட்டு வினையாகி விடும்.''
தென் கொரியாவின் தலைநகர் சியோலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி விமானம் பறந்தது.
பயணம் தந்த நெருக்கம், அவர்களுக்குள் ஒருவித பந்தத்தை உருவாக்கித் தந்தது.
தங்களுக்கு பிடித்த உணவு, பிடித்த நடிகர், நடிகைகள், விரும்பும் இசை என்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது மட்டுமல்ல, விமர்சிக்கவும் செய்தனர்.
அவள் பேசுவதையெல்லாம் ரசித்து, ஆர்வமாக கேட்டான்.
மதுரிமாவுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது.
ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிபுணர், தனக்கு கணவராக வாய்த்தது மட்டுமல்ல, தன் கலையை ஆராதிக்கும் ரசிகனாக அவன் இருப்பது, அவளுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
விமானம் லாஸ் ஏஞ்சல்சை தொட்டதும், களைப்பெல்லாம் பறந்து விட்டது. நரேனும், மதுரிமாவும், உற்சாகமாக தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
நூற்றுக்கணக்கில் இளம் பெண்களும், இளைஞர்களும், மாலையும் கையுமாக நின்று கொண்டிருந்தனர். 'புதுமணத் தம்பதிகளே வருக!'வென்று போர்டு பளபளத்தது.
புதுமண தம்பதிகள் திக்கு முக்காடிப் போயினர்.
எல்லாரும் மதுரிமாவை ஆராதிக்கின்றனர். சட்டென்று, தனித்துவிடப்பட்டது போல உணர்ந்தான் நரேன்.
நொடியில் எரிச்சல் பற்றிக் கொண்டது. திரும்பி பார்த்தான்.
''ஹலோ சார்!'' என்று வேகமாக நடந்து வந்து அவனிடம் கைகுலுக்கினாள், அந்த ஏர்ஹோஸ்டஸ் கவிதா.
சட்டென்று திரும்பிய மதுரிமாவின் பார்வையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான் நரேன்.
— தொடரும்.
