
கி.நேரு, நெய்வேலி: விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் நிலை மோசமானதற்கு யார் காரணம்?
நாமும், நம் அரசும் தான் காரணம். விளையாட்டு வீரனுக்கு மூன்று வேளை சோறு வேண்டாம்... உடை மற்றும் பயிற்சி இல்லை, பயிற்சி பெற இடம், உபகரணம் இல்லை. இவை எல்லாவற்றையும் விட, ஊக்குவிக்க அவன் வீட்டினர் கூட தயார் இல்லை!
ப.முத்துக்குமார், மேடவாக்கம்: 'தமிழா... இன உணர்வு கொள்' என்கின்றனரே... எதற்காக?
இவன், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டே இருந்தால் தானே, அவன் மாட மாளிகை கட்ட முடியும்!
ம.தீபலட்சுமி, கடலூர்: மனது கஷ்டமாக இருந்தால், ஆண்கள், தம், சாராயம், பீர், பிராந்தி, விஸ்கி அடிக்கின்றனர். பெண்கள் என்ன செய்வது?
ஆண்களாகட்டும், பெண்களாகட்டும், மேற்கண்டவற்றில் எதுவுமே வேண்டாம். அகப்பைக்கு பயந்து, உரலுக்குள் தலை கொடுத்த கதையாகி விடும். பிடித்தமான புத்தகம் படிக்கலாம் அல்லது இனிமையான இசை கேட்டு ரசிக்கலாம். இயற்கை அழகை ரசித்தபடி சிறிது தூரம் காலாற நடந்து வரலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மனக் கஷ்டம் எதனால் வந்தது என்று ஆராய்ந்து, அவற்றை களைய முற்படலாம்!
எல்.விஜயன், கோவை: உண்மையான பொதுநலவாதி யார்?
மறுநாளுக்கு சேர்த்து வைக்காதவன் எவனோ, அவனே பொதுநலவாதி; இப்போதுள்ள பொதுநலவாதிகள், ஏழு தலைமுறைக்கு அல்லவா சொத்து சேர்த்து வைத்துள்ளனர்!
எம்.சீனிவாசன், மதுரை: எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. இதில், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது? ஓட்டே போடாமல் விட்டு விடலாமா?
அந்தத் தவறை செய்யவே கூடாது; ஓட்டுப் போட்டே ஆக வேண்டும். ஊரில் தீ வெட்டி கொள்ளையன், கன்னம் வைத்து திருடுபவன், 'பிக் - பாக்கெட்' ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யாரால் அதிகம் பாதிப்பு இருக்கிறது என எண்ணிப் பாருங்கள்... அதன்படி செயல்படுங்கள்!
ரா.சைலேஷ்வரன், சென்னை: அரசியல்வாதிகளின் ஊழல்களை எவ்வளவு தான் பத்திரிகைகள் சுட்டிக் காட்டினாலும், அவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதாக தெரியவில்லையே...
கண்டுகொள்ளாமல் இருப்பதன் பலனாகத் தான் அவ்வப்போது கைது, ரெய்டு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி, அனுபவித்து வருகின்றனரே!
க.ஹெலன் ரவி, உறுவையாறு: ஜாதிப் பிரச்னை நம் நாட்டை விட்டு எப்போது ஒழியும்?
இன்னும், 50 ஆண்டுகளுக்கு, கலப்புத் திருமணத்திற்கு மட்டுமே இந்த நாட்டில் அனுமதி என, ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். பிரசாரத்தின் மூலமாகவோ, அறிவுரையிலோ, எழுத்தினாலோ, ஜாதியை ஒழிக்க முடியும் எனத் தோன்றவில்லை!

