PUBLISHED ON : மே 15, 2016

வெளியில் கூறப்படாத சட்டமாக உள்ள இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதங்களும், பண்பாடு என்ற பெயரால் சமுதாய கட்டுப்பாடுகளும் மிக, மென்மையான வடிவத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு, கடுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் கூறுகிறாள்... 'அம்மா உன் மாப்பிள்ளை ரொம்ப அநியாயம் செய்றாரு...'
அம்மா சொல்கிறாள்... 'என்ன செய்யச் சொல்ற... ஆம்பிளைங்களே இப்படித்தான்; அனுசரிச்சுப்போ. வெளியில சொன்னா உனக்கு தான் கேவலம். பிள்ளைகள, உன்னால தனி ஆளா வளர்த்து, ஆளாக்க முடியுமா... ஆண்கள் கிட்டே இதெல்லாம் சகஜம்...'
இதனால், பெற்ற தாயிடம் கூட பல பெண்களால் தங்கள் துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. மனைவிகள், கணவர்களிடமோ, நெருங்கிய வட்டத்திடமோ, பகிர்ந்து கொள்ள முடியாமல் போகும் மனக்குறைகள் என்னென்ன என்று, பட்டியலிட முயன்றிருக்கிறேன்...
'என்னிடமோ, பிள்ளைகளிடமோ, பாசமாகவோ, பிரியமாகவோ இல்லை; குடும்பத்தை கவனிப்பதில்லை; வீட்டில் தங்குவதே இல்லை; எனக்கோ, பிள்ளைகளுக்கோ நேரம் ஒதுக்குவது இல்லை; வீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் இல்லை; காலையில் சொல்லி அனுப்பினேன்; மாலையில் வாங்கி வரவில்லை; என்னுடன் பேசுவதே இல்லை; எந்தத் தகவல்களையும், சொல்வதே இல்லை; செலவுக்குப் போதுமான பணம் கொடுப்பதே இல்லை; எல்லாரையும் வைத்துக்கொண்டு திட்டி, அவமானப்படுத்துகிறார்; ஒழுக்கமில்லை; வெளியில் அழைத்துப் போவதில்லை; என் வீட்டு உறவுக்காரர்கள் என்றால், அவருக்கு ரொம்ப இளக்காரம்; முன்புபோல் இல்லை; ரொம்பவும், மாறி விட்டார்; கொஞ்சங்கூடக் குடும்பப் பொறுப்பே இல்லை; குடும்ப நலனில் அக்கறை என்பதே இல்லை...'
- இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இனி, ஆண்களுக்காக கொஞ்சம் வக்காலத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். இல்லா விட்டால், அவர்கள் என்னைக் கரித்துக் கொட்டி விடுவர்.
பெண்கள் எப்போதுமே, மிகுந்த எதிர்பார்ப்புகளை உடையவர்கள்.
'அவர்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாப் போதும், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்...' என்பர். சரி என்று இருந்தால், கையாலாகாத்தனம் பற்றி விமர்சிப்பர். 'வேறு ஒன்றும் வேண்டாம்; குடிக்கிறதை நிறுத்த சொல்லுங்க, மற்றதை நான் பார்த்துக்கறேன்...' அதிசயமாக அவர் குடியை நிறுத்திவிட்டால், 'இதுபோதுமா... வெளில போயி நாலுகாசு சம்பாதிக்க வேண்டாமா...' என்பர். இதையும், செய்தால் அதற்கு மேல் ஒரு படி செல்வர். இதையும், அதிசயமாக நிகழ்த்தி விட்டால், அதிலும் சொத்தை, நொள்ளை சொல்வர்.
இந்த தாமரை மலர் இருக்கிறதே... அது எவ்வளவு தாழக் கிடந்தாலும், தண்ணீர் நிரம்பினால் தண்டை விடுவிடுவென்று வளர்த்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே போய் நின்றுவிடும். பெண்களின் மனக்குறைகளும், எதிர்பார்ப்புகளும் இப்படித்தான். எப்படி நடந்து கொண்டாலும், இதற்கு மேலே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவே செய்வர்.
எனவே, கணவன்மார்களே... மனைவியிடம், 100 மதிப்பெண் வாங்க முயற்சி செய்யாதீர். சி.ஏ., தேர்விலும், ஐ.ஏ.எஸ்., தேர்விலும் கூட இது சாத்தியம். மனைவியிடம் இது சாத்தியம் இல்லை. அப்படியானால் என்ன தான் வழி?
முதல்கட்டமாக, 'பாஸ் மார்க்' வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
பெண்களின் மகிழ்ச்சி என்பது, வருமானத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது இல்லை. வருமானத்தில் கவனம் செலுத்தி, குடும்பத்தில் கவனம் செலுத்தாமல் வாழ்வது மகிழ்வை பறித்து விடும்.
குறைந்த வருமானத்தில், மகிழ்ச்சியோடு வாழ்கிற குடும்பங்கள் நிறைய! நிறைந்த வருமானத்தில், குடும்ப மகிழ்ச்சியை தொலைத்தவர் அதைவிட அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
லேனா தமிழ்வாணன்

