
'அடிமை, பொண்டாட்டிதாசன், பொம்பளை, மதுரை' என்று, கீர்த்திவாசனுக்கு பல பெயர்கள் உண்டு.
ஆனாலும், அதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்பட்டதோ, கோபப்பட்டதோ இல்லை. மாறாக, புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வார்.
ஐம்பது வயதை நெருங்கும் கீர்த்திவாசனுக்கு ஒரே மகன் ரகு; இப்போது தான் பி.இ., முடித்து, வேலையில் சேர்ந்திருக்கிறான்.
அதற்குள் பெண்ணை பெற்றோர் பலர், அவரையும், அவர் மனைவி மீனாட்சியையும் மொய்க்கத் துவங்கி விட்டனர்.
நகரில் பெரிய வீடு, பிக்கல் இல்லாத குடும்பம், படிப்பு, வேலை, நல்ல தோற்றம் என்று எந்தக் குறையும் இல்லாத மாப்பிள்ளை; யாருக்கு கசக்கும்!
''என்னங்க... காலாகாலத்துல பையனுக்கு கால்கட்டு போடறது நல்லதுன்னு படுது,'' என்றாள், மீனாட்சி.
''கரெக்ட்; நீ முடிவெடுத்தா சரி. ரகு கிட்ட பேசுறேன்; நீயும் பேசு,'' என்று வழக்கம் போல் ஆமோதித்தார், கீர்த்திவாசன்.
மாலையில், ரகுவிடம் இதைப்பற்றி பேசிய போது, ''அப்பா... கொஞ்ச வருஷம் பேச்சிலர் லைப் என்ஜாய் பண்றேனே...'' என்றான் ரகு.
''எனக்கு உன் அம்மா முடிவு ரொம்ப முக்கியம்; அதேமாதிரி உனக்கும் இருக்கணும். இந்த குடும்பத்தின் ஆணி வேர் அவ தான்,'' என்றார்.
அப்பாவின் பதில், ரகுவிற்கு வெறுப்பை தந்தது.
''ஏம்ப்பா... உங்களுக்குன்னு எந்த விருப்பமும் கிடையாதா... இப்படி அம்மாவுக்கு ஜால்ரா போட்டு வாழ்றது போரடிக்கல?'' என்றான் கிண்டலாக!
சிரித்தார் கீர்த்திவாசன்.
''ரகு... நம்ம வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. எனக்குன்னு வாழ்க்கையில ஒரே ஒரு ஆசை தான் இருக்கு. அது, முடிஞ்ச வரைக்கும் நேர்மையா வாழணும். அதுக்காக எவ்வளவு வேணும்ன்னாலும் விட்டுக் கொடுப்பேன். அதுல உங்கம்மாவோட, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கிட்டு போறதும் ஒண்ணு!'' என்றார்.
அப்பாவின் பதிலில், ரகுவிற்கு திருப்தி ஏற்படவில்லை; அம்மாவோ பிடிவாதக்காரி.
''ரகு... உன் ஆசைப்படி ஆறு மாசம் பேச்சிலரா இரு; வர்ற தை மாசம் நம்ம வீட்டுக்கு மருமக வந்தாகணும்,'' என்றாள், கறாராக மீனாட்சி.
ஞாயிற்றுக் கிழமை -
அண்ணன் வீட்டிற்கு வந்திருந்த சாவித்திரி, வந்ததும், வராததுமாக, ''அண்ணே... உன் மருமகள நினச்சா பயமா இருக்கு... என்ன தான் வேலைன்னாலும் ராத்திரி, 8:00 மணி, 10:00 மணின்னு வீட்டுக்கு வர்றா; சரியா சாப்பிடறதில்ல. சொன்னா கோபப்படறா; எனக்கு தெரியாதாங்கறா. ஆம்பள இல்லாத குடும்பம்; எப்படி அடக்கறதுன்னு தெரியல. காலா காலத்துல அவள ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்தாத்தான் நிம்மதி. எனக்கு வேற யாருண்ணே இருக்காங்க. நீங்க தான் முன்ன நின்னு செய்யணும்,'' என்றாள்.
கீர்த்திவாசனும், அவன் தங்கையும் அவர்கள் வீட்டிற்கு ஆசைக்கும், ஆஸ்திக்குமாக பிறந்தவர்கள். அப்பாவின் தவறான பழக்கத்தால், சாவித்திரிக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையவில்லை. விளைவு, ஒரு பெண் குழந்தையை தந்து விட்டு அவள் கணவன் மறைய, சாவித்திரியின் வாழ்க்கை சங்கடமாகவே ஓடியது.
கீர்த்திவாசனின் பெற்றோரும் மறைந்த பின், மகளுடன் தனி வாழ்க்கை வாழத் துவங்கினாள் சாவித்திரி. வேலைக்கும் சென்றாள். அதனால், தங்கையிடம், 'உன் பொண்ணோட வாழ்க்கைக்கு நான் பொறுப்பு...' என்று வாக்குறுதி அளித்திருந்தார், கீர்த்திவாசன்.
சாவித்திரியின் மகள் நல்ல அழகு; ஓரளவு படிக்கவும் செய்தாள். இப்போது, ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இயல்பாகவே கொஞ்சம் பிடிவாதமும், கர்வமும் கொண்டவள். அது, அவள் அப்பாவின் ஜீன்.
சாவித்திரியின் கவலையில் நியாயமிருப்பதை உணர்ந்த கீர்த்திவாசன், மீனாட்சியை பார்த்தார்.
'கொஞ்சம் உள்ள வாங்க...' என கண்ணால் சைகை செய்தாள், மீனாட்சி.
''கொஞ்சம் இரு...'' தங்கையிடம் சொல்லி, உள்ளே சென்றார்.
''இப்ப உங்க தங்கச்சிக்கு என்ன சொல்லப் போறீங்க... நம்ம பையனுக்கு கல்யாணம் செய்யலாம்ன்னு நெனச்சுட்டு இருக்கையில, இவ வந்து கண்ண கசக்கிட்டு நிக்கறா. பேசாம நான் சொல்றபடி சொல்லுங்க...'' என்றவள் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
''சொல்லு மீனாட்சி...'' என்றார் மெதுவாக!
''இன்னும் ஒரு வருஷம் போகட்டும்; அதுவரைக்கும் அமைதியா இருன்னு சொல்லுங்க,'' என்றாள் கட்டளை தொனியில்!
வெளியில் வந்த கீர்த்திவாசன், தங்கையிடம், ''சாவித்திரி... நீ எதுக்கும் கவலைப்படாத. வர்ற தையில உம்பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வருவா. நிம்மதியா வீட்டுக்கு போ,'' என்றார்.
ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒரு சேர, ''உண்மையாவா சொல்றீங்க?'' என்று கேட்டாள், சாவித்திரி.
''பின்ன பொய்யா சொல்றேன்; இது எப்பவோ முடிவு செஞ்சது. அதோட இது என்னோட கடமை... எதுக்கும் உன் மகள ஒரு வார்த்தை கேட்டுக்க...'' என்றார்.
கணவன் பேசியதைக் கேட்டு அணுகுண்டு தாக்கியதைப் போல் நிலை குலைந்தாள் மீனாட்சி.
'என்ன இந்த மனுஷன்... கல்யாணமானது முதல் பெட்டிப் பாம்பாக கிடந்தவர்; மிக முக்கியமான நேரத்தில என் சொல்லை மீறி இப்படி ஒரு உறுதி தர்றாரே... அதுவும் என் முன்னாடி...' என்று நினைத்தவள், அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றாள்.
தங்கை சந்தோஷமாக விடை பெற்று சென்றதும், மனைவியின் ரியாக் ஷனை எதிர் கொள்ள தயாரானார், கீர்த்திவாசன். அதே நேரம் ரகுவும் வர, விஷயத்தை கேட்டு அவனும் திகைத்து நின்றான்.
''என்னாச்சு உங்களுக்கு... நான் உள்ளே அவ்வளவு சொல்லியும், இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கீங்க... இதுக்கு ரகு சம்மதிக்க வேணாமா... ஏன் இப்படி சொன்னீங்க?'' என்று, பட படவென்று கேள்விகளை அடுக்கினாள் மீனாட்சி.
உடனே, ரகு, ''அப்பா... இது, 21ம் நூற்றாண்டு; நாங்க, உங்கள மாதிரி இல்ல; தந்தை சொல் மந்திரம்ன்னு கண்ண மூடி நம்ப. எப்படி நீங்களா ஒரு பொண்ண எனக்கு முடிவு பண்ணுவீங்க?''என்றான், கோபத்துடன்!
இருவரையும் சிறிது நேரம் அமைதியாக பார்த்த கீர்த்திவாசன், மனைவியின் பக்கம் திரும்பி, ''இதோ பார் மீனாட்சி... இந்த விஷயத்துல எனக்கு நீ சம்மதம் சொல்லித் தான் ஆகணும்,'' என்றார், கண்டிப்பாக!
அவள் ஏன் என்பது போல் முழிக்கவும், ''புரியல... நமக்கு கல்யாணமான புதுசுல நாம ஒரு ஒப்பந்தம் போட்டோமே ஞாபகமிருக்கா... இனிமேல் வாழ்க்கையில எல்லா விஷயத்துலயும் நீ சொல்றபடி நான் நடப்பேன்னும் ஆனா, ஒரே ஒரு விஷயத்துல மட்டும், நீ, எனக்கு ஒத்துழைப்பு தரணும்ன்னு பேசி நீயும், நானும் சத்தியம் செஞ்சுகிட்டமே மறந்து போயிருச்சா... நான் செய்த சத்தியப்படி இது நாள் வரைக்கும் உனக்கு நான் எதுலயும், 'நோ' சொன்னதில்ல; அதுமாதிரி நீயும், உன் சத்தியத்த காப்பா௦ற்றணும். இல்ல... சத்தியம் சக்கர பொங்கல்ன்னு நீ நெனச்சா, இனிமே உன் தாசனா நான் இருக்க மாட்டேன்; நான், என் ஆதிக்கத்த காட்ட ஆரம்பிப்பேன். நல்லா யோசி; அப்புறமா உன் முடிவ சொல்லு,'' என்றார் உறுதியான குரலில்!
இதைக் கேட்டதும் மிரண்டாள் மீனாட்சி. 'இவர் சொல்வது உண்மை தான். இதுவரை என் பேச்சை மறு பேச்சின்றி கேட்டு நடந்தவர், இப்போது தன் பங்கை கேக்கிறார். வேறு வழியில்ல; சத்தியத்திற்கு கட்டுப்பட வேண்டியது தான்....' என நினைத்தபடியே, '' உங்க இஷ்டம்,'' என்று சொல்லி, அறைக்குள் சென்றாள்.
தன் பெற்றோர் பேசுவது புரியாமல் மலங்க மலங்க விழித்த ரகுவிடம், ''ரகு... நீ சொன்னது மாதிரி காலம் வேணா மாறலாம்; ஆனா, அன்பு, பாசம், கடமை, நல்லது, கெட்டது, பசி, தூக்கம் இதெல்லாம் மாறாது. நான் சொல்றத முழுசா கேளு... எங்கப்பா, தான் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில, கடன் கொடுத்தவரோட குடிகார மகனுக்கு, தெரிஞ்சே என் தங்கைய கல்யாணம் செய்து கொடுத்து, கணவனை திருத்தட்டும்ன்னு வியாக்கியானம் பேசினாரு. குடிகார புருஷனோட சரியா வாழாம, கொஞ்ச நாள் பிரிஞ்சுருந்தா என் தங்கச்சி. அப்புறம், ஊர் உலகத்துக்கு பயந்து, நாங்க பக்க பலமா இருப்போம்ன்னு நம்பி வாழ ஆரம்பிச்சா. ஒரு கட்டத்துல கணவன், அப்பா, அம்மான்னு எல்லாரும் இறந்து போன நிலையில, ஒத்தப் பொம்பளப் பிள்ளைய வச்சுக்கிட்டு இருக்கிற அவளுக்கு, இப்ப உறவுன்னு சொல்லிக்க அண்ணன்காரன் நான் ஒருத்தன் தான் இருக்கேன். அப்பாவோட பாவ, புண்ணியங்கள்ல மகனுக்கும் பங்கு உண்டுன்னு நம்பறவன் நான்.
''எங்கப்பா செஞ்ச பாவம் சாவித்திரியோட கல்யாணம்; அதுக்கு மகன்கிற முறையில நான் பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறேன். அதுக்கு ஒரே வழி, சாவித்திரி வாழ்க்கையோட ஒரே எதிர்காலமான அவ மகள கடைசி வரை நல்லா பாத்துக்குறது தான். அதனால தான், அவ என் மருமகள்ன்னு தீர்மானிச்சுட்டேன். தங்கைக்காக நான் ஆதங்கப்படறது, ஒரே பையனான உனக்கு புரியறது கஷ்டம். உறவுகள் குறைஞ்சுகிட்டு வர்ற காலம் இது.
''என்னை மாதிரியே நீயும் நினைச்சா, என் பிராயச்சித்தத்துல பங்கெடுத்து, உன் அத்தை மகளை மனைவியா ஏத்துக்க. இல்ல, அப்பாங்கறது சாதாரண உறவு; அவரோட கடமை, குறிக்கோள், ஆசை, இதுல மகனுக்கு சம்பந்தம் கிடையாது. பெத்தவங்க வளர்த்துத் தான் ஆகணும். எல்லாத்தையும் விட தனி மனித சுதந்திரம் தான் முக்கியம்; இந்த குடும்ப சென்டிமென்ட் எல்லாம் முட்டாள்தனம்ன்னு நீ நெனச்சா, தாராளமா உன் விருப்பப்படி யாரை வேணும்ன்னாலும் கல்யாணம் செஞ்சுக்க,'' என்றார் உறுதியான குரலில்!
இதுவரை எல்லாவற்றிற்கும் ஆமா சாமி போடும் தன் அப்பா, இன்று தன் கருத்தில் உறுதியோடு பேசியதைக் கேட்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பின், ''அப்பா... நான் உங்க பிள்ளை,'' என்றான் கனிவுடன்!
மகனின் வார்த்தையைக் கேட்ட கீர்த்திவாசனின் கண்களில், ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவது சிறந்தது என்றால், மற்றவர்களுக்காகவும் பிராயச்சித்தம் தேடுவது தெய்வீக பண்பு. அதை, தன் மகன் உணர்ந்து கொண்டதில், மிகவும் பெருமை அடைந்தார், கீர்த்திவாசன்.
கீதா சீனிவாசன்

