
எஸ்.விஷ்வா, விழுப்புரம்: 'இவன் வாழத் தெரிந்தவன்' என்று யாரை குறிப்பிடலாம்?
தன்னைப் பற்றி, பிறர் தவறாக, அவதூறாக பேசும் போதும், சொல்லும் போதும், அதை சாதாரணமாக சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறவன், கேட்டுக் கொள்கிறவனைச் சொல்லலாம்!
ஆர்.பொன்வண்ணன், மடிப்பாக்கம்: கால் பார்த்து நடக்கும் பெண்கள் இன்னும் இருக்கின்றனரா?
சுற்றும் முற்றும் பார்த்து நடந்தாலே செயினை பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர்; இடி ராஜாக்கள், இடித்து தள்ளுகின்றனர். இத்தனையும் நடக்கும் போது, இப்படி ஒரு கேள்வி தேவையா?
எஸ்.ஆர்.வசந்தகுமார், திருவந்திபுரம்: அதிகமான படிப்பு, ஒருவனை கர்வப்பட வைக்குமா, அமைதியானவனாக மாற்றுமா?
கல்வியின் குணமே அறிவை தருவது தான்; அதைப் பெற்றவன் அமைதியானவனாக, சாந்த குணம் கொண்டவனாக, பொறுமைசாலியாக மாறி விடுகிறான். 'பிட்' கிராக்கிகளும், அரைகுறை படிப்பாளிகளும் எத்தனை பட்டம் வாங்கினாலும், மேற்சொன்ன குணங்கள், பண்புகள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்!
பி.ஆரோக்கியராஜ், திருப்பூர்: மனம் குழப்பத்தில் இருக்கும் போது என்ன செய்வீர்கள்?
பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து, பிடித்த இசையை கேட்டபடி சைக்கிளை மிதித்து, நீண்ட தூரம் செல்வேன். குழப்பம் தன்னால் மறந்து போகும்; தெளிவு கிடைக்கும். பேனாவும், பேப்பரும் எடுத்து, குழப்பத்திற்கான காரணத்தை எழுதி, எது, எதுக்கு முன்னிலை எனக் குறித்து வைத்துக் கொள்வேன். மனபாரம் இறங்கி விடும்!
கொ.மணியன், காளப்பட்டி: தன்னம்பிக்கை வேண்டுவோருக்கு நீங்கள் கூற விரும்பும் உதாரண மனிதர் யார்?
பெரிய பெரிய மனிதர்கள் பக்கமெல்லாம் போக வேண்டாம். வீட்டு வேலை செய்யும் அஞ்சலை, காய்கறி விற்கும் குப்பம்மா, ஆப்பக்கடை அலமேலு இவர்கள் போதாதா... வீட்டு செலவுக்கு பைசா தராத, 'குவார்ட்டர்' கிராக்கி கணவர்களை சமாளித்து, எவ்வளவு தன்னம்பிக்கையுடன் குடும்பம் நடத்துகின்றனர்!
ஜி.பாலகுமாரன், அருப்புக்கோட்டை: மற்றவர்களை கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரே வேலை தான் செய்ய வேண்டும். அது, முகஸ்துதி! இன்றைய உலகில் முகஸ்துதிக்கு மயங்காத மனிதன் உண்டோ? 'ஆஹா... உங்களைப் போல உண்டா, உங்கள் அறிவு கூர்மையை எப்படி பாராட்டுவது, உங்கள் தயாள சிந்தனையை எப்படி மெச்சுவது...' என அவிழ்த்து விடுங்கள். மற்றவர்களை சுலபமாக கவர்ந்து விடலாம்!
ம.நாகராஜன், காஞ்சிபுரம்: குறைகளை சுட்டி காட்டுவதால், நட்பை இழக்க நேரிடும் நிலை வந்தால், என்ன செய்வது?
இழப்பு நல்லதற்கு தான். புகழ் பாட மட்டும் அல்லவே நட்பு: குறை இருப்பின் அதையும் எடுத்துச் சொல்லி, நல்வழிப்படுத்துவது தான் நட்பு. இதை விரும்பாதவர் சினேகம் வேண்டவே வேண்டாம்!
க.சந்தியா, மேலக்கன்னிச்சேரி: சுய சம்பாத்தியத்தில், தனியாக தன் காலில் நிற்கும் பெண்களை இகழ்ச்சியாக பேசுகின்றனரே சிலர்...
தன் காலில் நிற்கிறாளே என்ற வயிற்று எரிச்சல், ஆற்றாமை தான் காரணம். பெண்கள் எல்லா கட்டத்திலும் ஏதாவது ஒரு ஆண் மகனை (அப்பா, கணவன், மகன்) சார்ந்து இருந்தால், இகழாது; ஆனால், சுயமாக சம்பாதித்து, 'இண்டிபெண்டன்ட்' ஆக, தன் பாட்டை பார்த்துக் கொண்டால் பொறுக்காது!
சி.செய்யது அலி பாத்திமா, அம்மாபாளையம்: யார் பொய் பேசக் கூடாது?
சாமர்த்தியம் இல்லாதவர்கள்; இவர்கள் பொய் பேசினால், மானம் போய் விடும். சாமர்த்தியம் இல்லாதவர்கள் எப்போதும் உண்மையே பேசி விடுவது நல்லது!

