sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீட்டில் மரியாதை இல்லையா?

/

வீட்டில் மரியாதை இல்லையா?

வீட்டில் மரியாதை இல்லையா?

வீட்டில் மரியாதை இல்லையா?


PUBLISHED ON : மே 29, 2016

Google News

PUBLISHED ON : மே 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்ல எலி; வெளியில புலி என்று, ஒரு தமிழ்ப் படம் வெளி வந்ததே, நினைவில் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் கதை இதுதான்!

'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர்.

தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... அதை, இங்கே எழுத யோசனையாக இருக்கிறது.

'இப்பத்தான் கொட்டிக்கிட்டு, எங்கோ போயிருக்கு...' என்பது, அவர் கூறியதன் நாகரிக (?) வடிவம்!

பல வீடுகளில் இப்படித்தான்... வெளி உலகம் போற்றும்; துதிபாடும்; தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்; ஆனால், வீட்டில் சரியான மரியாதை இராது.

புகழ் மிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்களை விடுங்கள். பல குடும்பத் தலைவர்களுக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும் கூட வீட்டில் மரியாதை தரப்படுவது இல்லை.

'நான்கு பேர்களுடன், இன்று இரவு சாப்பிட வருகிறேன்; விருந்து பலமாக இருக்கட்டும்...' என்றார் ஒருவர்.

'ஆகட்டுங்க; அழைச்சிட்டு வாங்க...' என்று வந்தது பதில்.

'சாரி... ராங் நம்பர்...' என்று, உடனே போனை வைத்து விட்டார். காரணம், இவரது வீடாக இருந்திருந்தால், என்ன பதில் (எதிர்ப்புக்குரல்) வந்திருக்கும் என்பது, இவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

'என் கண்ணாடி எங்கே எடுத்துக் கொடு...' என்றால், 'எங்கே வச்சீங்க... நீங்களே தேடி எடுத்துக்குங்க...' என்பது, பலர் வீடுகளில் நடக்கும் உரையாடல்!

நான் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு தமிழர் வீட்டில், வீட்டிற்குரியவர், தன் மனைவியிடம், பரிதாபக் குரலில், 'வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் போதாவது, கொஞ்சம் கத்தாமல் பேசு; மானம் போகுது...' என்று கூறினார்.

ஒரு தமிழக பெண் சட்டசபை உறுப்பினர், பொது இடங்களில் கணவரை நடத்தும் விதம் அபாரம். வீட்டிற்குள் நுழைந்ததும் பார்க்க வேண்டுமே... பாவம் அந்த மனுஷன்!

அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'

எந்த வீட்டில், விருந்தினருக்கு இப்படிப்பட்ட மரியாதை தொடர்கிறது? பெரும்பாலும் இல்லை.

விருந்தினருக்கு முதல் நாள் அருகிலிருந்து உணவு பரிமாறுவார் நண்பரின் மனைவி. மூன்று, நான்கு தினங்கள் சென்றதும், 'மேஜையில் எல்லாமே வச்சிருக்கேன்; நீங்களே வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்பிடுங்க...' என்பார்.

விருந்தினர்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல மரியாதை குறைகிற போது, கூடவே வாழ்கிறவர்கள், எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

'பழகி விட்ட உரிமை' என்று ஒன்று உண்டு. இதுதான், பலர் விஷயங்களில், மரியாதையானது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகக் காரணம்!

ஆண்கள் செய்யும் தவறுகள், அவர்களைப் பற்றி தேங்கிப் போன மன வருத்தங்கள், இழைக்கும் குற்றங்கள், அநீதிகள் மற்றும் இழைத்த கொடுமைகளே மரியாதை கெட காரணம். வீட்டிலிருப்போர் பணம், புகழ் மற்றும் பொதுவாழ்வில் உள்ள அங்கீகாரம் ஆகிய முகமூடிகளையெல்லாம் மானசீகமாகக் கழற்றி விட்டே, தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்க்கின்றனர்; வெளிநபர்கள் அப்படி அல்ல, நடமாடும் கஜானாவாக, புகழ் ஒளி நட்சத்திரமாக பார்க்கின்றனர். மரியாதை வேறுபட, இதுவே காரணம்!

வீட்டினர், வெளிப்பார்வையிலிருந்து மாறு பட்டு பார்ப்பதை, குறையாகச் சொல்லி விட முடியாது; ஒரு மகத்தான உண்மை என்ன தெரியுமா?

நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே நடத்தப்படுகிறோம். நாம் சுமாராக நடத்தப்படுவதை, நாமே ஏற்று, இதனினும் கீழாக இறங்கிப் போய் நடந்து கொள்கிறோம். இதனால் தான், மரியாதை என்பது மேலும் குறைகிறது.

வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us