sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்...

/

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்...


PUBLISHED ON : மே 29, 2016

Google News

PUBLISHED ON : மே 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதன் முதலில் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் போது எம்மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போமா...

நம்முடைய குழந்தை பள்ளிக்கு செல்லப் போகிறது என்பது நமக்கு வேண்டுமானால், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுவரை வீட்டுக்குள்ளேயே வளைய வந்த குழந்தைக்கு, பள்ளி என்பது சிறிது காலத்துக்கு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே தோன்றும். பெற்றோரை விட்டு பிரிந்து, புது இடத்தில், சில மணி நேரங்களுக்கு இருப்பது என்பதை, அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

பழகிய வீட்டை விட்டு, புது வீட்டுக்கு குடிபோகும் போது, நமக்குள் ஒருவித அசவுகர்யமான உணர்வு ஏற்படுமே... அதுபோலத்தான் குழந்தைகளுக்கும் இருக்கும். இது போதாது என்று, 'நீ இப்படி சேட்டை செய்தா ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன்; அங்க மிஸ் உன்னை அடிச்சு, சாப்பிட வைப்பாங்க...' என்று நாம் பள்ளியைப் பற்றி பேச, அவர்களுக்கு இனம் புரியாத பதற்றம் ஏற்படுவதுடன், அங்கே திட்டி, அடிப்பர் என்று நினைத்து, பள்ளியின் மீது ஒரு வித வெறுப்பை உமிழ ஆரம்பித்து விடுவர்.

அதனால், பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும்.

'நீ விரும்புற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்க இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே...' என்கிற ரீதியில் பேச வேண்டும்.

'அம்மா சொல்லும் எந்த ஒரு விஷயமும், உண்மையாகத்தான் இருக்கும்...' என்று இந்த வயது குழந்தைகள் நினைப்பர். அத்துடன், 'ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்?' என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கும். இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை, குழந்தைக்கு புரியும் வகையில் தெளிவாக சொல்லுங்கள்.

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு, நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால், குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது, அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

மேலும், குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்கு சில நாட்களுக்கு முன், 'நீ இப்போ க்ளாசுக்கு போவியாம்; ஜாலியா படிப்பியாம்; ஸ்நாக்ஸ் சாப்பிடுவியாம்; ஸ்கூல் முடிஞ்சதும், உன்னை அம்மா கூட்டிட்டு போவேனாம்...' என்று தெளிவாக பேசுங்கள். 'ஓஹோ... ஸ்கூல் என்றால், இதுதான் போல, இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும் போல...' என்று, குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்து விடும்.

புதிதாக பள்ளிக்கு செல்லும் போது, சில குழந்தைகள் அழுது கொண்டே இருப்பர். அப்படிப்பட்ட குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பும் போது, குழந்தை நெருக்கமாக உணரும் சிலவற்றை கொடுத்து அனுப்பலாம். உதாரணத்துக்கு, குழந்தை தன் குடும்பத்தோடு சிரித்தபடி இருக்கும் புகைப்படங்களை கொடுத்து அனுப்பலாம். புது சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தை, இதுபோன்ற புகைப்படங்கள் நிச்சயம் கொடுக்கும்.

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது, அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள். ஆனால், 'குட்பை' சொன்ன பின், குழந்தையிடமே நின்று கொண்டு இருக்காமல் பள்ளியை விட்டு வந்து விடுங்கள். அப்போது தான், குழந்தை புது சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்ளும். அதனால், சில விஷயங்களை அவர்களே, 'ஹேண்டில்' செய்ய தேவையான இடைவெளியை, சிறிது கொடுத்து தான் பார்ப்போமே!






      Dinamalar
      Follow us