
ஏ.ஆனந்தகுமார், குமுளி: பகல் கொள்ளையாக பணம் பிடுங்கினாலும், ஆங்கில மீடியத்தை மக்கள் நாடக் காரணம் என்ன?
போட்டி அதிகமாகிப் போன இக்காலத்தில், இந்தி படிக்கவும் வழி இல்லை. தமிழ் மட்டுமே படித்த தம் சந்ததியினருக்கு எதிர்காலம் இல்லை என உணர ஆரம்பித்துள்ளனர் பெற்றோர். தமிழ் மொழியிலேயே பிளஸ் 2 வரை முடித்தவர்களால், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள பாடங்களை சிரமம் இல்லாமல் படிக்க முடியாத நிலை அல்லவா உள்ளது நம் நாட்டில்!
எம்.அன்பரசன், வீரபாண்டி: இன்டர்நெட்டில் ஒரு வார இதழை படிக்க இன்டர்நெட் மையத்திற்கு பணம் கட்டுகிறோம். இதனால், இதழ் வெளியிடும் நிறுவனத்துக்கு என்ன பலன் உள்ளது?
விளம்பர வருமானம் தான்! 'ஹிட் ரேட்'டை பொறுத்து, எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை பொறுத்து விளம்பரங்கள் கிடைக்கும்!
க.நாகேந்திரன், திருவான்மியூர்: இன்றைய மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்து விட்டதே... அதை எப்படி வளர்ப்பது?
ரொம்ப சிம்பிள்... ஒரு சட்டம் மட்டும் இதற்கு கொண்டு வர வேண்டும். ஒழுக்கம் குறைந்த மாணவன், ஒன்பதாம் வகுப்பில் இருந்தால், அடுத்த ஆண்டு எட்டாம் வகுப்பிற்கு தள்ளி விட வேண்டும். இப்படி செய்யும் அதிகாரமிருந்தால், மாணவர்கள் தங்கக் கம்பியாகி விடுவர்.
எம்.எஸ்.மயில்வாகனன், தேனி: தனக்கு வரப் போகும் மனைவியிடம், இன்றைய இளைஞன் எதை அதிகம் எதிர்பார்க்கிறான்?
'டப்பு' தான்; அறிவு, படிப்பு, குணம், அழகு எல்லாவற்றையும் விட நோட்டுக் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையுமே அதிகம் எதிர்பார்க்கிறான்.
மு.ஜெபராஜ், மந்தைவெளி: மும்பையைப் போல வேறு எந்த மெட்ரோ பாலிட்டன் சிட்டியில் வந்தேறியவர்கள் அதிகம்?
இந்தியாவில் வேறு எந்தப் பெரு நகரிலும், மும்பையைப் போல, வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் கிடையாது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், மும்பையில் இருந்த ஜனத் தொகையை விட, இப்போது உள்ள ஜனத்தொகை பல மடங்கு அதிகம்.
இ.எஸ்.ஜமால், வேலாண்டிபாளையம்: இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள், சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விடுகின்றனராமே... வாடகை எவ்வளவு இருக்கும்?
ஆறு சீட் உள்ள குட்டி விமானத்தில் பயணிக்க, ஒரு மணி நேரத்திற்கு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் வாடகைக்கு எடுக்க வேண்டும். இது போக, விமான நிலையத்தில் தரை இறங்க, ஏற, பார்க்கிங் கட்டணம் தனி. விமானிகள், பணியாளர்கள் நான்கு பேருக்கு தலைக்கு, 15 ஆயிரம் ரூபாய்... என்ன ஜாலியா ஒரு ரவுண்டு போய் வருவோமா?
டி.அப்துல்காதர், கம்பம்: இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே...
ஆணுக்கு ஈடாக பேசினால், பதிலளித்தால், 'மதிக்கவில்லை' என்று சொல்லி விடுவீர்களே... கண் தெரியாத, காது கேட்காத, வாய் பேசாத மண் புழுவாக, அடிமைகளாக பெண்கள் இருக்க வேண்டும் என்பது தானே பெரும்பாலான ஆண்களின் விருப்பம்!

