sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சியில் ஒரு அவசர வேலை; முடித்து விட்டு, மாலையில் ஓட்டல் திரும்பும் போது, புது பஸ் ஸ்டாண்ட் வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார், லென்ஸ் மாமா. அங்கே, அவரது மலையாள நண்பர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்; அவரிடம் தான் வெண்குழல் வத்தி வாங்குவார். சிறிதுநேரம் ஊர்க் கதை பேசுவார்; மாமாவின் நீண்ட கால நண்பர் அவர். பஸ் ஸ்டாண்ட் திறந்த போதிலிருந்தே கடை வைத்திருக்கிறாராம்.

'ஒரு எட்டு மணி போல ரூமுக்கு வாங்க பாய்... 'நீராகாரம்' முடித்து, எங்களுடனேயே டின்னர் சாப்பிடலாம்...' என, அழைத்தார் மாமா.

அழைப்பை ஏற்று, ரூமுக்கு வந்தார் பாய். சம்பிரதாயப் பேச்சுகளுடன், 'நீராகாரம்' ரெடி செய்து பாய்க்கும் கொடுத்து, தானும் எடுத்துக் கொண்டார் மாமா.

பாயிடம் இருந்து ஏதாவது தகவல் திரட்ட வேண்டும் என்ற முடிவில், 'பல வருஷங்களா திருச்சியில் இருப்பதாகச் சொல்றீங்களே... புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களில் யாரையாவது தெரியுமா? சமஸ்தானம் பற்றி சுவையான செய்தி ஏதாவது தெரிந்திருந்தால் கூறுங்களேன்...' என்றேன்.

'தெரியும்ப்பா... பேலசுல டிரைவரா இருந்த ஒருத்தர் என் பிரெண்டு தான்... பல விஷயங்களைச் சொல்லி இருக்காரு...' என்றவர், சற்று நிறுத்தி, சிக்கன் லெக் பீஸ் சைசில் இருந்த நன்னீர் இறா, 'ப்ரை'யைப் பதம் பார்த்தார்; பின்னர் தொடர்ந்தார்...

'திருச்சி மாவட்டத்துல ஒரு காலத்துல உப்பளம் இருந்ததுன்னு சொன்னா நம்புவாயா... ஆனா, இது உண்மை; கடல் இல்லாமலே உப்பு கிடைச்சதாம்.

'திருச்சி மாவட்ட தென்பகுதி தாலுகாக்களான திருமயம், ஆலங்குடி, கீரனூர் (குளத்தூர்) தாலுகாக்களை கொண்ட பகுதிகளுக்கு, 'புதுக்கோட்டை சமஸ்தானம்'ன்னு பெயர். 1948ம் ஆண்டுக்கு முன் இந்த சமஸ்தானம் தனி ராஜ்யமாக இருந்தது. கள்ளர் இனத்தைச் சேர்ந்த தொண்டமான் குலத் தமிழ் மன்னர்கள் இந்த சமஸ்தானத்தை ஆண்டு வந்தாங்க...

'இங்கு, பொட்டல் நிலங்கள் அதிகம்; வெயில் காலத்துல அந்தப் பொட்டல் நிலங்கள்ல உப்பு வெளிப்படும். உப்பு மண்ணை மேலாகச் சுரண்டி எடுத்து, பானையில் கொட்டி, தண்ணி ஊத்திக் கரைப்பாங்க... மண் கரைஞ்சு தண்ணி தெளிஞ்சதும், அந்தத் தண்ணிய இறுத்து, மண்பானையில் ஊத்தி அடுப்பிலேத்தி தீயிட்டுக் காய்ச்சுவாங்க; தண்ணி சுண்டியதும் உப்பு வரும்.

'இப்படிக் காய்ச்சி எடுத்த உப்பை பொட்டல் நிலத்தில் அம்பாரமாக கொட்டி, அதிகாரிங்க மேற்பார்வையில விற்பனை செய்வாங்க. வெளி மாவட்ட வியாபாரிங்க போட்டியிட்டு இந்த உப்பை வாங்குவாங்களாம்... இதுக்கு, 'காய்ச்சிய உப்பு'ன்னு பேரு...

'இந்த உப்பு வெள்ளையாவும், அதிக கரிப்புடன், மிருதுவாகவும் இருக்குமாம்... கடலுப்பை விட மக்கள் இந்த உப்பை அதிகமாக விரும்பினாங்களாம்.

'காய்ச்சிய உப்புக்கு மதிப்பு உயர உயர கடலுப்பு விற்பனை பாதிக்கப்பட்டு, உப்பு வரி மூலம் வெள்ளையராட்சிக்குக் கிடைச்ச வருமானம் குறைய ஆரம்பிச்சதாம். எனவே, புதுக்கோட்டை உப்பிற்கு தடை விதித்து, தடுத்ததாம் வெள்ளையர் ஆட்சி.

'தடையும், தடுப்பும் பயன்பட வில்லையாம். இறுதியில் புதுக்கோட்டை ராஜாவோட பேரம் பேசி, உப்பளம் நடத்துவதால் கிடைக்கும் லாபத்தை அவருக்கு கொடுத்து விடுவதாக வாக்களித்து, 'காய்ச்சு' உப்பளங்களை மூடும்படி செய்துட்டார்களாம்... இது நடந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பாம்...' என, அதிசயச் செய்தி ஒன்றைக் கூறினார்.

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்...' என்பதன் பொருளை, பெட்டிக்கடை பாய் மூலம் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

அன்று, பொ.ஆ.,வைச் சந்திக்க, குப்பண்ணா, நடுத்தெரு நாராயணன் போன்றோர் காத்திருந்தனர். இவர்களுக்கு காபி கொடுத்து, அவர்கள் பேச்சில் கலந்து கொண்டேன்.

'என் வீட்டுல கசகசன்னு ஒரே கூட்டமா போச்சு... இவ்ளோ புஸ்தகங்களை கட்டிக்கிட்டு நான் தொல்லை கொடுக்கிறதா என் மருமக, மறைமுகமா என் லைப்ரரிய இடிச்சுக் காட்டுறா. எனக்கும் புரியுது; வீட்டுல இடம் பத்தலன்னு... என்ன செய்றதுன்னே தெரியலே...' என, அலுத்துக் கொண்டார், நடுத்தெரு நாராயணன்.

'அதுதான் உம் பேருலேயே நடுத்தெரு ஒட்டிக் கிட்டு இருக்கே... அங்கே போயிட வேண்டியது தானே...' என, நக்கலாகக் கூறிய குப்பண்ணா, 'ஒரு கதை சொல்றேன் கேளும்...' என்றபடி ஆரம்பித்தார்...

'ஒரு ஏழை யூதர் இருந்தார்; அவர், தன் மத குருவிடம் சென்று, 'குருவே... வீட்டில் கூட்டம் தாங்க முடியலே... நான், என் சம்சாரம், ஐந்து குழந்தைங்க, என் தகப்பனார், தாயார் என ஒன்பது பேர் ஒரு சின்ன அறையில வசிக்கிறோம்...' என்றார்.

'அதற்கு மதகுரு, 'இவர்களோடு உன் ஆட்டையும் அந்த அறையிலேயே கட்டி வை...' என்று சொன்னார்.

'யூதருக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், மதகுருவின் வாக்காயிற்றே தட்ட முடியுமா... அதனால், ஆட்டையும் தன் அறையில் கட்டி வைத்தார்; அவதி மேலும் அதிகமானது.

'பத்து நாட்களாயிற்று... மீண்டும் மத குருவை காண வந்தார் யூதர். 'மதக் குருவே என் வீட்டில் வசிக்கவே முடியலை; தாங்கள் தான் ஏதாவது உபாயம் சொல்ல வேண்டும்...' என்று வேண்டினார்.

'உடனே மத குரு, 'ஆட்டை அவிழ்த்து விடு...' என்றார். அவ்வளவுதான்... வீட்டுக்குச் சென்று ஆட்டை அவிழ்த்து விட்டார் யூதர். அதன்பின் அவருக்கு ஏற்பட்ட இன்பத்தை அளவிட முடியவில்லை. 'ஆஹா... ஆடு போன பிறகு வாழ்க்கை எத்தனை இன்பமாக இருக்கு; குருவின் யோசனையே யோசனை...' என்று குருவைப் புகழ்ந்தார்...' என்று, முடித்தார் குப்பண்ணா.

மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை உணர முடிந்தது!

கிறிஸ்தவ போதகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. நீண்டநேரம் மத நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எல்லா மதத்திலும் உள்ள மதவெறியர்களை மனிதர்களாக்க வேண்டும். அதைச் செய்வது எப்படி என்று பேசிக் கொண்டிருந்தவர், 'சார்... மூதறிஞர் ராஜாஜிக்கு, கீதையில் எந்த அளவுக்கு பக்தியும், ஈடுபாடும் இருந்ததோ அதே அளவு பைபிளிலும் உண்டு...' என்றார்.

'ஆ'வென வாய் பார்த்த என்னிடம், மேலும் சொன்னார்... 'அவரது புத்தக அலமாரியில், அவர் போற்றிப் பாதுகாத்த நூல்களில் பைபிளும் இருந்தது.

'அவர் எழுதிய, 'உயிரைக் கொடுத்த திருமகன்' என்ற கட்டுரையில், 'நம் நாட்டில் கவுசல்யா தேவியின் வயிற்றில் ராமச்சந்திரனும், தேவகியின் வயிற்றில் கண்ணனும் தோன்றியவாறு, ஆசிய கண்டத்து மேற்கு கோடியில் வசித்து வந்த யூதர்களை மேலுயர்த்த, மேரி அம்மையின் குழந்தையாக இயேசு அவதரித்தார். செய்துவிட்ட பாவங்களை எண்ணி, வருந்தித் துயரப்பட்டு, பகவானை சரணடைந்தால், பாவங்கள் நீங்கும்; குற்றம் செய்தவர்களை மன்னித்து, இரக்கம் கொள்ள வேண்டும். இது, பகவான் இயேசுவின் உபதேசம்...' என்கிறார்.

'மேலும், 'மற்ற வழிகளில் பயனில்லை; நீயே கதி என்று என்னை சரணடைந்தால், எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்...' என்று கீதையின் இறுதியில் கண்ணன் வாக்குத் தந்ததும், இயேசுவின் உபதேசமும் ஒன்றே...' என்றும் எழுதியுள்ளார்.

'இன்னொரு ஆச்சரியமான விஷயம் கிறிஸ்துமஸ் தினத்தன்று ராஜாஜி உயிர் நீத்தார்...' என முடித்தார்.

உயர்ந்தவர்கள், என்றும் உயர்ந்தவர்கள் தான்!






      Dinamalar
      Follow us