PUBLISHED ON : ஜூலை 31, 2016

ஜெ.எஸ்.நந்தன், பொள்ளாச்சி: போலீஸ் என்றாலே, பொது மக்களிடம் வெறுப்பும், அவ நம்பிக்கையும் தோன்றியுள்ளதே... இந்நிலைக்கு காரணம் என்ன?
ஒழுக்கமும், நேர்மையின்மையும் அத்துறையில் பெருகி விட்டது. 'லைசென்ஸ்' பெற்ற ரவுடிகளாக அத்துறையினர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொள்வதால், ஏற்பட்ட நிலை இது!
பி.எத்திராஜ், ஸ்ரீபெரும்பத்தூர்: எதற்கெடுத்தாலும் சிலர் சிரித்து சிரித்து சமாளிக்கின்றனரே...
கெட்டிக்காரர்கள்.... சிரித்து சிரித்து சமாளிப்பதன் மூலம், அடுத்தவர் மனதை நோகடிக்க, புண்படுத்தும் அவசியம் ஏற்படுவதில்லை. அனாவசியமாக பொய் பேச வேண்டியதில்லை; விஷயங்களை பூசி மெழுகி விடலாம் பாருங்கள்!
எல்.குமரன், வீரபாண்டி: பெண்களைப் போல, ஆண்களும் சுய உதவி குழு அமைத்து பயன் பெறலாமே?
ஆண்கள் இணைந்து அமைத்த கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு தொழிற்கூடங்களின் இன்றைய நிலை என்ன? ஆண்களின், 'ஈகோ' அவர்களை சேர்ந்து செயல்பட விடாது. பெண்களுக்கோ, இயற்கையிலேயே விட்டுக் கொடுக்கும் சுபாவமும், இணைந்து செயல்படுவதில் கிடைக்கும், குடும்பப் பொருளாதார உயர்வில், தம் பங்களிப்பு தாராளமாக இருக்க வேண்டுமென்ற மனப்பான்மையும், தளராத உழைப்பும் இருப்பதால், அவர்களின் சுய உதவி குழுக்கள் ஜொலிக்கின்றன.
எஸ்.சாருலதா, குன்றத்தூர்: மனிதன் எப்படி வாழ வேண்டும்?
மனசாட்சி சொல்படி வாழ வேண்டும்; அதுவே, உண்மையான நீதிமன்றம். மனசாட்சியை மறைப்பவர்களிடம் நேர்மை, மகிழ்ச்சி இராது; பதற்றமும், பொய்யும், கோபமும், பகையும் அவர்களிடம் நிரந்தரமாக குடியேறிவிடும்.
பொ.தமிழமுதன், அனுப்பானடி: நம்மவர்கள் இன்று மகிழ்ச்சியை இழந்து, துன்பத்துடன் அல்லல்படுவது ஏன்?
போலி கவுரவம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையால் மகிழ்ச்சியை தொலைத்து, தலை குனிந்து நிற்கிறான். எளிய பழக்கங்களும், உடையும், கடன் வாங்காத குணம் மட்டுமே மகிழ்ச்சியை கொண்டு வரும்!
ஒய்.செல்லத்துரை, பல்லாவரம்: துன்பம் ஏன் பிறக்கிறது?
'அவன் நம்மை விட நல்லா இருக்கிறானே... இவன் செம வசதியில் வாழ்கிறானே...' என்று நினைக்க ஆரம்பிக்கும் போது பிறந்து விடுகிறது, துன்பம்!
எம்.பத்மநாபன், கடலூர்: விடலைப் பருவம் வரை, பெற்றோரை அண்டி இருக்கும் ஆண் பிள்ளைகள், மங்கை ஒருத்தியை கைப்பிடித்த பின், பெற்றோரை புறக்கணிக்கின்றனரே... இவர்களை திருத்துவது எப்படி?
ஏன் திருத்த வேண்டும்... இது, 'நேச்சுரல் பிராசஸ்!' இப்படியாக ஒரு நிகழ்விற்கு ஆரம்பம் முதலே பெற்றோர் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; காலம் மாறுகிறது.
