தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கொஞ்சம் நடிங்க பாஸ்!

கொஞ்சம் நடிங்க பாஸ்!

கொஞ்சம் நடிங்க பாஸ்!


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்முடன் உரையாடுவோர், நல்ல செய்திகளை, மகிழ்வுணர்ச்சியை, துன்பம் மற்றும் துயரத்தை பேச்சுவாக்கில் சொல்லும் போது, நம்மில் பலர், அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமலும், அந்த உணர்வுகளுக்கு ஏற்ப பிரதிபலிக்காமலும், 'செத்தவன் கையில், வெத்திலை, பாக்கு கொடுத்ததை போல' நடந்து கொள்வர்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா... 'யோவ்... உன் சந்தோஷம், துக்கமெல்லாம் எனக்கு முக்கியமில்ல; விஷயத்துக்கு வருவியா... சொந்த கதையெல்லாம் பேசிக்கிட்டு...' என்று சொல்லாமல் சொல்வதை போல் இருக்கிறது.

'பொண்ணு, 498 மார்க் சார்... ஸ்டேட் செகண்ட். பிளஸ் 1க்கு நல்ல பள்ளியில கூப்பிடுறாங்க; பீஸ் கூட வேணாம்ன்டாங்க; ஆனா, இவ படிச்ச பள்ளியில இவளை விட மாட்டேங்கிறாங்க. ஒரே குழப்பமா இருக்கு...' என்று ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதை, சாதாரண மனிதர் எப்படி கையாள்வார் என்று கூறுகிறேன்... 'சரி சரி... உம் பாடு; உன் மக பாடு. என்னை இன்னும் எத்தனை மாதம் தான் இழுத்தடிப்பே... வட்டியையாவது கட்டு, இல்லேன்னா அசிங்கப்படுத்திடுவேன்...'

இக்காட்சியில் நாம் சம்பந்தப்பட்டிருந்தால், இதை எப்படி கையாள வேண்டும் தெரியுமா... 'பிரமாதம் சார்... ரொம்ப சந்தோஷம்; பெருமைக்குரிய தந்தை நீங்கள். புள்ளையோட எதிர்காலம் தான் முக்கியம். பீசும் இல்லைங்கிறீங்க. நல்ல பள்ளின்னு வேற சொல்றீங்க; பேசாம பள்ளியை மாத்துங்க. உங்க மகளுக்கு என் வாழ்த்தை சொல்லுங்க; அப்படியே நம்ம விஷயத்தையும் கொஞ்சம் கவனிங்க. காலம் ஓடிக்கிட்டிருக்கே... சேர்ந்து போனா அப்புறம் மலைப்பாயிடும்ல...' இதுவே, வெற்றி தரும் அணுகு முறை.

மொபைல்போனின் மறுமுனையில் ஒருவர், 'நான் ஊர்ல இருக்கேன் சார்... தாத்தா இறந்துட்டாரு; இரண்டு நாள்ல வந்துருவேன். வந்து முடிச்சு தர்றேன்...'

மற்றவர், 'சும்மா ஏதாவது காரணத்தை சொல்லிக்கிட்டு இருக்க கூடாது... நல்லா இல்ல. தாத்தா செத்ததுக்கு ரெண்டு நாளா... சீக்கிரம் வந்து வேலையை முடிப்பியா...'

இதுவே நாம் எனில், 'அடடே ரொம்ப சாரி... என்ன வயது அவருக்கு... 83ஆ... அடடே, 83ல்லாம் ஒரு வயசே இல்லேயே (?) முடியாம இருந்தாரா... பெரியவங்க எவ்வளவு காலம் இருந்தாலும், நமக்கு அது பெரிய பலம். என்ன செய்யறது... நமக்கு குடுத்து வச்சது (!) அவ்வளவுதான். என் வேலையை பத்தி கவலைப்பட வேணாம்; வந்தபின், முடிச்சு தந்தா போதும்...'

'ஒரே தலைவலி முதலாளி... இருமல் வேற. காய்ச்சலடிக்கிற மாதிரி இருக்கு; நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு வந்துடுறேன்...'

'உடம்ப பார்த்துக்க... அதுதான் முக்கியம். வேலை நமக்கு எப்பவும் இருக்கும்; அத நாங்க பாத்துக்குறோம். டாக்டரை பாரு; மருந்து எடுத்துக்க. தானா சரியா போயிடும்ன்னு இருக்காதே...' இது நடிப்பு வசனம் என்றாலும், நன்கு எடுபடும்.

மாறாக, 'யோவ்... என்ன விளையாடுறியா... கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு...' என்பது மனதின் குரலாக இருக்கலாமே தவிர, அசல் குரலாகி விடக் கூடாது.

இங்கே நடிப்பு தான் எடுபடும்.

சிலர் இப்படி பட்டவர்த்தனமாக பேசாத போதும், போகிற போக்கில், ஓரிரு வார்த்தைகளில், தங்கள் துன்பங்களை, சோகங்களை மற்றும் மகிழ்ச்சியை விவரிக்காமல், மெல்ல புதைத்து சொல்கிற போதும் கூட, 'என்னவோ வேதனைன்னீங்களே, என்ன அது... எங்கிட்ட பகிர்ந்துக்கலாம்ன்னா, பகிர்ந்துக்கங்க...' என்று கிச்சிக் கிச்சித் தாம்பாளத்தில், குச்சியின் மீது சரியாக கை வைப்பது போல் விஷயத்தை பிடிக்க வேண்டும்.

உரையாடல் கடந்து விட்ட போதும், பின்னோக்கி போய் அந்த ஒயரை சரியாக தொட வேண்டும்.

தங்களது துன்பம் மற்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என, ஏங்குகின்றனர், மனிதர்கள். பாதி விழுங்கியும், விழுங்காமலும் அவர்களையும் அறியாமல், அதை பற்றி, 'மேற்கொண்டு கேட்க மாட்டார்களா...' என, எதிர்பார்க்கின்றனர். பிடிக்கிறதோ இல்லையோ இதற்கு ஈடு கொடுக்க வேண்டும்.

நமக்கு அக்கறை உண்டோ, இல்லையோ அதை கொஞ்சமாவது வெளிப்படுத்த வேண்டும். நாம் வேறு உணர்வுடன் இருந்தால் கூட, அதிலிருந்து வெளிப்பட்டு வர வேண்டும்.

எனவே, மீண்டும் தலைப்பிற்கே வருகிறேன்... கொஞ்ச நடிங்க பாஸ்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us