PUBLISHED ON : ஜூலை 31, 2016

பணி ஓய்வு பெற்ற பின், செய்தித்தாளை வரி விடாமல் படித்து முடிப்பதே, பரமசிவத்தின் பொழுதுபோக்கு!
அப்படித்தான் ஒருநாள், செய்தித்தாளுடன் அளிக்கப்பட்ட, வீட்டு வசதி பற்றிய இணைப்பில் வந்த ரியல் எஸ்டேட் விளம்பரத்தை பார்த்தார். அத்துடன், சீரியல் மற்றும் சினிமா கதாநாயகிகள், 'டிவி' சேனல்களில் தோன்றி, 'முந்துங்கள்... சொர்க்கத்தின் சொந்தக்காரராக, ஓர் அரிய வாய்ப்பு. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள, அரசு தொழிற்பேட்டைக்கு மிக அருகில் உள்ளது, வில்லா.
'விரைவில் வரவிருக்கும் விமான நிலையத்திலிருந்து, 5 கி.மீ., தொலைவிலும், அரசின் பரிசீலனையில் உள்ள, அகல ரயில் பாதை அமையவிருக்கும் வழித்தடத்தின் அருகிலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி, தார் சாலையில் பொடி நடையாக நடந்தாலே அடையக்கூடிய, அருமையான ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 'வில்லா' நிலம் ரொம்ப மலிவாக தருகிறோம்.
'இன்னும் சில மனைகள் மட்டுமே உள்ளன. உடனே வாங்கினால், பத்திரப்பதிவு, பட்டா மற்றும் தங்க நாணயம் இலவசம். ஐந்தே ஆண்டுகளில், பல மடங்கு விலை உயரும் உன்னத வாய்ப்பு...' என்று, வேப்பிலை அடித்ததில், ஆளரவமற்ற அத்துவானத்தில், ஒரு கிரவுண்டு நிலம் வாங்கி, கான்டாராக்டர் மூலம் வீடு கட்டிய தன் அவசர குடுக்கை தனத்துக்காக, தன்னையே நொந்து கொண்டார் பரமசிவம்.
'நல்ல வாடகை வரும்... சில ஆண்டுகளில் விற்றால், நல்ல லாபம் கிடைக்கும்...' என்ற தப்புக் கணக்கில், ஓய்வு கால ரொக்கங்களையும், இதர சேமிப்பையும் கொட்டி, 30 லட்சம் ரூபாயில் தன் மனைவி பேரில் வீடு கட்டினார்.
ஆனால், முதல் அதிர்ச்சியாக, வாடகைக்கு குடி வர ஆளில்லை; காரணம், அடிக்கடி போய் விடும் மின்சாரம், போக்குவரத்து வசதியின்மை, கல்விக்கூடம், மருத்துவமனை மற்றும் கடை என்று எந்த வசதியும் இல்லை. ஆள் அரவமற்ற இடம்; பகலிலாவது சிறிது பரவாயில்லை; இரவில் கும்மிருட்டு; பயமாக இருந்தது.
போதாக்குறைக்கு அப்பகுதியில் இருந்த தொழிற்சாலைகளில், தொழிலாளர் பிரச்னை, மின் பற்றாக்குறை, உலக பொருளாதார சீர்கேடு போன்றவற்றால் ஒவ்வொரு கம்பெனியும் மூடு விழா நடத்த, தொழிற்பேட்டை காலியாக ஆரம்பித்தது. 'வாடகைக்கு யாராவது வரலாம்...' என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பரமசிவத்திற்கு போய் விட்டது.
நாளுக்கு நாள் ஏறி வரும் விலை வாசியால், பட்ஜெட்டில் பற்றாக்குறை விழ, சமாளிக்க முடியாமல் திணறினார். அத்துவான இடத்தில் தான் கட்டியிருக்கும் வீட்டிற்கு இந்த வயதில் குடி பெயர்வதும் இயலாத காரியம். வீட்டை நஷ்டமில்லாமல் விற்றாலே பெரிய காரியம் என்ற நிலையில், பத்திரிகை மற்றும் இணையத்தில் விளம்பரம் செய்ததுடன், ஏரியா புரோக்கர்களிடமும் சொல்லி வைத்தார், பரமசிவம்.
சில மாதங்கள் கழித்து, புரோக்கரிடமிருந்து போன்.
''சார்... ஒரு அருமையான பார்ட்டி சிக்கிடுச்சு. பேரு, ரங்கநாதன். 'பாத்து பாத்து கட்டின வீடு; ஐஞ்சு வருஷத்துல நிலம் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு போகும். வீட்டுக்காரர் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போறதால, மனசில்லாம வீட்டை விக்கிறாருன்னு சொல்லியிருக்கேன். அவர் ரொம்ப, 'இம்ப்ரெஸ்' ஆயிட்டாரு. நீங்களும் அதையே சொல்லிடுங்க.
''இன்னொரு விஷயம். அவரு கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி. அதுக்கேத்த மாதிரி நாம நடந்துகிட்டா, மொத்தமா பணத்தை செட்டில் செய்துடுவாரு; வீடு பிடிச்சுதுன்னா, முன்தொகையா, 10 லட்ச ரூபா தர்றாராம்... அதனால, நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே போயி, வீட்டை சுத்தம் செய்து, வெளியில ஒரு, 'கோட்' பெயின்ட் அடிச்சு, வாசல்ல கோலம் போட்டு, பசு மாடு, கன்னுக்குட்டியை நிக்க வச்சுடுறேன். அதுக்கு, 10,000 ரூபாய் செலவாகும். நீங்க, ஞாயிற்றுக்கிழமை காலையில, 10:00 மணிக்கு, 'சைட்'டுக்கு வந்துடுங்க,'' என்றார் புரோக்கர்.
'அப்பாடா... விடிவு காலம் வந்துடுச்சு; ஒரு வழியாக வீட்டை தள்ளிடலாம். அப்படியே, மொத்த காசையும் பேங்க்ல போட்டுட்டா, வட்டி வரும். முதலிலேயே இதை செய்துருக்கலாம். புத்தி கெட்டு போயி, அனாவசிய டென்ஷன்...' என்று நினைத்து, மகிழ்ச்சியில் திளைத்தார், பரமசிவம்.
ஞாயிற்றுக்கிழமை -
பரமசிவம் கிளம்பும் போது, ''ஏங்க... வீடு என் பெயர்ல இருக்கே... நானும் வரட்டுமா...'' என்றாள், அவருடைய மனைவி.
''எதுக்கு வெயில்ல அவ்வளவு தூரம்... இது வெறும் அக்ரிமென்ட் தானே... நான் போனால் போதும், '' என்றவர், கையெழுத்துப் போட மேஜை மேல் இருந்த ஒரு பேனாவை எடுத்து பாக்கெட்டில் சொருகியபடி அவசரமாக கிளம்பினார்.
தன் மனைவியுடன், 'டாண்' என்று ஆஜரானார், ரங்நாதன். புரோக்கரும், சொன்னபடி எல்லா ஏற்பாடும் செய்திருந்தார்.
''கிழக்கு பார்த்த வீடு குட்... அடிக்கு அடி வாஸ்து பிரகாரம் கட்டியிருக்கீங்க. தோட்டத்துக்கு போதுமான இடம், போர்ட்டிகோன்னு எல்லாமே அருமை. கிணத்து தண்ணி கொஞ்சம் உப்பு கரிச்சாலும், கை விட்டு எடுக்குறாப்புல ரொம்ப கிட்டத்துல இருக்கு. எனக்கும், என் மனைவிக்கும் வீடு ரொம்ப பிடிச்சுருக்கு. வீட்டு வாசல்ல, தற்செயலா பசுவும், கன்றும்... ஆகா, இன்னைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாள்... 'அக்ரிமென்ட்' போட்டுடலாம். அடுத்த அமாவாசை அன்னிக்கு, 'ரிஜிஸ்டிரேஷன்' ஓகேவா...'' என்றவர், கடவுளை வணங்கி, கிழக்கு பக்கம் பார்த்தபடி, புரோக்கர் நீட்டிய, 'அக்ரிமென்ட்'டில் கையெழுத்து போட்டு, ''நீங்க போடுங்க,'' என்று பரமசிவத்திடம் நீட்டினார்.
அவரும் கையெழுத்து போட்டு திருப்பித் தர, ரங்கநாதன் முகம் மாறியது.
''சாரி சார்... சென்டிமென்ட்படி, ஆரம்பமே கொஞ்சம் சரியில்ல. வீடு உங்க மனைவி பெயர்ல இருக்கு. அதனால, நீங்க தம்பதி சமேதரா வந்திருந்தா, நல்லா இருந்திருக்கும். ஆனா, நீங்க ஒத்தை ஆளா வந்தது, கொஞ்சம் உறுத்தலா இருந்தது. சரி போகுதுன்னு பாத்தால், உங்களுக்கு இடது கை பழக்கம் போல... அதோடு, கறுப்பு இங்க் பேனாவுல கையெழுத்து போட்டிருக்கீங்க.
''இடது கையால செய்யற எந்த காரியமும் சரியா வராதுங்கறது என் நம்பிக்கை. தவிர, கறுப்பு நிறம் துக்கத்தை குறிக்கும்; சுப காரியத்துக்கு சரிப்படாது என்பதும் என் அபிப்ராயம். கூட்டி கழிச்சு பாத்தால், எனக்கு வீடு வாங்கற கொடுப்பினை இல்லன்னு தோணுது,'' என்று சொன்னவர், பரமசிவம் சொன்ன சமாதானத்தை காதில் வாங்காமல், காரில் ஏறி சென்று விட்டார்.
'மனைவியை வர வேணாம்ன்னு சொல்லியிருக்க வேண்டாமோ... அவள் வந்திருந்தால், வலது கையால் கையெழுத்து போட்டிருப்பாளே... அதோடு, வழக்கமா எழுதுற பேனாவை தேட சோம்பேறித்தனப்பட்டு, ஏதோ ஒரு பேனாவ எடுத்து வந்தது தப்பா போச்சே... சின்ன விஷயங்கள் தான் என்றாலும், சென்டிமென்ட் பார்ட்டி எனும் போது, கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாண்டிருக்கலாம். நம் அலட்சியப் போக்கால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போயிருச்சே... அதோட, 10,000 ரூபாய் வீண் செலவு வேறு...' என்று நொந்து, புலம்பினார், பரமசிவம்.
ஆர்.ரகோத்தமன்
