PUBLISHED ON : ஜூலை 31, 2016

அரவாணிகளை பெருமைப்படுத்தும் விக்ரம்!
சேது, காசி, அன்னியன் மற்றும் ஐ போன்ற படங்களில், தன் உடலை வருத்தி நடித்திருந்த விக்ரம், தற்போது, இருமுகன் படத்தில், அரவாணியாக நடித்துள்ளார். தன் முந்தைய படங்களைப் போன்றே இப்படமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, அரவாணிகளை பெருமைப்படுத்தும் விதத்தில், புதுமையான நடை, உடை மற்றும் பாவனைகளை வெளிப் படுத்தியுள்ளார்.
— சினிமா பொன்னையா
மீண்டும் தமிழில் சகுனி ப்ரணிதா!
சகுனி மற்றும் மாஸ் போன்ற படங்களில் நடித்தவர், ப்ரணிதா. அதையடுத்து, தமிழில் படங்கள் இல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தவர், தற்போது, ஜெய் நடிக்கும், எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில், நிரந்தர இடம் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி வரும் ப்ரணிதா, இனியாவது தனக்கான இடத்தை தக்க வேண்டும் என்பதற்காக, கமர்ஷியல் பட இயக்குனர்களை முற்றுகையிட்டு, 'நானும் இப்போது பக்கா கமர்ஷியல் நடிகையாகி விட்டேன்...' என்று, தன் கவர்ச்சி ஆல்பங்களை, அவர்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இட்டாருக்கு இட்ட பலன்
— எலீசா
சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க விரும்பிய கவுதமி!
பாபநாசம் படத்தில், கமலின் மனைவியாக நடித்த கவுதமி, தற்போது, கமல் நடித்து வரும், சபாஷ் நாயுடு படத்திலும், அவரது மனைவி வேடத்தில் நடிக்க விரும்பினார்; ஆனால், அது, காமெடி கதாபாத்திரம் என்பதால், அதற்கு ரம்யாகிருஷ்ணன் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறி, மறுத்து விட்டார், கமல்.
— எலீசா
அதிரடி கண்டிஷன்!
மலையாள, பிரேமம் படத்தில் நடித்தவர், மடோனா செபஸ்டியன். இவர், தமிழில் விஜயசேதுபதி நடித்த, காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தவர். தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜயசேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதைகளை நன்கு ஆராய்ந்தே, நடிக்க சம்மதம் சொல்லி வரும் மடோனா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், 'கவர்ச்சி உடையணிந்தோ, கதாநாயகர்களை நெருக்கமாக கட்டிப் பிடித்தோ நடிக்க மாட்டேன்...' என்று, அதிரடி கண்டிஷன்களை கூறி வருகிறார். இது, இயக்குனர்களை விட, கதாநாயகர்களுக்கு மடோனா மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வந்த கூத்து ஆடித்தானே தீர வேண்டும்!
— எலீசா
வடிவேலு போட்ட கண்டிஷன்!
'இனி, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்...' என கூறி வந்த வடிவேலு, தான் கதாநாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தன் கொள்கையை தளர்த்தி, விஷால் நடிக்கும், கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இப்படத்தில், இன்னொரு காமெடியனான சூரியும் நடிக்கயிருப்பதால், 'என் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் தலை காட்டவே கூடாது...' என்று கண்டிஷன் போட்டுள்ளார், வடிவேலு.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
முன்பெல்லாம், சுள்ளான் நடிகரின் படப்பிடிப்புகள் எளிமையாக நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக அவர் நடிக்கும் ஸ்பாட்டுகளுக்கு, பலத்த பந்தோபஸ்து போடப்பட்டு வருகிறது. அவரை யாராவது காண சென்றால், பல அடுக்கு பாதுகாப்புகளை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. பிரபலங்களை கூட காக்க வைத்து தான் சந்திக்கிறார். இதனால், நடிகரை சந்தித்து விட்டு வரும் சிலர், 'எதற்கு இந்த வெட்டி பில்டப்...' என்று கிண்டலடிக்கின்றனர்.
தன்னுடன், 'கிசுகிசு'க்கப்பட்ட ரம்மி நடிகையால், குடும்பத்தில் களோபரம் வெடித்ததால், தற்போது, அம்மணியை வெட்டி விட்டுள்ளார், பீட்சா நடிகர். ஆனாலும், நடிகரை விடாமல் துரத்தும் நடிகை, சில சமயங்களில் அவுட்டோர்களுக்கும், அழையா விருந்தாளியாக, 'விசிட்' அடிக்கிறார். குடும்பக் கலவரம் ஓய்ந்திருக்கும் நேரத்தில், இப்படி நடிகை திடீர், 'விசிட்' அடிப்பதால், அவரை கண்டு தெறித்து ஓடுகிறார், நடிகர்.
சினி துளிகள்!
* விஜயசேதுபதி நடித்துள்ள, மெல்லிசை மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள், கிடப்பில் கிடக்கின்றன.
* தனுஷ் நடிக்கும், வடசென்னை படத்தை, மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார், வெற்றிமாறன்.
* புதிய பட வாய்ப்புகள் இல்லாத ஹன்சிகா, 'சென்னையில் முகாமிட்டால், ஓட்டல் பில் எகிறி விடும்...' என்று, மும்பையில் முகாமிட்டுள்ளார்.
அவ்ளோதான்!
