PUBLISHED ON : டிச 25, 2016

எம்.திலகவதி, மதுரை: குடும்பத்துடன் பார்க்கும், 'டிவி' நிகழ்ச்சிகளில் கூட, முத்தக்காட்சி இடம் பெறுகிறதே...
குழந்தைகள் மற்றும் வயது பிள்ளைகளுடன் அமர்ந்து, அக்காட்சிகளை காணும் பெற்றோர் கூட, அக்காட்சிகளை கேஷுவலாக, எடுத்துக் கொள்ளும் பக்குவத்துக்கு வந்து விட்டனர்; வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கவனித்தீர்களா? 'டிவி'யின் தயவால் கலாசார மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது!
வி.மணிராஜ், திருவள்ளூர்: உலகிலேயே கவலை இல்லாத மனிதர்கள் எங்கு இருக்கின்றனர்?
கீழ்ப்பாக்கம், குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளிலும், குணசீலம் கோவில் வளாக தூண்களில் கட்டப்பட்டவர்களும்!
ஏ.ராமசாமி, சிதம்பரம்: நான் சாப்பிடும் முன்பே, என் மனைவி சாப்பிட்டு விடுகிறாளே...
'உப்பு, காரம் எல்லாம் சரியாயிருக்கு... நளபாகம் தான் போங்க...' என சர்டிபிகேட் கொடுக்கிறாரோ!
கே.ராஜலட்சுமி, ஆலங்குளம்: ஒரு கார்டில், எத்தனை கேள்விகள் எழுதலாம்?
எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால், ஏன் வெளியிடவில்லை என்று மட்டும் கேட்டு எழுதாதீர்கள்!
என்.சாந்தி, ஆவாரம்பாளையம்: படிக்கிற பிள்ளைகளுக்கு, பாக்கெட் மணி கொடுப்பது அவசியமா?
அவசியமே இல்லை என்றால் திருட ஆரம்பிப்பர். அளவோடு அளியுங்கள் பாக்கெட் மணி!
கோ.ஷியாம் நாராயணன், பரமக்குடி: சாப்பிட்டுக் கொண்டே படிப்பது உண்டா?
உண்டு; டாய்லெட் சீட்டில் அமர்ந்தும் படிப்பது உண்டு.
கே.வி.முருகன், அரசரடி: இந்தியாவில் இரண்டே அரசியல் கட்சி தான் இருக்க வேண்டும் என, அடிக்கடி எழுதுகிறீரே... போர் அடித்து விடாதா?
போர் அடிக்கத் தான் செய்யும்; தினப் பத்திரிகைகளுக்கு செய்தி கிடைக்காது; துருவித் துருவி எழுதும் வார இதழ்கள், 'டல்' அடிக்கும். இருந்தாலும், நாடு, உருப்படும்!
டி.சாலமோன் ராபர்ட், கவரப்பேட்டை: லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு, சீனாவில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறதாமே...
இங்கேயும் போடலாம் தான்; அப்புறம், எஞ்சியுள்ள, நாலைந்து பேர்களால் அரசு எந்திரத்தை நடத்திச் செல்ல முடியுமா என்ன?
இ.தங்கராஜ், ரெட்டியார்பாளையம்: நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன்; கஷ்டங்கள் குறைய என்ன வழி?
தேவைகளை, 'கட்' செய்யுங்கள். கஷ்டங்கள் குறைந்து விடும். தேவைகள் அதிகமாக அதிகமாகத் தான், கஷ்டம் அதிகரித்து, துன்பம் வந்து சேருகிறது!
பி.மாணிக்கவல்லி, நத்தம்: சென்னை தமிழில் பேசத் தெரியுமா?
சே... சே... முயன்று கொண்டே இருக்கிறேன்; நெல்லை - குமரி தமிழ் சூப்பராகவும், கொங்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசத் தெரியும்!
எல்.பிரசன்னா, சென்னை: நிலத்தில் நெல் பயிரிட்டால் லாபமா?
பரவலாக கரும்பு பயிரிடுவதாக கூறுவர். ஆனால், கரும்பை விட லாபம் தருவதும், அதேநேரம் பராமரிப்பும், செலவும் குறைவான பயிர், புல் தான் என்கின்றனர். மாட்டுத் தீவனமாக பயிரிடப்படும் ஒரு வகை புல்லில் இருந்து, கரும்பை விட அதிக வருமானம் கிடைக்கிறதாம்!
