PUBLISHED ON : மே 21, 2017

* ஆர்.விஜயன், மதுரை: பொது மக்கள் ஒரு கூண்டு செய்து, தவறு செய்யும் அமைச்சர்களை, அதில், ஏற்றி விசாரித்தால் என்ன? இதன் மூலம், தேர்தல் சமயத்தில் சரமாரியாக வீசப்படும் வாக்குறுதிகளாவது மட்டுப்படும் அல்லவா?
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது; பூனைக்கு மணி கட்டுவது யார்?
ஜெ.சீனிவாசன், காரியாபட்டி: தேவைக்கு மேல் என்னிடம் சொத்து உள்ளது; ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...
பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது! கையில் உள்ள பணத்தை எப்படி, எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாததாலேயே
இக்குறை இருக்கிறது!
* எம்.பகலவன், உசிலம்பட்டி: விலைவாசி ஏற்றத்தை பார்த்தால், இனி, ஏழைகள், அரிசி சோறு மறந்து, கூழ் தான் குடிக்க வேண்டும் போலுள்ளதே...
ரொம்ப நல்லது; சுத்தமாக்கி, தவிடு நீக்கி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் என்ன சத்து இருக்கிறது... விலை ஏற்றம் காரணமாகவாவது கம்பு, கேழ்வரகு, கூழ் குடிக்கட்டும். உடம்புக்கு தேவையான சத்துகள், குறைந்த விலையில் கிடைக்கும்; ஆரோக்கியமாக வாழலாம்!
* ரா.ரவி, வத்தலக்குண்டு: தமிழன் முன்னேற இப்போது மிகத் தேவையானது எது, தேவையற்றது எது?
பகுத்தறிவது, தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது, தேவையானது; கொடி பிடித்து கோஷம் போட்டு, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய் நேரத்தை வீணாக்குவது, தேவையற்றது!
எஸ்.சையத், கிளிஞ்சிகுப்பம்: கூட்டுக் குடும்பம். இதில், பிரிவினைக்கு இடமே இல்லாதபடி சொத்து இணைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆசாமி, ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார். மற்றவர்களோ, தலா, 6 - 7 பெற்றுத் தள்ள, வருமானத்தில் முக்கால்வாசி பகுதியை அவர்களே தின்று தீர்த்து விடுகிறவர்களாக வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட குடும்பத்தில், ஒன்றே ஒன்று பெற்றவன், பிரிந்து போய், சுக வாழ்க்கையை அனுபவிக்கலாமென நினைக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களை நடுவராக போட்டு, பிரச்னைக்கு தீர்வு காணச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
சிக்கலோ, குழப்பமோ இல்லை. சொத்தில் இருந்து வரும் வருமானத்தை சரி சமமாக பிரித்து கொடுத்துவிட வேண்டியது தான். அவரவர் பங்கில் அவரவர் செலவு. இதில், வரவுக்காக உழைப்பவர்களுக்கு தனியே சம்பளம் கொடுத்துவிட்டால், பிரச்னை, 'சால்வ்டு!'
எஸ்.சின்னகாளை, புதுச்சேரி: 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்கின்றனரே... எப்படி அப்பகுதியை ஆக்கிரமித்தனர்?
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரின் போது! அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் வழ வழா, 'பாலிசி' ராணுவத்தினரின் கையை கட்டிப் போட்டு விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலவே, சீனாவிடமும் காஷ்மீரின் ஒரு பகுதியை இழந்துள்ளோம்!
எம்.அருண், கோவை: நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்?
உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் அளவில்... சிறுகதை, தொடர்கதை, புதுக்கவிதை எழுத, இனிமேல் தான் படிக்க வேண்டும்!
