தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசுத் துறையில், முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர், எனக்கு நன்கு அறிமுகமானவர். சிறந்த தெய்வ பக்தர்; ஆண்டுதோறும் தவறாமல், கைலாய மலைக்கு சென்று வருபவர். ஒரு வேலை விஷயமாக அவரை சந்திக்க, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம்.

காலையில் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி, 'பெட்டி' போட்ட, புதிய வெள்ளைச் சட்டை அணிந்து கிளம்பினேன். வண்டி சர்வீசுக்கு சென்றிருந்ததால்,

நண்பர் ஒருவரிடம் ஓசி வண்டி வாங்கி புறப்பட்டோம். அதில், குளிர் சாதன வசதி கிடையாது; சென்னை வெயிலின் கொடுமையை அன்று உணர்ந்தேன்.

புதுச் சட்டை முதுகுப் பக்கம் தொப்பலாக நனைந்து போக, முகமெல்லாம் வியர்வை மழை பெய்ய ஆரம்பித்தது. அதிகாரியின் அலுவலகத்தை அடைந்து,

மரநிழலில், 15 நிமிடம் அனல்காற்றில் நின்ற பிறகே நிதானமடைய முடிந்தது.

'பிசினஸ் கார்டை' உள்ளே அனுப்பி விட்டு, வரவேற்பறையை நோட்டம் விட்ட போது, நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடை அதிபர் ஒருவர், இரண்டு தொழிலதிபர்கள் மற்றும் சில பெரிய மனிதர்கள், அதிகாரியின் தரிசனத்திற்கு காத்திருப்பது தெரிந்தது.

அடுத்து உள்ளே செல்ல, கைகளில் இரண்டு ஆப்பிளுடன் தயாராக இருந்த இரு போலீஸ் அதிகாரிகளை, காத்திருக்கச் சொல்லி, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார், அதிகாரியின் உதவியாளர்.

எங்களை கண்டதும் அதிகாரிக்கு மிகுந்த மகிழ்ச்சி...

'எங்கிட்ட அதிகாரம் இல்லாத போதும், இருக்கும் போதும் ஒரே வித மதிப்பு வச்சிருக்கிற சில பேர்ல நீயும் ஒருத்தன்ப்பா... ரொம்ப மகிழ்ச்சி...' என்றவர், தம் உதவியாளரிடம் 'மூன்று டீ...' என்றார்.

'இந்த வருஷம் கைலாய மலைக்குச் செல்ல உங்களுக்கு சந்தர்ப்பம், நேரம் கிடைக்குமா...' எனக்கேட்டேன்.

'நீ சொன்னதும் தான் ஞாபகத்துக்கு வருது... சீனாக்காரன் இப்ப ஒரு அநியாயம் செஞ்சுட்டான்ப்பா...'என்றவர், டீயை ஒரு மடக்கு குடித்தார்.

இங்கே, கைலாய மலை பற்றி உங்களுக்கு சொல்லியாக வேண்டும்...

இந்துக்கள், புத்த - ஜைன மதத்தினர் மற்றும் திபெத்தியர்கள் கைலாய மலையை புனிதத்தலமாகக் கருதுகின்றனர்.

கைலாய மலையை, சிவன் மற்றும் பார்வதி வீற்றிருக்கும் தலமாக கருதி, போற்றுகின்றனர், இந்துக்கள். இம்மலையின் பெருமை குறித்து புராணக் கதைகள் பல உள்ளன.

திபெத்தியர்களில், 'பான்' என்ற பிரிவினருக்கு, கைலாய மலைச் சிகரம் கடவுள் போன்றது!

புத்தர்கள், பனிச்சிகரங்களிலேயே சிறந்தது கைலாயம் எனக் கருதி வணங்குகின்றனர். ஜைனர்களின் முதல் புனிதர், ஞானம் பெற்ற இடம் இது தான்!

இப்படி பலதரப்பட்ட ஆன்மிக சிறப்பு பெற்ற இந்த சிகரம், இமயமலையில் அமைந்துள்ளது. 1960ல், நமக்கும், சீனாவுக்கும் நடந்த போரின் போது,

இப்பகுதியை நம்மிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது சீனா.

ஒவ்வொரு ஆண்டும், சீன அரசின் பலத்த கெடுபிடிகளுக்கிடையே தான், பக்தர்கள் இங்கு சென்று வர முடியும்!

கம்மிங் பேக் டு த பாயின்ட்...

அதிகாரி சொன்னார்...

'கைலாய மலையில் ஏற, ஸ்பெயின் நாட்டு, மலை ஏற்ற குழு ஒன்றுக்கு அனுமதியளித்து, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மிதிக்கத் துணிந்து விட்டது, சீன அரசு.

'மலை ஏற்றம் வீர விளையாட்டு தான்; மறுக்கவில்லை. ஆனால், சவால் விட்டு ஏறக் கூடிய வகையில் உயரமானதல்ல, கைலாய மலை.

'இங்கிலாந்தைச் சேர்ந்த, மலை ஏற்ற சங்கத் தலைவரும், வெள்ளையருமான, டாக் ஸ்கவுட், 'கடவுள் நம்பிக்கை இல்லாத சீன அரசு, வீம்புக்காக இப்படிச் செய்கிறது...' என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் சிறந்த சிவ பக்தர்!

'எவரெஸ்ட் போன்ற பெரிய, கடினமான சிகரங்களில் ஏறுவதில் தான் மலை ஏற்றத்தின் சவாலே அமைந்துள்ளது. இந்த சிறிய சிகரத்தின் மீது பூட்ஸ் கால்களால் ஏறிமிதிப்பதால், லட்சக்கணக்கான பக்தர்களின் சாபம் தான் பரிசாகக் கிடைக்கும்.

'ஜீசஸ் மார்டினஸ் நோவா என்ற கிறிஸ்தவர் தலைமையிலான ஒரு ஸ்பெயின் நாட்டு மலையேற்ற குழு தான், சீன அரசிடம் இப்படி அனுமதி வாங்கியுள்ளது. இது பற்றி நீ அவசியம் எழுத வேண்டும்...' எனக்கேட்டுக் கொண்டார்.

வெளியே வந்த போது, 'நாமும் கைலாய மலைக்கு ஒரு டிரிப் அடிப்போமா?' எனக் கேட்டேன்.

'வயசான காலத்துல என்னால மலையேற முடியாதுப்பா...' என, 'ஜகா' வாங்கினார், லென்ஸ் மாமா!

மருத்துவ மனைக்கு வந்த ஒருவர், டாக்டரைப் பார்த்து, 'உங்க சிகிச்சையினால் தான், நான், சிறந்த பலன் கண்டேன்; நன்றி டாக்டர்...' என்றார்.

வியப்படைந்த டாக்டர், 'நீங்க என்னோட பேஷன்ட் இல்லயே...' என்றார்.

'உண்மை தான் டாக்டர்... ஆனால், சமீபத்தில் இறந்த என் மாமா சுப்ரமணி உங்க பேஷன்ட்; இப்போ அவரது சொத்துகளுக்கு நான் தான் வாரிசு. அதான் நன்றி கூற வந்தேன்...' என்றார் வந்தவர்!

மயக்கம் போட்டார் டாக்டர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us