தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (19)

நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (19)

நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (19)


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

எங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அறிந்திருந்ததாலும், சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றும் திறன் படைத்திருந்ததாலும், என் அண்ணன் மீது, மிகுந்த பாசம் கந்தசாமி முதலியாருக்கு!

அதனால், சமூக நாடகங்களில், அவருக்கு ஆங்கிலம் பேசும் வேடங்களை அதிகமாக கொடுத்ததுடன், நாடகக் குழு பையன்களுக்கு ஆங்கில உரையாடல்களை சொல்லிக் கொடுக்கும் வேலையையும் வழங்கியிருந்தார்.

அதேபோன்று, ராகத்தின் பெயர்களை சொல்லவும், தாளம், சுருதி மாறி பாடுவதை சரியாக சுட்டிக் காட்டும் திறமையும் கொண்டவர், என் அண்ணன்.

இவ்வளவு திறமை இருந்தாலும், அவரிடம் பிடிவாத குணமும் இருந்தது.

நான் பாடுவது அவருக்கு பிடிக்காது; அவரும் பாட மாட்டார். ஆனால், பிறர் பாடுவது ரொம்ப பிடிக்கும்.

இப்படிப்பட்டவருக்கு, சந்திரகாந்தா நாடகத்தில், மடாதிபதியின் சிறையில் அகப்பட்டிருக்கும், ஆங்கிலேயப் பெண்ணின் வேடம் கொடுக்கப்பட்டது.

ஆங்கிலம் பேச வேண்டியிருந்ததால், அதைக் கொடுத்தார், கந்தசாமி. அக்கதாபாத்திரம், ஆங்கிலத்தில் ஒரு பாட்டுப் பாட வேண்டும்; ஒத்திகை நடத்தப்பட்டது.

என் தமையனாரா பாடுவார்... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் பாடவில்லை. கடைசியாக, அடிக்கவே ஆரம்பித்து விட்டார், கந்தசாமி முதலியார்.

'நாளைக்கு நீ மேடையில இந்தப் பாட்ட பாடல, கொன்னு போடுவேன்...' என்று, கட்டளையும் போட்டு விட்டார்.

அப்போதும் மவுனமாகவே இருந்தார், என் அண்ணன்.

நானும், 'பாடுங்கண்ணே...' என்று வற்புறுத்தினேன்.

என்னையே பார்த்தார்; அவ்வளவு தான்.

மறுநாள், என் அண்ணன் பாட வேண்டிய நாள்...

'எங்கே பாடாமல் இருந்து, அடி வாங்கப் போறாரோ...' என்று, எனக்கு ஒரே கவலை.

அவர், மேடைக்குப் போகும்போது, 'பாடிடுங்க...' என்று மெள்ள சொன்னேன். அவர் முன் போலவே, என்னை அமைதியாக பார்த்தபடி, மேடையேறினார்.

பாட வேண்டிய காட்சி வரும் வரையில், 'ஒத்திகை இதோடு நின்று விடாதா...' என்றெல்லாம், என் அண்ணனுக்காக எண்ணியபடி இருந்தேன். பொறுமையாக உட்கார முடியாமல் அங்கும், இங்கும் நடந்தேன்.

அக்காட்சியும் வந்து விட்டது; ஆர்மோனியக்காரர், மெட்டை வாசிக்க ஆரம்பிக்க, வாத்தியார் நாக்கை நீட்டி, பல்லை கடித்தபடியே, இடது கையில் புத்தகத்தையும், வலது கையில் பிரம்பையும் வைத்து, தமையனாரையே பார்த்தவாறு நின்றிருந்தார்.

நான், என் அண்ணனை பரிதாபமாகப் பார்த்தேன்; இத்தனையும் சில வினாடிகள் தான்.

இதற்குள், அந்தப் பல்லவியை, இரண்டு, மூன்று முறை வாசித்து விட்டார், ஆர்மோனியக்காரர்.

'பாடுறியா, இல்லயா?' என்று அதட்டல் போட்டார், வாத்தியார். என் அண்ணன் அப்போதும் மவுனமாக இருக்கவே, வாத்தியார் பொறுமை இழந்து விடுவார் போல் தோன்றியது. என் அண்ணன் திரும்பி நின்று கண்ணை மூடிக் கொண்டார். அடி வாங்கத் தயாராகி விட்டார் என்று தோன்றியதால், மனம் தாங்காமல் கண்ணீர் பெருக, வாய் விட்டு அழும் நிலைக்கு வந்து விட்டேன். அப்போது தான் அந்தச் சத்தம் கேட்டது. கண்ணை துடைத்து, மேடையைப் பார்த்த போது, 'கணீர்' என பாடிக் கொண்டிருந்தார், என் அண்ணன்.

மகிழ்ச்சியில், பிரம்பால், தரையில் தாளம் போட்டார், கந்தசாமி முதலியார். இதற்கு முன், எத்தனையோ பேர் சொல்லியும் பாடாதவர், இப்போது பாடி விட்டாரே என்று எல்லாருக்கும் ஆச்சரியம்!

கந்தசாமி முதலியாரின் உவகைக்கோ எல்லையில்லை. காரணம், இந்த ஆங்கிலப் பெண் வேடத்தை, என் அண்ணனுக்கு கொடுத்த போது, கம்பெனி நிர்வாகியும் மற்றும் சிலரும் வாத்தியாரை பரிகசித்தனர்.

ஆனால், விடாப்பிடியாக, என் அண்ணனுக்கே அந்த வேடத்தைக் கொடுத்தார், வாத்தியார். அதில் வெற்றியும் பெற்றார்!

பாய்ஸ் கம்பெனியிலிருந்து, திரைப்பட உலகுக்குள் அடியெடுத்து வைத்தேன்.

திரைத் துறையில், உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் மனசு முழுக்க இருந்ததால், படத்தில் நல்ல வேடம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்போது தான், புகழடைய முடியும். அதன் மூலம் வருவாய் உயர்ந்து, வறுமை நீங்கும் என்று நினைத்தேன். அதனால், என் மனதில் இருந்த ஒரே எண்ணம், லட்சியம், நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான்.

இந்நிலையில், சதிலீலாவதி படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்ததும், உற்சாகத்துடன், என் அண்ணனுடன் சென்றேன்.

படமெடுக்கும் முதலாளி வந்தார்; எனக்கான முன் பணம் அவர் கையில் பளபளத்தது. ஒப்பந்தமும், ஒரு தாளில் எழுதப்பட்டு தயாராக இருந்தது. கையெழுத்து இட வேண்டியது தான் பாக்கி.

'என்ன வேடம்?' என்று கேட்டேன்.

'இன்ஸ்பெக்டர்...' என்று சொல்லி, ஆறுதல் கூறுவது போல், 'இந்த வேடத்திற்கு நிறைய வேலை இருக்கிறது...' என்றும் கூறினர்.

எனக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், என் கண்களோ கலங்கியது. காரணம், முதல் படத்தில், இன்ஸ்பெக்டர் வேடம்...

தொடர்ந்து, அடுத்த படத்திலும் இன்ஸ்பெக்டர் வேடம் என்றால், எதிர்காலத்தில் கிடைக்கிற வேடங்கள் எல்லாமே, இன்ஸ்பெக்டர் வேடமாகி விடுமோ என்ற அச்சத்தால், உடல் முழுவதும் சுடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை.

அவர் கையிலிருக்கும் பணமோ, எனக்கு அந்நேரத்தில் மிக மிக தேவையாக இருந்தது.

அதற்காக, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டாலோ, என் வாழ்க்கையே சூனியமாகி விடுமோ என்கிற பயமும் வந்தது.

இப்போராட்டத்தில், வேடத்தை வேண்டாம் என்று சொல்லவோ, ஏற்றுக் கொள்ளவோ, துணிவில்லாத கலக்க நிலையில் இருந்தேன்.

இதற்குள், வாத்தியாரும், எம்.கே.ராதாவும் என்னை கையெழுத்து இடும்படி, வற்புறுத்தினர். கடைசியாக, நான், 'அம்மாவிடம் கேட்டு, நாளைக்கு முடிவு சொல்றேன்...' என்றேன்.

எம்.கே.ராதாவுக்கும், அவருடைய தந்தைக்கும் இருந்த கவலையெல்லாம், அதில் உடனடியாக நான் கையெழுத்து போடாதிருந்தால், எங்கே என்னை வேண்டாம் என்று சொல்லி விடுவரோ... கிடைத்த வாய்ப்பு, கைவிட்டுப் போய் விடுமோ என்பதேயாகும்.

அம்மாவிடம் இந்த ஏமாற்றத்தை எப்படி சொல்வது என்று சோர்ந்த உள்ளத்தோடு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில், 'ட்ராமை' விட்டு இறங்கி, வீடு நோக்கி நடந்தே சென்றோம், நானும், என் அண்ணனும்!

எதிர்பாராமல் வழியில், கே.பி.கேசவன் நாயர் என்பவரை சந்தித்தோம். 'டைகர் ஆப் தி இண்டியன் ஸ்டேஜ்' என்ற பட்டத்தை பெற்ற நாடக நடிகர் அவர்.

சதி லீலாவதி போன்ற கதையுள்ள, பதிபக்தி படத்தில், கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர். 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ்' கம்பெனியில், நான் சிறுவனாக நடித்த காலத்தில், எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர்; அவரை சந்தித்தோம்.

அவர் எங்களை பார்த்து, 'என்ன செய்துட்டு இருக்கீங்க?' என்று கேட்டார்.

'இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது; அதில் நடிக்கலாம்ன்னு இருக்கோம்...' என்று சொன்னோம்.

-- தொடரும்

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us