
* எஸ்.தங்கமுடிராஜ், கோவை: அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதை கருதுகிறீர்கள்?
உங்களுக்கே தெரியாதா என்ன... சந்தர்ப்பவாதம்... ‚ இதுதான், இன்று அனைத்து கட்சிகளின் கொள்கை!
எம்.மாதவன், கடலூர்: அதிர்ஷ்டம் என்கின்றனரே... அப்படின்னா என்னங்க?
உழைக்கத் தயங்கும், - மறுக்கும், சோம்பேறிகள், தம் முன்னேறாமைக்கு காரணமாக காட்டும் பொருளற்ற வார்த்தை தான் அதிர்ஷ்டம் என்பது!
* எம்.பி.மணியன், காஞ்சிபுரம்:வெற்றி பெற்றவர்கள் அனைவருமே, 'பிடிக்காத வேலையை துறந்தேன்...'என்கின்றனர். ஆனால், அது மாதிரி செய்ய யதார்த்தம் இடிக்கிறதே?
அவர்கள் அசாதாரணர்களாக இருப்பதால், யதார்த்தங்களை கடந்து விடுகின்றனர். யதார்த்தம் பார்த்துக் கொண்டிருப்போர், எப்போதும் போல சாதாரணர்களாகவே உள்ளனர்.
ஆர்.வானதி, நெல்லை: தினமும் சமையல் வேலையில் உழலும் பெண்களுக்காக, வாரம் ஒரு முறை ஆண்கள் சமையல் செய்தால் என்ன?
வாரம் ஒருமுறை என்ன... தினமுமே உதவலாம்; ஆனால், அவர்கள், 'கவுரதி' தடுக்குமே!
கே.சுப்புலட்சுமி, வந்தவாசி: பணம், பதவி, புகழ் இவற்றில் மனிதனை அதிகமாக பாதிப்பது எது?
மூன்றும் அளவாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை; மூன்றில் ஒன்று மிஞ்சினாலும் அழிவு தான்!
எஸ்.ஆனந்தி, திருப்பூர்: உண்மை நண்பனை அடையாளம் கண்டு கொள்ள ஒரு ஐடியா சொல்லுங்களேன்...
கொஞ்சம் பணம் கடனாக கேட்டுப் பாருங்களேன்!
வி.வைதீஸ்வரன், மதுரை: 'படிக்காத பெண்களைவிட, படித்த பெண்களே ஒழுக்கக் கேடாக இருக்கின்றனர்...' என்கிறானே என் நண்பன்...
படித்த பெண்களிடம், 'நேச்சுரலாக' ஏற்படும் துணிவு, தன்னம்பிக்கை, முற்போக்குக் கொள்கைகள் ஆகியவற்றை உங்களது நண்பரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு, 'மேல்-சாவனிஸ்ட்' - ஆணாதிக்கவாதி என்று நினைக்கிறேன். இதனாலேயே, படித்த பெண்களுக்கு இருக்கும் குணங்களை, 'ஒழுக்கக்கேடு' என, கீழ்த் தரமாக விமர்சிக்கிறார்!
வி.முருகேசன், திண்டுக்கல்: இக்கால, 'டீன் - ஏஜ்'கள் காதல் விஷயத்தில் எப்படி?
ரொம்ப விபரமா நடந்துக்கிறாங்க... கணக்குப் போட்டு காதலிக்கிறாங்க! கணக்கு தப்புனா அது, ஆணோ, பெண்ணோ கழற்றிவிட தயங்குவதே இல்லை. அதற்காக வருத்தப்படறதும் இல்லே... தேறிட்டாங்க; கெட்டிக்காரங்க!

