
கொங்கு நாட்டு வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது; கணவனின் அன்பு கிடைக்காத பெண், எப்படி திசை மாறி செல்ல தூண்டப்படுகிறாள் என்பது குறித்து எழுதியுள்ளார். அத்துடன், தன்னைப் போல மற்ற பெண்களும் துன்பம் அடையக் கூடாது என்ற எண்ணத்தில், தன் கடிதத்தை வெளியிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்பு நண்பர் அந்துமணி அவர்களுக்கு,
உங்கள் அபிமான வாசகி மற்றும் ரசிகை, வணக்கத்துடன் எழுதுவது. கடந்த ஓர் ஆண்டாக என் எண்ணம், உணர்வு மற்றும் சோகங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்பட்டேன். ஆனால், இன்று தான் செயல் வடிவம் கொடுத்திருக்கிறேன்.
நான், ஒழுக்கமுள்ள, கடவுள் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். தற்போது வயது, 29. எனக்கு, 15 வயதில் திருமணம் நடைபெற்றது. 12 வயதில் ஒரு மகனும், ஒன்பது வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சிறிய வயதில் திருமணம் நடைபெற்றதால், கணவனிடம் எப்படி நடந்து கொள்வது என்று எனக்கும், மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று அவருக்கும் தெரியவில்லை.
அவருக்குத் தேவை பணமும், செக்சும் தான். முதல் இரவில் கூட நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தினமும் சண்டை; இடையில் நாலு, 'அபார்ஷன்' வேறு. என்னிடம் அன்பாக, ஆதாரவாக ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.
இரண்டு ஆண்டு கான்ட்ராக்டில் அரபு நாடு சென்றார், என் கணவர். எனவே, அம்மா வீட்டில் இருந்தேன். அப்போது, வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் பழகி வந்தோம். என் கணவரிடம் கிடைக்காத அன்பு, பாசம், ஆறுதல் இவரிடம் கிடைத்தது. என் கணவர் அனுப்பும் பணத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை இவருக்கு கொடுத்து விட்டேன்.
என் கணவர் திரும்பி வந்து, இந்த விபரத்தைக் கேள்விப்பட்டு என்னை அடித்து, மிரட்டி திருந்தும்படி கேட்டு, பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்றார். உறவினர்கள் அனைவரும் எனக்கு அறிவுரை கூறினர். அங்கேயும் என் காதலர் வந்து, 'நீயில்லா விட்டால் நான் இறந்து விடுவேன். நீ தான் என் உயிர்; உன் குழந்தைகளை, என் குழந்தைகள் போல் காப்பாத்துவேன்...' என்று, என் மனதை கரைத்து, அவருடன் வரும்படி அழைத்தார். நானும் புத்திகெட்டு, என் மகளுடன் சென்று விட்டேன்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன், என் காதலரின் பெற்றோர், தம்பி, என் அம்மா உட்பட 10 பேர் முன்னிலையில், கோவிலில் எனக்கு இவருடன் திருமணம் நடந்தது. அதற்கு முன், முதல் கணவரிடமிருந்து டைவர்ஸ் வாங்கி விட்டேன். இரண்டாவது திருமணத்தை ரிஜிஸ்டர் செய்யவில்லை; போட்டோவும் எடுக்கவில்லை. ஆறு மாதம் சந்தோஷமாக இருந்தோம்.
இப்போது, அவருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்டால், 'உன்னுடன் வாழ முடியாது; உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீ, உன் அம்மா வீட்டிற்குப் போ அல்லது எவனுடன் வேண்டுமானாலும் போ எனக்கு கவலையில்லை...' என்கிறார். முன்பு என்னிடம் காசு வாங்கி பிழைப்பு நடத்தியவர், 'இப்போது எனக்கு பணம் இருக்கிறது. யாரும் தேவையில்லை; அவள்தான் என் உயிர்...' என்கிறார்.
தற்போது, பையன் ஹாஸ்டலிலும், பெண் அம்மாவிடமும் வளர்கின்றனர்.
இவரையும் விட்டுப் போனால், ஊரார் மிக கேவலமாக பேசுவர் என்று, இவரின் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்; வீட்டு செலவுக்கு பணம் தருவதில்லை. அவளுக்கு, ஐயாயிரம் ரூபாய்க்கு சுடிதார், நைட்டி எடுத்துத் தருகிறார். நான் கேட்டால், 'நீயே இந்த வீட்டில் இரு; நான், எனக்கு ஆறுதல் கிடைக்கும் வீட்டிற்கு செல்கிறேன்...' என்று பயமுறுத்துகிறார். என் குழந்தைகளுக்காக இத்தனை அவமானங்களையும் பொறுத்து, இந்த கேவலமான வாழ்க்கை வாழ்கிறேன்.
சம்பந்தப்பட்ட பெண்ணிடம், என் நிலைமையை கூறினேன். 'அவரிடம், 'டைம் பாஸ்'காகத்தான் பழகுகிறேன்; என் மனதில் சலனம் இல்லை...' என்றாள்.
தற்சமயம், என் இரண்டாவது கணவர் என்னை விட்டுப் பிரிந்து, அவளுடன் ஐக்கியமாகி விட்டார். என் வாழ்க்கையை கெடுத்ததற்கும், ஏற்கனவே, நான் பணமாகவும், நகையாகவும் கொடுத்ததை திருப்பிக் கேட்டபோது, அவர் ஆபீசில் வைத்து, 'நீ தே... தொழில் செய்கிறவள்; உன்னை நான் திருமணமே செய்யவில்லை. நாலு ஆண்டுகளாக உன்னை வைத்திருந்தேன்; உன் கேரக்டர் சரியில்லாததால், உன்னை விட்டு பிரிந்தேன். ஆபீசில் வந்து என்னை, 'பிராத்தல்' பண்ண கூப்பிட்டதாக போலீசில் புகார் செய்வேன்...' எனக் கூறினார். நான் பயந்து போய், திரும்பி வந்து விட்டேன்.
இதை ஏன் தங்களுக்கு எழுதுகிறேன் என்றால், என் போன்று மனசை அடகு வைக்கும் பெண்களுக்கு இது, ஒரு பாடமாக அமையட்டும் என்று தான்!
படிக்க வேண்டிய வயதில் படிக்காமல், கண்ட சினிமாக்களை பார்த்து, சிறிய வயதில் திருமணம் செய்து கொள்ளும் என் போன்ற பெண்கள், என் கதையை அறிந்து திருந்த வேண்டும்.
முதலில் நல்ல கல்வியறிவும், சொந்தக் காலில் நிற்கும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் தாலி கட்டிய கணவனை பிரியக்கூடாது; அப்படியே பிரிந்தாலும், தனியே வாழ வேண்டும்.
- பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடிதம் எழுதிய வாசகிக்கு நன்றி!
வெளியே, ஆபீஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்பண்ணா, என் கண்ணில் பட்டார்.
ரொம்ப, 'ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன்.
அவரிடம் சந்தேகம் கேட்டு, ரொம்ப நாளாகி விட்டதே என்று, 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவர் சொன்னாரே... என்ன அர்த்தத்தில்...' என்று கேட்டேன்.
'எண்ணிக் கொள்' என்று ஆரம்பித்து, சொல்லத் துவங்கினார், குப்பண்ணா...
* ஐம்பொறிகளிலும் காதைத் தவிர மற்ற நான்கும், அதனதன் வேலைகளை அதிகமாக செய்தால், சோர்வடைந்து விடுகிறது. காதுக்கு மட்டும் அந்தச் சோர்வே கிடையாது.
* ஒன்பது வகை பக்திகளில் முதலில் நிற்பது சிரவணம்; இறைவன் புகழைச் செவியால் பருகுவதே பக்தியின் முதல் நிலை.
* செவியால் அழகு பெறும் சில விலங்குகள் முயல், கங்காரு. 'நெடுஞ்செவி குறுமுயல்' என்று பெரும்பாணாற்றுப் படையில் வருகிறது.
* காது ஓங்கார வடிவமுள்ளது என்றும், அதன் நிறத்தை வைத்து, பிற்காலத்தில், குழந்தையின் நிறத்தை உறுதி செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறாள், என் பாட்டி.
* 'காதளவோடிய கண்கள்' என்று பெண்களின் கண் அழகை, காதோடு சம்பந்தப்படுத்தி பாடுகிறான் கவிஞன்.
* வேதத்திற்கு, 'சுருதி' என்று பெயர்; பரம்பரையாகக் காதால் கேட்கப்பட்டு வந்ததால், இப்பெயர் ஏற்பட்டது.
* காதுகளில் அணிந்த குண்டலங்களை தானமாக வழங்கிய புகழ், கர்ணனுக்கே உரியது; கர்ணத்தால் புகழ்பெற்றதால் தான் அவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்ததோ, என்னவோ!
* காதில்லாப் பை, காதறுந்த ஊசி, காதில்லா ஜாடி, செவிவழிச் செய்தி, கர்ண பரம்பரைக் கதை - இந்த சொல் வழக்கு எல்லாம் காதின் பெருமையை உரைப்பதாகும்.
* 'தோடுடைய செவியன்' - இப்பாட்டு செவிக்குப் பெருமை தரும் திருஞான சம்பந்தரின் முதல் பாட்டு. 'காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்' என்கிறார் கம்பர். 'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் ஆவியினும் வாழினும் என்' என்று கடிந்துரைக்கிறார், திருவள்ளுவர்.
* நீலக் குதம்பை, தாளுருவி, வடுகவாளி, திருக்களாவம், குழை முதலியன பழங்கால காதணிகள். 'காதிலே அணி பூணுதல் கண்ணுக்கு ஒளி நல்கும்' - இது, தற்கால உடல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!
- என்று தன், 'விரிவுரை'யை குப்பண்ணா முடிக்கவும், நான் பெஞ்சில் இருந்து குதித்து, குறுக்குப் பாதையில் வேகமாக தப்பி ஓடினேன்.

