
ஆர்.லட்சுமி, ராமநாதபுரம்: ஒருவன், முட்டாளாவது எப்போது?
தன்னிடம் சிரிக்கச் சிரிக்க பேசுவோர் எல்லாம் தனக்கு வேண்டியவர்கள் என, நம்ப ஆரம்பிக்கும் போது!
ரா. ஜீவன், மதுரை: எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது சிறந்தது?
கொடுக்கல் - வாங்கல் விவகாரம் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது. ஏனெனில், கொடுக்கல் - வாங்கல் இருந்தால், பணத்துடன், நட்பும் போகும்!
* எம்.கிருபானந்தன், திண்டுக்கல்: எதைச் செய்ய நினைத்தாலும், பிறர் என்ன சொல்வரோ என்ற பயம் என்னுள் எழுகிறதே...
இந்த எண்ணம், முன்னேற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் சாகடித்துவிடும். மேலும், இந்த எண்ணம் கொண்டோர், பிறர் பயத்திலேயே எல்லாவற்றையும் இழந்து, 'அம்மா... தாயே...' என, பிற்காலத்தில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் அல்லது தற்கொலை செய்து கொள்வர்!
ஆர்.பிரகாசம், பொள்ளாச்சி: பி.எஸ்.சி., பட்டதாரி நான்; வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து மூன்றாண்டாகியும் வேலை கிடைக்கவில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...
வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும்; உங்களை நீங்களே நம்ப துவங்குங்கள்... தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் கண்களுக்குத் தெரியும்!
ஆதிநாராயணன், சென்னை: கொடிய துன்பமாக எதைக் கருதுகிறீர்?
திரும்பக்கொடுக்க முடியாத கடன். வறுமையை விட கொடியது கடன்; இது, தூக்கத்தைக் கெடுப்பதுடன், மன நிம்மதியை இழக்க வைக்கும்!
* எஸ்.தனலட்சுமி, சென்னை: 'படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை' எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு, 'டெபாசிட்' காலியாகி விடும்!
எஸ்.வேல் அரவிந்த், புதுச்சேரி: 'வாழத் தெரியாதவன் நீ...' என, நண்பர்கள் என்னை குறை சொல்கின்றனரே...
உங்களுக்காக உலகம் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருப்பதால் இப்படி கூறுகின்றனரோ!
* அ.கிருஷ்ணசாமி, கடலுார்: நம் நாடு முன்னேற...
தினந்தோறும் முளைக்கும், புதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும். ஆளும் கட்சி, எதிர் கட்சி என, இரண்டு கட்சிகள் தான், நாட்டில் இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை கலைத்து விட, சட்டம் இயற்ற வேண்டும்.
இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியரை வேலை நீக்கம் செய்ய வேண்டும்; பொதுமக்களில் இரண்டுக்கு மேல் பெற்றால், 'ரேஷன்' உட்பட அனுபவித்து வரும் எல்லா சலுகைகளையும் பறித்து விட வேண்டும். 'சோஷ லிசம்' என்ற பம்மாத்து கோஷத்தை ஒழித்து, கட்டுப்பாடான ஜனநாயகம் வேண்டும்.