
'அடுத்த வாரம் மும்பை போறேன்; தாதர் எக்ஸ்பிரஸில் ரிசர்வ் செய்திருக்கிறேன்...' என்றார், நடுத்தெரு நாராயணன்.
'ஜாக்ரதை... எவனாவது மயக்க பிஸ்கட் கொடுத்து, அகப்பட்டதை சுருட்டி, அம்பேல் ஆகிடப் போறான்...' என்றார் குப்பண்ணா.
உடனே, மயக்க மருந்துகள் பற்றி எனக்குத் தெரிந்த சரக்குகளை அவிழ்த்து விட்டேன்...
'அறுவை சிகிச்சையின் போது மயக்கம் உண்டாக, வாயுவாக அல்லது ஊசி மருந்தாக, மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
'நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், உடல் முழுவதும் உணர்ச்சி இழக்கச் செய்து, மயக்கம் உண்டாகும்படி மருந்து கொடுப்பர். இடுப்பில், தண்டுவடத்தில் ஊசிமூலம் மயக்க மருந்து செலுத்தினால், இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி உணர்ச்சியற்றுப் போகும்.
'இது தவிர பல், கைவிரல், கால்விரல் போன்ற உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்ய, உணர்ச்சி நீக்கும் மயக்க மருந்தை அப்பகுதிகளில் மட்டும் செலுத்துவர்.
'சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடு, ஈதர், குளோரோபாம், கொக்கயின் முதலியன முக்கியமான மயக்க மருந்துகள்.
'மயக்க மருந்தாக நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்தலாம் என்று, 1842ல் தெரிவித்தார், சர் ஹம்ப்ரி டேவி. முதன் முதலாக, இதை, அமெரிக்க நாட்டினர் பயன்படுத்தினர்.
'பின், ஜேம்ஸ் சிம்சன் என்ற ஆங்கிலேயர் குளோரோபாமை கண்டுபிடித்தார். ஆனால், அதைப் பயன்படுத்த பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
'இம்மயக்க மருந்து, 1853ல் விக்டோரியா ராணிக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின், பலரும் இம்மருந்தைப் பயன்படுத்த இசைந்தனர். 'மயக்க மருந்து கண்டுபிடிப்பு மருந்துவத் துறையில் சிறப்பான சாதனை...' என, முடித்தேன்.
ஆமோதிக்கும் விதமாக அனைவரும் தலையாட்டினர்.
'மன்னராட்சி முறை ஒழிந்து போனாலும், இங்கிலாந்து, அரேபியா, ஏன் நம் பக்கத்து நாடான மலேஷியாவில் கூட, இன்னமும் மன்னராட்சி முறைதானே நடக்கிறது...' என்றேன் குப்பண்ணாவிடம்!
'மலேஷியாவில் நடப்பது முழுமையான மன்னராட்சி அல்ல; மலேஷியா கூட்டாட்சி நாடு. மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், இம்மன்னரும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவர் தான்.
'முன்பு தனித்தனியாக ஆட்சி செலுத்திய அரசர்கள் இன்று ஒன்பது மாநிலங்களில் அதிபதிகளாக உள்ளனர். இவர்களுள் ஒருவர் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர், அமைச்சரவையும், நாடாளுமன்றமும் கூறும் ஆலோசனைபடி ஆட்சி செலுத்துவார்.
'பண்டைக் காலத்தில் மலேஷியாவில், இந்திய அரசர்களின் ஆட்சி நடந்துள்ளதை, இந்நாட்டில் கிடைத்துள்ள சமஸ்கிருதக் கல்வெட்டு களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
'மலாய் மொழியில் சமஸ்கிருத சொற்களும், தென்னிந்திய மொழிச் சொற்களும் பல உள்ளன. பின், இங்கு இஸ்லாம் மதம் பரவியது.
'போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் ஆகியோர் பல பகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி செலுத்தினர். இறுதியாக, ஆங்கிலேயர் வசமாயிற்று இந்நாடு.
'இரண்டாம் உலக போரின்போது, இந்நாட்டை ஜப்பானியர் கைப்பற்றினர். யுத்தத்திற்குப் பின், மீண்டும் இது, ஆங்கிலேயர் வசமானது.
'கடந்த, 1957ல் விடுதலை பெற்றபின், மலேயா, சராவாக், சபா ஆகிய மூன்று பகுதிகளும் இணைந்து ஒரே மலேஷியா நாடாக உருவானது...' என்றார் குப்பண்ணா; தெளிவானது, என் சந்தேகம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், சென்னையில் சங்கீத சீசன், களை கட்டும். அவ்வப்போது, 'மியூசிக் அகாடமியில் யார் கச்சேரி...' என்று குப்பண்ணாவை விசாரிப்பார், லென்ஸ் மாமா.
அன்றும், அப்படி விசாரிக்க, 'அகாடமி என்ற சொல் ஆங்கிலச் சொல்லே அல்ல; ஒரு புத்தகத்தில் படித்தேன்...' என்றேன்.
'அப்படியா?' என்றார், குப்பண்ணா.
'ஆமாம்... ஏதென்ஸ் நகரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், மாணவர்களுக்குப் பாடம் போதித்து வந்தார், கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோ.
'அந்த தோட்டம், அக்காடமஸ் என்ற கிரேக்க வீரனுடையது. அவன் பெயரை வைத்து, அப்பள்ளிக் கூடத்தை, 'அக்காடமி' என்று அழைத்தனர்.
'அக்காடமி என்ற சொல், பின், கல்வியாளர்களைக் கொண்ட குழுவையும், அவர்கள் கூடுமிடத்தையும் குறிக்கலாயிற்று. பிளாட்டோ, 2,300 ஆண்டுகளுக்கு முன் வசித்தவர் என்றாலும், அனேக நாடுகளில் அரசர்களாலும், அரசுகளாலும் அகாடமிகள் தோற்றுவிக்கப்பட்டன.
'பிரான்சில், பிரெஞ்ச் அகாடமியும், இங்கிலாந்தில், ராயல் அகாடமியும் பெயர் பெற்றவை. 50 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில். தமிழ் அகாடமியை நிறுவினர், தமிழறிஞர்கள்...' என்று, எனக்குத் தெரிந்த தகவலைக் கூறினேன்.
- லென்ஸ் மாமாவின் கேள்விக்குத்தான் விடை கிடைக்கவில்லை.
அரேபியன் இரவுகள் - இதன் மறுபெயர், ஆயிரத்தொரு இரவுகள். இது, பண்டைய நாட்டுக் கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் யாவும் இந்தியாவிலிருந்து, அரபு நாட்டுக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
பலர் கூறிய கதைகளின் தொகுப்பாக இருப்பினும், இவை யாவும் ஒருவரால் கூறப்பட்டது போல் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணை மணந்தார், ஷெக்ரியார் என்ற மன்னர்; அவள், மன்னனை ஏமாற்றி விட்டாள். சினமுற்ற மன்னன், பின், தான் மணம் செய்த ஒவ்வொரு பெண்ணையும், அடுத்த நாள் காலையில் கொன்று விடுவது வழக்கம்.
கடைசியில், ஷெக்ரசாத் என்பவளை மணந்தார். மறுநாள், காலையில், அவள் கொலை செய்யப்படுவதற்கு முன், தன் தங்கையை ஏவி, 'கடைசி கதை ஒன்று தனக்குச் சொல்ல, ஷெக்ரசாத்திற்கு அனுமதி தரவேண்டுமென்று' கேட்கச் சொன்னாள்; அரசனும் அனுமதித்தார்.
கதையை ஆரம்பித்தாள் ஷெக்ரசாத். அரசனும் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். கொலை செய்யும் நேரம் வந்தது. கதை முடியவில்லை. கதை கேட்கும் ஆர்வத்தில் மூழ்கி இருந்த அரசன், அடுத்த நாள் காலை வரை, கொலை செய்வதை தள்ளிப் போட்டான்.
கதையை ஒன்றன்பின் ஒன்றாகப் பின்னி, 1001 இரவுகள் கடத்தி விட்டாள், ஷெக்ரசாத். மன்னனும் கொலை செய்வதை, ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டு வந்தான்.
ஷெக்ரசாத்தின் கதைகளில் மனம் லயித்த அரசன், கொலை செய்யும் கட்டளையை திரும்பப் பெற்று, ஷெக்ரசாத்தை ராணியாக்கிக் கொண்டான்.
இக்கதைகள் யாவும் அரசர்களின் வீரச்செயல்கள் மற்றும் பிரபுகள், அடிமைகள், வியாபாரிகள், நடனமாதுகள் மற்றும் அபூர்வ மிருகங்கள் முதலியவைகளைப் பற்றி கூறுபவை.
அலிபாபாவும் 40 திருடர்களும் இக்கதைகளில் ஒன்று. இக்கதைகள் பல ஆசிய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!

