
* மூ.நாகூர், காஞ்சிபுரம்: ஜப்பான் மற்றும் சிங்கப்பூரின் இமாலய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?
நம்மூர் ஜனங்களைப் போல அரசியல் வெறித்தனம் அவர்களிடம் இல்லை; உழைப்பை மறந்து, போஸ்டர் ஒட்டுவதிலும், கொடி கட்டுவதிலும்,
'கட் - அவுட்' வைப்பதிலும் தம் நேரத்தை வீணாக்குவது இல்லை; அரசியல் ஊர்வலம், கூட்டங்களில் கலந்து, 'வாழ்க, ஒழிக' கோஷம் எழுப்பி தம்மையும், தம் நாட்டையும் ஒழித்துக் கொள்வதில்லை. அதனால், முன்னேறி விட்டனர்!
* சி.ஜெயராமன், நாகமலை: பழநி, சபரிமலை போன்ற தலங்களுக்கு, கடன் வாங்கி, மாலை போட்டு, திண்டாடி நிற்பவர்கள் பற்றி...
கடன் வாங்கி தம்மை தரிசிக்க வரும்படி எந்தக் கடவுளும் கூறவில்லை... அவரவர் ஊரில் உள்ள கோவில்களுக்கு போனாலே போதும். கடன் வாங்கி, மாலை போடுவோர், 'கொழுப்பு' கூடிப் போனவர்கள்; திண்டாடத்தான் செய்வர்!
எம்.ராஜூ, புதுப்பாளையம்: விளம்பரங்கள் இல்லை என்றால் பத்திரிகைகள் என்ன செய்யும்?
அப்படியே விலையை டபுள் ஆக்கி விடும். விளம்பர வருமானம் இருப்பதால் தான் விலையை, 'சப்சிடைஸ்' செய்து, வாசகர்கள் சுமையைக் குறைக்க முடிகிறது!
* பா.துர்கா, மதுரை: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?
கணவன் கையை எதிர்பார்க்காத பொருளாதார சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள்; அவளை, அடிமையாக நடத்த துணிவதில்லை, கணவன். அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியலி இன்டிபென்டண்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!
எம்.ராமசாமி, திருநெல்வேலி: மனைவி அடித்தால் வலிக்காது என்கின்றனரே... உண்மையா?
ப்ளீஸ் வெயிட்... லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்கிறேன்!
பி.ஆர்.சேகர், பல்லடம்: நண்பர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
நாம் துன்பத்தில் இருக்கும்போது, நம்மிடம் வருத்தப்படுவது போல் நடித்து, பிறரிடம் நம்மை கிண்டல் செய்து, நம் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள் - ஒன்று!
நம் துன்பத்தில் பங்கு கொண்டு, ஆனால், துன்பத்தை நீக்க, வழி செய்யத் தெரியாதவர்கள் - இரண்டு!
நம் துன்பம் நீங்க, என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்பவர்கள் - மூன்று.
- ஆக, நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உங்களது நண்பர்களில் மூன்றாம் வகை நண்பர்கள் எத்தனை, முதலாம் வகை எத்தனை?
கா.அஞ்சம்மாள், திருப்புல்லானி: என் மகன், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கிறான். ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறேன். எந்தத் தொழில் துறையில் இறக்கலாம்... யோசனை கூறுங்களேன்...
தரகர், - புரோக்கர், - கமிஷன் ஏஜன்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள். இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைத்து, 'மீடியேட்டர்' என, தங்கள் தொழில், பெயரை மாற்றி கொண்டுள்ளனர், இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர். இவர்களின் தொழில் தான், 'மினிமம் ரிஸ்க்கில்' ஏராளமாக, சுலபமாக காசு பார்க்கும் தொழிலாக உள்ளது.

