PUBLISHED ON : அக் 15, 2017

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள குறுக்கலான சந்து அது... தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள ஐந்து வீடுகளில், கடைசி இரண்டாவது வீட்டில், பெற்றோருடன் வசித்து வந்தான், விஸ்வம்.
அவனது பெற்றோர், கிராமத்தில் விவசாயக் கூலியாக, அரை வயிறு சாப்பாடுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த போதும், பொறுப்புடன் படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான், விஸ்வம்.
மகன் படிப்புக்காக, அவனது பெற்றோரும், சென்னைக்கே வந்துவிட்டனர். ஒரு அடுக்ககத்தில், அவனது தந்தைக்கு செக்யூரிட்டி வேலை கிடைக்க, அவரது சொற்ப வருமானத்தில், காலத்தை நகர்த்தினர்.
வங்கிக் கடன், புரவலர் ஆதரவு என்று, எப்படியோ மூன்றரை ஆண்டு படிப்பு முடிந்து விட்ட நிலையில், இன்று, அவனது கல்லூரியில், புகழ்பெற்ற, ஐ.டி., நிறுவனத்தின் சார்பாக, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தெருவில் உள்ள அடி பம்ப்லிருந்து தண்ணீர் பிடித்து, குறுகிய சந்தில், தடுமாறியபடி வந்த தாயிடமிருந்து குடத்தை வாங்கிய விஸ்வம்,''அம்மா... இன்னைக்கு எங்க காலேஜுல பெரிய, ஐ.டி., கம்பெனியில இருந்து, வேலைக்கு ஆள் எடுக்க வர்றாங்க. நிச்சயம் எனக்கு வேலை கிடைக்கும். இன்னும் ஆறு மாசத்தில் படிப்பு முடிஞ்சதும், கை நிறைய சம்பளம் வாங்குவேன். அப்ப, எல்லா வசதியும் இருக்கிற மாதிரி பெரிய வீடாக பாத்து போயிடலாம்; அப்புறம், உனக்கு இந்த தண்ணீர் தூக்குற வேலையெல்லாம் இருக்காது...'' என்று சிரித்தபடியே கூறினான்.
தன் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், எப்படியும் தேர்வாகி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான், விஸ்வம்.
நேர்காணலில், தயக்கமில்லாமல், அவன் விடையளித்ததால், தங்கள் நிறுவனத்துக்கு அவனைத் தேர்வு செய்து, சம்பளமாக, மாதம், 60 ஆயிரம் ரூபாயை நிர்ணயம் செய்தது, அந்த நிறுவனம்.
விஸ்வத்தின் மனதில், மகிழ்ச்சியின் ஊற்று, மத்தாப்பாய் பீரிட, கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சக மாணவர்களின் பாராட்டைப் பெற்று, தன் பெற்றோருக்கு ஸ்வீட்டோடு செய்தியை சொல்ல வேண்டும் என்று, நண்பர்களிடம் விடை பெற்றான்.
தன் நண்பனின் வெற்றி வாய்ப்பில் மகிழ்ந்த நண்பன் சலீம், ''விஸ்வா... நீ, வழக்கமாக போற பஸ் வர நேரமாகும். என் பைக்கில ஏறு; வீட்டுல விட்டுடறேன்...'' என்று கூறி, விஸ்வத்தை தன் வண்டியில் அழைத்துச் சென்றான்.
கையில் இனிப்பும், மனம் முழுவதும் இனிய நினைவுகளையும் சுமந்து வந்தான், விஸ்வம்.
''இந்த வேலை வாய்ப்பால், இரவெல்லாம் கண்விழித்து, செக்யூரிட்டி வேலை பார்க்கும் எங்கப்பாவுக்கு ஓய்வு கிடைச்சுடும். என் பெரியப்பா, சித்தப்பாவைப் போல், நானும் வீடு கட்டி, அதுல, எங்க அம்மா, அப்பாவ குடியமர்த்துவேன்...'' என்று, தன் எதிர்காலத் திட்டங்களை, நண்பனோடு பகிர்ந்து கொண்டே வந்தான்.
இருவர் மனதிலும் சந்தோஷ துள்ளல், கொண்டாட்டம் போட்டது. விஸ்வத்தை திரும்பித் திரும்பி பார்த்து பேசியபடியே, பிரதான சாலையில் வேகமாக வண்டியை ஓட்டினான், சலீம்.
கண்ணிமைக்கும் நேரத்தில், கிளை சாலையிலிருந்து, பிரதான சாலைக்குள் வேகமாக நுழைந்த சரக்கு வண்டி, பைக்கில் மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தான் அணிந்திருந்த தலைக்கவசத்தால் காப்பாற்றப்பட்டான், சலீம்.
ஆனால், தலையில் பலத்த அடிபட்டிருந்த விஸ்வத்தை காப்பாற்ற முடியவில்லை.
'இலவம் காத்த கிளியாக என்னை காக்க விட்டு, பட்டென்று ஒரு நொடியில் போய் விட்டாயே...' என்று தலையிலிலும், மார்பிலும் அடித்து, அழுது புரண்டாள், விஸ்வத்தின் தாய்.
பிரமை பிடித்து, உறைந்து போய் நின்றிருந்தார், விஸ்வத்தின் தந்தை. அவரது தோளைத் தட்டி அழைத்த வீட்டு உரிமையாளர், ''எல்லாம் முடிஞ்சு போச்சு; பாடிய அடக்கம் செய்ற வழியப் பாருங்க. ஒண்டிக் குடித்தனங்கள் இருக்கிற குறுகலான சந்தில், பிரேதத்தை வைக்க முடியாது. மத்தவங் களுக்கு சிரமமாயிடும்.ஆஸ்பத்திரியிலிருந்து நேராக மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துடலாம்...'' என்று, நாசூக்காக கூறினார்.
மகன் இறந்த துயரத்தை, கொட்டி தீர்ப்பதற்குள், புது துயரம் அவரை நெருக்கியது.
சாஸ்திர சம்பிரதாயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாது, தவறாகக் கடைப்பிடிப்போரால், மனிதாபிமானம் செத்து விட்டதைக் கண்டு, உள்ளுக்குள் குமுறினார்.
'இறந்த உடலை எங்கே எடுத்துச் செல்வது... சொந்த பந்தங்கள் பாத்து, இறுதி சடங்கு செய்யக் கூட முடியாத நிலையில் நிற்கிறேனே...' உள்ளம் கனலால் சூழப்பட்டு, கருகிக் கொண்டிருந்தது.
அண்ணன், தம்பி இருவர் வீடும் பெரிதாக இருக்கிறது. நம்பிக்கை துளிர் விட, சற்று தூரத்தில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அண்ணனிடம் சென்று, ''அண்ணா... பாடிய வாங்கணும்...'' மேலே பேச முடியாமல் குமுறினார்.
''ஆமாண்டா தம்பி... இப்பத்தான் உங்க அண்ணியும் போன் செய்தா. அடிபட்டு இறந்த உடல, வீட்டுக்கு கொண்டு போகக் கூடாதாம். அண்ணியும் வீட்டை பூட்டி, அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா. எந்த மயானத்துக்கு போறீங்கன்னு கேட்டா. அவங்க அம்மா வீட்டாரோட நேரா அங்க வந்திடுறாளாம்; சீக்கிரம் ஒரு முடிவு செய்யணும்.''
அண்ணனின் பதிலால், உள்ளம் தளர்ந்து துவண்டது. தம்பியை பார்த்தார். அவனோ,
தனக்கும், அதுக்கும் தொடர்பே இல்லை என்பது போல் எங்கேயோ வேடிக்கை பார்த்தபடி, நின்றிருந்தான். அவன் நின்ற தோரணையில் இருந்து அவன் எண்ணத்தையும், புரிந்து கொண்டார்.
ஒரு தாயின் வயிற்றில், ஒரு தொப்புள் கொடியில் பிறந்தவர்கள்; கிராமத்தில் ஒரே வீட்டில், ஒன்றாக வளர்ந்தவர்கள். இன்று, அவரவர் வீடு, குடும்பம், நல்லது, கெட்டது என்று பிரிந்து நிற்கின்றனரே!
'விஸ்வம்... உன் முகத்த பாத்து அழக்கூட முடியாம, எப்படிடா உன்னை மண்ணுக்குள்ள போடுவேன்... என்னை உட்கார வைச்சு, சோறு போடுவேன்னு சொன்னீயே... உனக்கு வாய்க்கரிசி போடக்கூட என்னால் முடியலயே...' குலுங்கி குலுங்கி அழுதார்.
அவர் அருகில் வந்த சலீமின் தந்தை அன்வர் பாய், அவரை ஆரத்தழுவி, துக்கத்தை பகிர்ந்து, ''ஐயா... உங்க பையனோட உடலை கிடத்த இடமில்லாமல், நீங்க தவிக்கிற தவிப்பை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியல.
''மனிதர்கள் எல்லாருடைய ஆன்மாவும் ஒன்று தான். அடிபட்டு இறந்த உங்க மகன் ஆன்மா சாந்தியடையணும். பையனோட உடல வாங்கிட்டு வாங்க... எங்க வீட்டுக்கு கொண்டு போவோம். ஒரு இஸ்லாமியனின் வீட்டுக்கு எப்படி போறதுன்னு தயங்க வேணாம்; அதை, உங்க வீடுன்னு நினைச்சுக்கங்க. உங்க சமய முறைப்படி, பையனோட இறுதிக் காரியத்தை குறைவின்றி முடிக்கலாம். எதுவும் யோசிக்காமல் என்னோடு வாங்க; வேனுக்கு ஏற்பாடு செய்துட்டேன்...'' என்றவரை, சகோதர வாஞ்சையுடன் கட்டி, துக்கத்தை கரைத்தார், விஸ்வத்தின் தந்தை.
அன்வர் பாயின் மனதில், 'எங்கள் இறைவா... நிச்சயமாக நீ, மனிதர்களை எல்லாம், எந்த சந்தேகமும் இல்லாமல், ஒருநாளில், ஒன்று சேர்ப்பவனாக இருக்கிறாய். நிச்சயம் அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்...' எனும் அர்த்தம் பொருந்திய, ரப்பனா இன்னக ஜாமிஉன் நாஸிலியவ் மில்
லாரைப பீஹீ இன்னல்லாஹ லாயுக் லிபுல் மீஆத்...
எனும் திருகுர்ஆன் வரிகள் ஒலித்தது.
அன்வர்பாய் வீட்டு கூடத்தில், விஸ்வம் உடல் கிடத்தப்பட்டது. இந்து முறைப்படி ஈமச்சடங்கை நடத்திக் கொண்டிருந்தார், ஓதுவார். அன்வர்பாயும், அவரது பன்னிரண்டு வயது மகனும், அதேகூடத்தில் ஒரு மூலையில் துண்டை விரித்து, விஸ்வத்தின் ஆன்மா சாந்தியடைய, தங்கள் முறைப்படி திருகுர்ஆனை ஓதி, தொழுகையில் மூழ்கினர்.
அன்வர்பாயின் மனைவி, விஸ்வத்தின் தாயை அணைத்து, ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் கோவிலில், துறவி ஒருவர் உரத்த குரலில்,
ஜாதி, குலம், பிறப்பு, இறப்பு, பந்தம், முக்தி
அரு உருவத் தன்மை, நாமம் ஏதும் இன்றி
எப்பொருட்டும், எவ்விடத்தும்
பிரிவு அறநின்று இயக்கம் செய்யும்
ஜோதியை, மாத்தூவொளியை
மனது அவிழ நினைவான துரிய வாழ்வைத்
தீது இல்லரம் ஆம் பொருளைத் திருஅருளே
நினனு ஆச் சிந்தை செய்வோம் - என, தாயுமான சுவாமியின் பாடலை உள்ளம் உருக பாடினார். அது, காற்றில் கலந்து வந்து, எல்லாரின் ஆன்மாவையும் நிறைத்தது.
சரோஜா சகாதேவன்
கல்வித்தகுதி: பி.எஸ்.சி.,
இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி, பரிசுகள் பெற்றுள்ளது. இவர் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. கடந்த, 14 ஆண்டுகளாக, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு வாசிப்பாளராக, ஆய்வு கட்டுரைகள் எழுத உதவுதல் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களையும், பாட புத்தகங்களையும் வாசித்து, ஒலிப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
சென்னை மாநில கல்லூரியின், 'ஒலிப்பதிவு செம்மல்' விருதையும், 'உரத்த சிந்தனை' இதழின், 'கண்ணொலி காவலர்' விருதையும் பெற்றுள்ளார்

