
* ப.தங்கம், ராமநாதபுரம்: எந்த சிறு சம்பவம் நடந்தாலும், விசாரணை கமிஷன் அமைத்து விடுகின்றனரே... இவை, எத்தனை நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்; இதனால், என்ன பயன்?
விசாரணை கமிஷன் என்றால், இனி, 'அல்வா' என்று பொருள் கொள்ளுங்கள். கூக்குரலிடும் வாய்களுக்கு உடனே, 'பிளாஸ்திரி' போட, காலங்காலமாக கையாளப்பட்டு வரும் பம்மாத்தே விசாரணைக் கமிஷன்.
கமிஷனின் முடிவு எப்போது வெளியாகும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது!
எஸ்.கவுரி, செங்கல்பட்டு: சமைப்பது ஒரு கலை என்றால், அதைச் சாப்பிடுவதும் ஒரு கலை தானே!
மிகச் சரியாக சொன்னீர்கள்... எனக்குத் தெரிந்த பலர், பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு எல்லாவற்றையும் கலந்து ஒரே வெட்டாக, வெட்டுவர்.
நாம் குழம்பு சாதத்தை முடிக்கு முன் மோர் சாதம் முடித்திருப்பர், சிலர். ருசி பார்க்காமல் அவ்வளவு அவசரமாக, சாப்பிடுவர். இன்னும் சிலர், அருமையான பால் பாயசத்தில் பூந்தி, வடை, அப்பளம் எல்லாவற்றையும் கலந்து, கையை ஒரு சுழற்று சுழற்றி, 'சர்' என உறிஞ்சுவர் பாருங்கள்... அத்துடன், ஊறுகாயையும் ஒரு நக்கு... சகிக்காது!
பி.மூர்த்தி, ஏற்காடு: பட்டமும், பட்ட மேற்படிப்பும் படித்த இளைஞர்கள், வேலையின்றி, தன்னம்பிக்கை இழந்து, சோர்வாக எதிர்காலத்தை நினைத்து பயப்படும் இன்றைய நிலை பற்றி...
தாம் படித்து விட்டோம் என்ற நினைப்பே, 'என் தகுதிக்கு ஏற்ற வேலை அல்ல இது...' என, கிடைக்கும் பல வேலைகளை, உதறித் தள்ளத் துாண்டுகிறது. பட்டங்களைப் பெற்ற இவர்களுக்கு உண்மையிலேயே பல விஷயங்களில் அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. இதை, அவர்கள் சுய சோதனை மூலம் அறிந்து கொண்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்!
மு.ரகு, கடலுார்: தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கலாமா?
வலியச் சென்று, தகுதிக்கு மீறிய பெண்ணை காதலித்தால், 'டேஞ்சர்!' பின்னி எடுத்து விடுவர். அவர்களாகவே முன் வந்தால், 'கன்சிடர்' செய்யலாம்!
* சி. மணிமேகலை, திருப்பூர்: தங்கள் குழந்தைகளை தாங்களே மட்டம் தட்டிப் பேசும் பெற்றோர் பற்றி...
மனோதத்துவம் அறியாதவர்கள்... இதனால், அக்குழந்தையின் மனநிலை எவ்வாறு பாதிப்படையும், அதனால், அவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுப் போகும் என்பதை அறியாதவர்கள்; இப்படிப்பட்டோர், சிறந்த மனோதத்துவ மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்!
* பி.சேதுராமன், சென்னை: இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?
கியூபாவில், பிரான்சில் ஏற்பட்டது போன்ற மக்கள் புரட்சி வெடித்து, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊரை விட்டு, நாட்டை விட்டே ஓடிப் போகும் விதத்தில் அமைய வேண்டும். இவ்விதப் புரட்சியில் ரத்தக் களறி ஏற்பட்டு, பல அப்பாவிகளும் உயிர் இழக்க வேண்டியது இருக்கும். ஆனாலும், ஒரு நாடே உருப்பட போவதால், இந்த இழப்புகளை தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்.

