
வாசகி ஒருவர், வித்தியாசமான சிந்தனையுடன் எழுதியுள்ள கடிதம் இது:
பெண் விடுதலை, பெண்ணீயம், என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் வீண் விரயமாக முடிவதற்கு காரணம், பெண்கள் செக்கு மாட்டைப் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்பதே!
முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது சமுதாயம் தம்மை ஒதுக்கி விடுமோ என்று அஞ்சுகின்றனர், பெண்கள்.
தற்போது, நாம் வாழும் வாழ்க்கையின் வரைமுறைகளை அமைத்தவர் யார்... ஒரு காலத்தில் முன்னேற வேண்டும் என்று உண்மையாகவே நினைத்த சில பேர் தாம். அதை புரட்சி என்று கொள்வதில் அர்த்தமில்லை. அவர்கள் யோசித்து செயல்படுத்தியவற்றில் சில குறைபாடுகள் இருக்கலாம்.
உதாரணமாக, வேதங்கள் யார் சொல்லியோ அல்லது யார் மூலமாகவோ தோன்றியவை தாம். (எல்லா மத வேதங்களையும் சேர்த்து தான்) ஏவாளின் குற்றத்தினாலேயே ஆதாம் பாவம் செய்து, மனித இனம் பாடுபட வேண்டியதாயிற்று என்பது இன்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். ஆனால், அது உண்மையா என்று நாம் யோசிப்பதில்லை.
ஏவாள், ஆதாமின் வலது கை போல இருந்ததால், சைத்தான் அவளை முதலில் வெற்றி பெற இவ்வாறு செய்திருப்பான் என்றோ, சிறு பிள்ளைகள் சண்டை போடும் போது பெரியவர்களிடம் இதற்கு காரணம், அவன் தான் முதலில் அடித்தான் அல்லது இவன் தான் அடித்தான் என்று சொல்வது போல, ஆதாம் ஏன் கடவுளிடம், முறையிட்டிருக்க மாட்டான் என்பதைப் பற்றி யோசிக்க கூட அஞ்சுகிறோம்.
சொல்பவரையும், சாமி கண்ணை குத்தி விடும் என்ற கதை தான். வடையும், காகமும் கதை மாறியது போல இதுவும் எப்போது மாறும்... மாறாது என்றே உறுதியாக கூறலாம். ஏனெனில், வேதம் என்ற அடிப்படை பயம்!
ஆண் மேல், பெண் கீழ் என்றொரு பிரச்னை ஆரம்பமானதற்கு காரணமே, மேலே சொன்ன சிறு சண்டை தான். தான் கஷ்டப்படுவதற்காக கவலைப்பட்டான், ஆண். அதற்கு காரணம், பெண் என்று அவனுள் ஒரு ஆதங்கம். அதன் தாக்கமே, இப்போதைய நிலை. ஒரு வகையில், இது, மனக் கோளாறு தான் என்பது என் வாதம். அதை, நிவர்த்தி செய்ய அப்போது யாருமில்லை. விளைவு... கடவுளின் சாபத்தோடு, ஆண் கொடுத்த தண்டனையும், ஏவாளை, இரட்டிப்பு தண்டனை பெற்றவளாக்கி விட்டது.
இதே மனக்கட்டுப்பாட்டுக்குள் (அதாவது, மெஸ்மரிசம் என்று கூட சொல்லலாம்) வளர்க்கப்பட்டவர்களாகவே ஆண்களும், பெண்களும் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால் தாழ்வு மனப்பான்மையின் தாக்கம், ஆரம்பம் முதல் இன்று வரை பெண்களிடம் வழிவழியாய் தொடர்கிறது. அதை பெரிதுபடுத்த நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பெண்களுக்கு அனேகம். தாம் குற்றம் செய்தவர் என்ற இந்த நிலை, ஆயுள், மரண தண்டனை கைதிகளின் நிலையை விட கொடியது. இதை, தம் வாரிசுகளுக்கு மகிழ்ச்சியுடன் அள்ளி அள்ளி வழங்குவதில், பெண்களுக்கு நிகர் பெண்களே!
ஆசிரியருக்கு பயத்தோடு கூடிய மரியாதை தருவது அந்த காலம். அன்புடன், கூடிய போதனையையும், அதே அன்போடு கூடிய மரியாதையை ஆசிரியருக்கு தருவதையுமே மாணவர் சமுதாயம் இன்று எதிர்பார்க்கிறது. எனவே தான் அம்மாதிரியான முற்போக்கு கருத்துகளை கொண்ட பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.
இதை போலவே தான் பெண் வர்க்கமும் எதிர்நோக்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொண்டாலும், வழி விட மட்டும், நம் மனம், முழு சம்மதத்தையும் வழங்குவதில்லை.
இதைப் போக்க, கல்வியால் முடியும் என்றால் அது தவறு. அது ஒரு அடிப்படை; ஒரு ஊன்றுகோல் தானே தவிர, அதுவே இதை நீக்கும் வழியாகி விடாது. ஏனெனில், கல்வி கற்றவர் எத்தனை பேர் முற்போக்குவாதிகள்? அதனால் தானே நாம், 'டிவி'யிலும், வானொலியிலும், 'உதவி செய் உன் மனைவிக்கு; பெண் குழந்தையை காப்பாற்று, பெண்ணாய் பிறப்பதற்கு காரணமும் நீ தான்...' என்று ஒலி, ஒளிபரப்ப வேண்டியுள்ளது.
மனரீதியான மாற்றத்தை இவ்வுலகில் புகுத்தினால் தவிர, சம அந்தஸ்து என்ற நிலை வராது. 'நீ பெரியவன், நான் பெரியவள்' என்ற தர்க்க ரீதியான நிலையே தொடரும் என்று நினைக்கிறேன். இம் மனரீதியான மாற்றத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை தங்கள் கருத்துகளின் மூலம் அறிய விரும்புகிறேன். மேற்கண்ட கருத்துகளில் தவறுகள் இருப்பின் ஒப்புக் கொள்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்...
- என்று எழுதியுள்ளார். இவரது எண்ணம் பற்றி உங்கள் கருத்து என்னவோ!
பொறுப்பாசிரியரை சந்திப்பதற்காக காத்திருந்தார், நடுத்தெரு நாராயணன். அவரது தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னாப் பையை வாங்கி, அதனுள் இருந்த புத்தகங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
குறளியம், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பாவை என்றெல்லாம் பெயர்கள் கொண்ட இதழ்களை சேகரித்து வைத்திருந்தார். அந்தப் புத்தகங்களை கையில் எடுத்து, நாராயணனின் முகத்தைப் பார்த்தேன்.
அவர் சொன்னார்...
'தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுவதாக சொல்லி, இது போன்ற சில சிற்றேடுகள் வருதுப்பா... இவையெல்லாம் தமிழக அரசால் ஆதரிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நூலகங்களில் வாங்கறாங்க... ஆனா, படிப்பதற்கு தான் வாசகர்கள் இல்ல...' என்றார்.
'படிப்பதற்கு வாசகர்கள் இல்லன்னு பொத்தம் பொதுவாகக் குறை சொல்றீங்களே... ரெண்டு நாள், 'ஓசி' குடுங்க; அப்படி என்ன தான் எழுதி இருக்குன்னு படிச்சுட்டு தர்றேன்...' என்றேன்.
'தாராளமா எடுத்துக்கப்பா... ஆனா, இதப் படிச்சிட்டு உனக்கு ஏதும் ஆச்சுன்னா, நான் பொறுப்பு கிடையாது; ஜாக்கிரதை...' என, எச்சரித்தார்.
அன்று மாலை, 'பாண்டியன் எக்ஸ்பிரசில்' பயணப்பட வேண்டி இருந்ததால், புத்தகங்களை ரயிலில் படித்துக் கொள்ளலாம் என எண்ணி, பெட்டியில் பத்திரப்படுத்தினேன்.
ரயில் கிளம்பியது; எடுத்துச் சென்ற புத்தகங்களில் இருந்து, 'தமிழ்ப்பாவை' என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
அந்தப் புத்தகத்தில் இருந்த ஒரு சிறுகுறிப்பு...
தமிழ் மொழியில் கொச்சை சொற்கள் பல; அவற்றுள், 'பாவக்காய்' குறிப்பிடத்தக்கது. 'பாவம்' என்னும் சொல் தமிழ்ச் சொல் அன்று! பொருள்: தீவினை. பாவக்காய் எனின், தீவினைக்காய் என்பது, திரள்பொருள். இத்தகு காயைத் தின்றால் என்ன மிகும்... தீவினையன்றோ! பாகற்காய் என்பதே சரியான சொல். தமிழ் நலம் பேணுவோர், பாகற்காய் எனப் பலுக்குக. பாவக்காய் என்று எந்த மடவன் பலுக்கினானோ!
அது போல், சாதம் என்பது தமிழன்று; சோறு என்பதே சரி. தமிழ் மக்(கு)கள், சோறு தாழ்வான சொல் என்றும், சாதம் உயர்மட்டச் சொல் என்றும் கருதி, சாதம் என செப்புகின்றனர். இவர்களின் அறியாமையை என்னவென்பது... நீங்கள் தமிழராயின், உடலில் ஓடுவது தமிழ்க் குருதியாயின், சோறு என்று சொல்வீராக!
புத்தகத்தை மடித்து வைத்தேன்; 'படிப்பதற்கு தான் வாசகர்கள் இல்லை...' என்று நாராயணன் கூறியதன் பொருள் அப்போது தான் புரிந்தது.
இப்படி, எழுதியதற்காக என்னை, 'தமிழ் துரோகி' என்று, 'பலுக்க' போகின்றனர். பலுக்கட்டும்; பரவாயில்லை!

