PUBLISHED ON : பிப் 13, 2011

*துரை.சண்முகம், மருதாடு: மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் சீட், 35 லட்சம் முதல் 50 லட்சமாமே... இவ்வளவு பணம் கொடுத்து இடம் வாங்கிப் படிப்பவர்கள் யாராக இருக்கும்?
லஞ்சம் வாங்கிக் கொழுத்த அரசு அதிகாரிகளின் வாரிசுகள், வருமான வரி, விற்பனை வரின்னாலே என்னவென்று தெரியாத வியாபாரிகளின், 'கொடுக்கு'கள், 20 பெட், 30 பெட் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர்களின் மகன், மகள்கள்... இவர்களால் மட்டுமே, 'பேமென்ட் சீட்' வாங்க முடியும். எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்களுக்கு சென்னை மருத்துவமனைகளில், 3000 முதல் 6000 ரூபாய் வரையே சம்பளம்!***
**பி.மகாலட்சுமி, பண்ருட்டி: இந்த உலகில் நல்லவன் யார், கெட்டவன் யார் எனக் கண்டுபிடிப்பது எப்படி?
உங்களைக் கண்டவுடன், 'என்ன சாப்பிடுகிறீர்கள்?' என ஒருவன் கேட்டால், அவன் நல்லவன்! 'என்ன விசேஷம்... எங்கே இந்தப் பக்கம்!' என்றால், ஓடியே போய் விடுங்கள்!***
*எஸ்.முத்துராஜ், போரூர்: சனி, ஞாயிறு இரு தினங்களிலும் எல்லா, 'டிவி' சேனல்களும் மகா போர் அடிக்கிறதே... ஏன்? விடுமுறை நாட்களில் தான், 'ஸ்பெஷல்' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்வர்... உங்களுக்கு சனி, ஞாயிறுகளில் போர் அடிக்கிறதா, இல்லையா?
வாரத்தின் எந்த நாளும் எனக்கு, 'போர்' அடிப்பதில்லை - காரணம், நான், 'டிவி' பார்ப்பதே இல்லை. தனி மனிதனின் நேரத்தை ஓசையில்லாமல் திருடும் வேலையைச் செய்கின்றன, 'டிவி' சேனல்கள். சனி, ஞாயிறுகளில், 'டிவி'யை, 'ஆன்' செய்யாதிருங்கள் - எவ்வளவு, 'பெண்டிங் ஒர்க்' முடிந்து இருக்கும் பாருங்கள்!***
**சி.ராமச்சந்திரன், சி.என்.பாளையம்: தற்பெருமை ஒரு மனிதனிடத்தில் எப்போது உண்டாகிறது; எதனால் உண்டாகிறது?
நிறைகுடமாக இல்லாதவன் தற்பெருமைக் காரனாக இருப்பான்... இது, அவன் மடையனானதற்கு அடுத்த நாள், அழிவிற்கு முந்தைய நாளில் உண்டாகிறது.***
*எல்.விஸ்வேஸ்வரன், பாலப்பட்டி: திருமண வயதில் இருக்கும் ஆண்களுக்கு சரிசமமான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கின்றனரா?
இப்போது இல்லை! 100 ஆண்களுக்கு, 94 பெண்கள் தான் உள்ளனர். இதுவே, 1945-'49ம் வருடங்களில், 100 ஆண்களுக்கு, 112 பெண்கள் இருந்தனராம். 19ம் நூற்றாண்டில் மணமகனுக்கும், மணமகளுக்குமிடையே வயது வித்தியாசம் சராசரியாக ஏழு வருடங்கள் இருந்ததாம். அதுவே, இப்போது, 3.5 வருடங்களாகி விட்டதாம்.***
*எல்.நாராயணன், நெசப்பாக்கம்: வெளிநாட்டு நிறுவனங்களின் வரவால், நம் நாட்டு தொழில்கள் நலிவடைகிறதாமே!
உண்மைதான்! ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடிக்கு மேல் நம் பணத்தை, தத்தமது நாட்டுக்கு அள்ளிச் செல்கின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். 70 பைசாவுக்கு தயாராகும் கொக்கோ கோலா... 10 ரூபாய்க்கு விற்கின்றனர். அடுத்த சில வருடங்களுக்காவது நம் நாட்டு தயாரிப்பையே நாம் வாங்கினால், பொருளாதாரம் சீராகும்.***
*எம்.சதீஷ்குமார், கோவை: நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளம் - கிராமத்து நீச்சல் குளம் - நீச்சலடிப்பதில் உள்ள வேறுபாடு...
டூ-பீஸ் வெள்ளை வெளேர் அழகிகளின் நீச்சல் லாவண்யத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்; பெருமைப்படுவர்... மேலும், மேலும் சாகசம் செய்து மகிழ்விப்பர். இது, ஐந்து நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளங்களில்! கிராமத்து குளத்தில் சுட்டு சுண்ணாம்பாக்கி விடுவர் என்கிறார் லென்ஸ் மாமா. ***
