PUBLISHED ON : பிப் 13, 2011

இதுவரை:
மதுரிமாவை, லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் நரேன். நரேனின் வீடு மதுரிமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தம்பதியிடம், மதுரிமாவை அறிமுகம் செய்து வைத்தான் நரேன் —
நரேன் அதிர்ந்து போகும்படியாக அப்படி என்ன சொல்லி விட்டாள் மதுரிமா? மதுரிமாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், தேனில் நனைந்த பலாச்சுளை போல, நரேனின் செவிகளை சந்தோஷப்படுத்துபவை ஆயிற்றே! ஆனால், இப்போது அவள் இதழ் மலர்ந்து உதிர்ந்திருக்கும் வார்த்தைகள்...
அதுவும், அவன் மனதுக்கு ரம்மியமான மதுரிமாவின் அழகிய கைகளின் பிடியில் சிறையுண்டு கிடக்கும் இந்நேரத்தில்...
'இப்போது கேட்ட வார்த்தைகள், என் மதுரிமா பேசியதா? இவளது வார்த்தைகள், என் இதயத்தில் பூமழை அல்லவா தூவும்? ஆனால், இப்போது என் மூளைக்குள் அம்புகளாய்த் தைக்கிறதே... இவளைப் பற்றி, இதுவரை நான் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்க வைக்கிறதே...'
நரேன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் வியாபார விஷயமாக, அவன் ஒருமுறை லண்டன் சென்றிருந்த போது, வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, லண்டனில் பிரசித்தி பெற்ற நாடகக் கொட்டகை ஒன்றில், ஷேக்ஸ்பியரின் நாடக விழாவிற்கு சென்றான். அந்நாடகத்தில் ஒரு பாத்திரம் உச்சரித்த அந்த வார்த்தைகள்... அந்த வசனம் - 'வார்த்தைகள் பொறுக்கிகள்...' ஆம், 'வேர்ட்ஸ் ஆர் தி ராஸ்கல்ஸ்!'
'வார்த்தைகள் பொறுக்கிகள்...' என்பது, ஷேக்ஸ்பியரின் அந்த ஒரு கதாபாத்திரத்திற்கும், அந்த ஒரு காட்சிக்கும் மட்டுமே பொருத்தமான ஒன்றா அல்லது அனைவருக்குமே, அனைத்து நேரங்களிலுமே பொருந்தும் ஒன்றா? அந்த வார்த்தைகள், நரேனை எவ்வளவு நேரத்திற்கு யோசிக்க வைத்தது? உண்மையிலேயே பொருள் நிறைந்த வசனம் தான் அது. சில நேரங்களில், சிலரது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள், கேட்பவரை எந்த அளவுக்குப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
அப்படி என்ன வார்த்தைகளை சொல்லி விட்டாள் மதுரிமா? கைவளை நொறுங்க, நரேனை அணைத்தபடி அவள் சொல்லிய வார்த்தைகள்...
'உண்மையிலேயே செக்ஸ் என்பது, கொஞ்சம் வித்தியாசமான விஷயம் தான்...' - மதுரிமாவின் இதழ் உதிர்ந்த வார்தைகள் இவைதான்.
இந்த வார்த்தைகளை வேறு யார் சொல்லி இருந்தாலும், 'ஆமாம்' என்று சொல்லிவிட்டு, அவன் பாட்டுக்குப் போயிருப்பான். சொல்லி இருப்பவள் அவனது அன்பிற்குரிய மனைவி. அமெரிக்க நாகரிகத்தை வரித்துக் கொண்ட எத்தனையோ கிரீன் கார்டு அழகுப் பெண்களை நரேனுக்குத் தெரியும். இருப்பினும், மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடுக்க, தமிழ்நாட்டுப் பெண்ணைத்தான் அவன் தேடி, ஓடி வந்தான். அதுவும், அவனது பெற்றோர் விருப்பப்படி, அவர்கள் தேர்வு செய்த ஒரு பெண்ணுக்கே தாலி கட்டவும் அவன் சம்மதித்தான்.
நரேன் இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு, அவனைப் பொறுத்தவரையில் ஒரு காரணம் இருந்தது. மனைவி பற்றியும், செக்ஸ் பற்றியும், அவனுக்குள் ஒரு தீர்மானத்தை உருவாக்கி வைத்திருந்தான். மதுரிமா சொல்லியதைப் போல, செக்ஸ் என்பது, உண்பது, உறங்குவது போன்ற நம் அன்றாட வாழ்க்கையின் பிற நிகழ்வுகளைப் போல ஒரு சாதாரண விஷயம் அல்ல. செக்ஸ் என்பது, ஒவ்வொரு ஆணும், பெண்ணும், உண்மையிலேயே, கொஞ்சம் வித்தியாசமாக அணுக வேண்டிய விஷயம் என்பதை நரேன் உணர்ந்து எடுத்த தீர்மானம்.
கணவன் - மனைவி என்ற உரிமையின் காரணமாக, இந்த உறவு வெறும் கடமையாக அமைந்துவிடக் கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். இந்த விஷயத்தில், மனைவி எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி, சில எதிர்பார்ப்புகளை தனக்குள் உருவாக்கி வைத்திருந்தான் நரேன்.
தனக்கு மனைவியாக வரும் பெண்ணுக்குள், இதுபற்றிய ஆசைகள் நிறையவே இருக்க வேண்டும். அதே நேரத்தில், ஆசைகளின் வெளிப்பாடுகள், சுலபமான ஒன்றாக இருந்துவிடக் கூடாது. பெண்ணுக்கே உரிய நாணத்தோடும், அச்சத்தோடும், தன் ஆசைகளை ஒரு கட்டுக்குள் நிறுத்தி, அவள் கொஞ்சம் விலகியே நிற்க வேண்டும்.
கணவன், அவளது அச்சத்தையும், நாணத்தையும், தவிப்பையும் ரசித்தவனாக, மனைவியிடம் அதற்காக யாசிக்க வேண்டும். அதுபோன்ற நேரத்தில், இதுபோன்ற யாசிப்பும், கெஞ்சலும், கொஞ்சலும் எத்தனை சுகமான விஷயம். எதிர்ப்பு என்பதன் பெயரால், மனைவி செய்யும் பொய்யான பாவனையை உடைக்க, துன்பம் போன்ற இன்பத்திற்காக, கணவன் கையாளும் மீறுதல்களே இந்த உறவை சுகப்படுத்தும் என்பதே நரேனின் எண்ணமாக இருந்தது.
இதற்காகத் தானே அவன் மதுரிமாவை மனைவியாகத் தேர்வு செய்தான். மதுரிமா, தமிழ் மண்ணில் பிறந்தவள். ஐதீகமும், ஆசாரமும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தவள். உன்னதக் கலைகளில் ஒன்றான நாட்டியத்தில் ஈடுபாடு மிக்கவள். மதுரிமாவிற்குள் இருக்கும் செக்ஸ் பற்றிய உணர்வுகள், ஒரு கட்டுக்குள் நின்று, தன் ரசனைக்கேற்றதாக இருக்கும் என்பது தானே அவனது எதிர்ப்பார்ப்பு.
இதோ அவனது எதிர்பார்ப்பை, அந்த கட்டுகளை, மதுரிமா உடைக்கிறாளே...
'<உ<ண்மையிலேயே, செக்ஸ் என்பது, கொஞ்சம் வித்தியாசமான விஷயம்தான்!'
'திருமணமான ஒரு சில நாட்களிலேயே, அவள் உணர்ந்து கொண்ட ஒன்றை, வெளிப்படையாக சொல்லி விட்டாள். ஒருவேளை, தன்னைப் போலவே மதுரிமாவும், திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் பற்றி யோசித்திருப்பாளோ? கனவுகள் கண்டிருப்பாளோ? வருங்காலக் கணவன் பற்றிய எதிர்பார்ப்புகள் - இந்த விஷயத்தில், இவளுக்குள்ளும் இருந்திருக்குமோ? வித்தியாசம் என்று இவள் எதைச் சொல்கிறாள்?'
மதுரிமா இயல்பாகச் சொல்லிய ஒரு சில வார்த்தைகள், அவனுக்குள் மிகப்பல கேள்விகளை அடுக்கடுக்காய்த் தோற்றுவித்தன.
அவன் தன்னைப் பற்றி வேறு ஒரு கோணத்தில் யோசிக்கிறான் என்பதை அறியாதவளாக, ''என்ன... திடீர்ன்னு சீரியசாயிட்டீங்க... எதைப்பற்றி யோசிக்கிறீங்க?'' என்றாள் மதுரிமா.
''இப்ப நீ சொன்னியே... அதப்பத்தித்தான் மது!''
''அப்படி நான் என்ன பெரிசா சொல்லிட்டேன்?''
அவனை மேலும் இறுக்கி அணைத்து, சிரித்தபடி கேட்டாள் மதுரிமா.
நரேன் உஷாரானான்.
'இவளைப் பற்றிய தன் யோசனைகளை இப்போதே சொல்லிவிடக் கூடாது. இவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இவளை இன்னும் கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும். இவள் மீது எனக்கு வந்திருக்கும் சந்தேகத்தைப் போல, இவளுக்கு என் மீது எந்தவித சந்தேகமும் வந்துவிடக் கூடாது!'
அவளது கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், பொய்யாக சிரித்தான் நரேன்.
''நான் கேட்டதுக்கு சிரிப்பு தான் பதிலா?''
பொய்யான கோபத்துடன் சிணுங்கினாள் மதுரிமா.
அவளின் சிணுங்கல் ரசனையாக இருந்த போதிலும், அவனது ரசனையை தற்காலிகமாகத் தள்ளி வைத்தான் நரேன்.
''செக்ஸ் என்பது வித்தியாசமான விஷயம் என்று நீ சொல்லியதை நினைத்துப் பார்த்தேன்; சிரிப்பு வந்தது!''
''இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?''
''கரெக்ட்... இது சிரிப்பிற்குரிய விஷயம் அல்ல. கொஞ்சம் சீரியசான விஷயம்தான். சரி... எதை நீ வித்தியாசம் என்கிறாய் மது?''
''எதை எதையோ ஆராய்ந்து சொல்வதற்கு, நான் உங்க அளவுக்கு உலகம் சுத்தின வாலிபன் இல்லை. நான் உண்டு, என் நாட்டியம் உண்டுன்னு, ஒரு சின்ன வட்டத்திலேயே சுத்திக்கிட்டிருந்தவள்...''
''என் கேள்வி உன்னைப் பத்தினது இல்ல மது... செக்ஸ் பத்தி நீ சொன்ன உன்னோட கருத்தைப் பற்றியது.''
சில விநாடிகளுக்கு மவுனமாக இருந்தாள் மதுரிமா. 'ஏதோ ஒரு உணர்விலும், அதன் வேகத்திலும், அவசரப்பட்டு எதையாவது சொல்லி விட்டோமோ...' என யோசித்தாள்.
'இல்லை... எதையும் தான் தவறாக சொல்லி விடவில்லை. தான் உணர்ந்த ஒன்று, தனக்குள் தற்போது கொண்டு வந்திருக்கும் மாற்றத்தைப் பற்றித்தான் இவனிடம் வெளிப்படையாகச் சொன்னேன். இதில், தான் அஞ்சுவதற்கோ, வருந்துவதற்கோ ஒன்றுமில்லை! தான் உணரும் ஒன்றை, கணவனிடம் சொல்லாமல் இருப்பதுதான் தவறு. இது எனக்குள்ள கருத்துச் சுதந்திரம். தலைமுறை இடைவெளி என்பதில் நிகழ்ந்துள்ள ஒரு ஆரோக்கியமான நல்ல மாற்றம் இது...'
இந்த எண்ணத்தில், தன்னுள் எழுந்த தைரியத்தில், ''செக்ஸ் வித்தியாசமான ஒரு விஷயம் என்று நான் என்னை வைத்துத்தான் சொன்னேன்...'' என்றாள் மதுரிமா.
''உன்னை வைத்தா... புரியல மது...''
''யெஸ்... என்னை வைத்துத்தான். திருமணத்திற்கு முன், நாட்டியம் என்ற ஒன்றைத் தவிர, என் சிந்தனையை வேறு எதுவுமே ஆக்கிரமித்தது இல்லை. ஆனால், இப்போது...''
நரேனுக்குள் அவசரமும், ஆர்வமும் அதிகரித்தது.
''சொல் மது... இப்போது உனக்குள் என்ன நேர்ந்திருக்கிறது?''
அவளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அவனுக்குள் அதிகரித்தது.
''இப்போது நீங்களும், நானும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், என் நாட்டிய சிந்தனைகளை மெல்ல, மெல்ல மீறப் பார்க்கின்றன. இது ஒரு சந்தோஷமான விஷயம்தான் என்றாலும், வேறு எந்த விஷயமும், எனக்குள் இந்த அளவிற்கு ஊடுருவியதில்லை...'' என்று, ஒரு சிறிய வெட்கத்துடன் சொன்னாள் மதுரிமா.
''சோ... இதுபற்றி... ஐ மீன்... என்னைப் பற்றியும், நம் இந்த உறவு பற்றியும் நீ யோசிக்க ஆரம்பித்து விட்டாய்... அப்படித்தானே மது?''
நரேனின் இந்த கேள்வி, மதுரிமாவை யோசிக்க வைத்தது.
மதுரிமா சாதாரணப் பெண் அல்ல... கணவன் - மனைவிக்கிடையே, இதுவும் ஒரு வழக்கமான நிகழ்வு என ஏற்பவள் அல்ல...
அதன் தாக்கம் பற்றி, அதன் ஆளுமை பற்றி சிந்திக்கிறவள். இவள் சிந்தனை இதோடு நின்று போகுமா? நிச்சயம் நிற்காது. மேலும், விரிவடையும். இந்த சிந்தனை மேலும், மேலும் நீண்டு கொண்டே போகலாம். நாளடைவில், இதன் வெற்றி, தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் பற்றியும் அமையலாம்.
இது மிகவும் ஆபத்தான ஒரு சிந்தனை அல்லவா? கணவன் - மனைவிக்குள் தோன்றும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும், இதுதானே அடிப்படை காரணம்.
உண்மைதானே... நதிமூலம், ரிஷிமூலம் போல, எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக அமைவது இதுதான்.
ஆனால், இதுதான் காரணம் என்று வெளியே சொல்ல, நாம் எல்லாருமே வெட்கப்படுகிறோம். கவுரவம், அவமானம் என்ற முலாம் பூசி, உண்மையை மறைக்கப் பார்க்கிறோம். இதை ஒப்புக்கொள்ளும் தைரியமோ, நேர்மையோ அற்றவர்களாக மாறிப் போகிறோம். பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணத்தை புறம் தள்ளிவிட்டு, தீர்க்கக்கூடிய சாதாரண விஷயங்களைக் காரணங்களாக்கி விலகி நிற்கிறோம். இதன் அதிகபட்ச விளைவாக, விவாகரத்து வரையிலும் போகிறோம்.
மனித வாழ்க்கையின் சோகமும் இதுதான்; சுவாரசியமும் இதுதான்.
''என்ன... நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா?''
''நோ டியர்... இத்தனை வெளிப்படையாகப் பேசியதற்காக, உண்மையிலேயே நான் உன்னைப் பாராட்டுகிறேன்...''
''வெறும் பாராட்டு மட்டும்தானா... பரிசு ஒன்றும் கிடையாதா?''
மதுரிமாவின் இயல்பான இந்த கேள்வியும், நரேனை சற்று மிரள வைத்தது.
'என்ன பரிசு கேட்கிறாள் இவள். எதைப் பரிசாகக் கேட்கிறாள்? ஒருவேளை, கணவன், மனைவியிடம் யாசிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்த ஒன்றையே, இவள் என்னிடம் பரிசாக யாசிக்கிறாளோ?' சந்தேகத்துடன் கூடிய ஒரு லேசான பயம் அவனுக்குள் எழுந்தது.
'போதும்... இந்தப் பேச்சை இன்றைக்கு இத்துடன் தவிர்க்க வேண்டும். இதற்கு மேலும் வளர்ப்பது நல்லதல்ல. அதன் மூலம், இந்த நெருக்கமான நேரத்தில், நான் எதிர்பார்க்கும் அந்த அற்புதமான ஒரு விஷயம் தவிர்ந்து போகலாம்!'
''உனக்கில்லாத பரிசா... என்ன பரிசு வேண்டும் மது?''
அவனது பிடி இன்னும் கொஞ்சம் இறுக்கமாக, அவள் இதழ் மலர்த்தி சிரித்துவிட்டு, ''பரிசு என்னவென்று புதிராக சொல்லட்டுமா?''
''புதிரா... என்ன புதிர்?''
''நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே...'' அவள் அவனது காதுக்கருகில், அவளது இதழ்களைக் கொண்டு வந்து மெதுவாகப் பாடினாள்.
அவனுக்குப் புரிந்தது. அவள் பாடிய அந்த பழைய சினிமாப்பாட்டில், அடுத்த வரியில் அவள் போட்ட புதிருக்கான விடை இருக்கிறது.
''அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே...''
குழந்தை, அதன் காரணமாக அடையப் போகும் தாய்மை. அது கொண்டு வந்து சேர்க்கப் போகும் பெருமை. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் விலக்க முடியாத கனவு.
நரேனுக்கு, அவள் கேட்கும் பரிசு, அந்த நேரத்திற்கு மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றியது. அதே நேரத்தில், 'இவளது ஆசையும், கனவும், அந்தக் குழந்தை என்பதன் மீதானதா அல்லது அதற்கு காரணமான செக்ஸ் என்பதன் மீதானதா?' என்று, மனதுக்குள் வேறு விதமான ஒரு சிந்தனையும் எழுந்தது.
அவனது மனம், செக்கு மாட்டைப் போல, ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் சுழன்று வந்து நின்று, அசை போட்டது.
உள் மனதை மறைத்து, உடல் போட்டுக் கொண்ட வேஷத்தோடு, மதுரிமாவுடன் அவன் ஐக்கியமானான்.
அதன்பின் ஒருவாரம் ஓடிப்போனது. நேரம் போதவில்லை எனும் விதமாக, மதுரிமாவின் ஆஸ்திரேலிய பயணங்களுக்கான ஏற்பாட்டு வேலைகளில், இருவரும் மும்முரமாக இருந்தனர்.
கலை நிகழ்ச்சிக்காக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, மதுரிமாவை விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டிற்குத் திரும்பினான் நரேன்.
மதுரிமா இல்லாத வீடு வெறிச்சோடி கிடப்பதைப் போல, ஒரு பிரமை அவனுக்குள் ஏற்பட்டது. களைப்போடும், சோர்வோடும் சோபாவில் சாய்ந்தபடி, கொஞ்ச நேரம், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த பின், படுக்கை அறைக்கு வந்தான்.
தனிமை, மதுரிமா இல்லாத ஒரு வெறுமை... கட்டிலில் தனியே படுப்பதற்கே அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
அந்த நேரத்தில், அவனது மொபைல் ஒலித்தது. ஒருவேளை மதுரிமாவாக இருக்குமோ... அவன் அவசரமாக போனை எடுத்தான்.
''ஹலோ... குட் ஈவினிங்... என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?''
பேசியது மதுரிமா இல்லை... ஏர் ஹோஸ்டஸ் கவிதா. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத குரல்.
''குட் ஈவினிங்... சும்மாதான் இருக்கேன்...''
''சும்மா இருக்கீங்களா... ஒய்... போர் அடிக்கல... டூ சம்திங்...''
சொல்லிவிட்டு, கவிதா இசையாக சிரிப்பது போனில் ஒலித்தது.
''சம்திங்... வாட் டூ யூ மீன்?''
''சம்திங் மீன்ஸ், சம்திங்... தனிமை ரொம்ப கஷ்டப்படுத்தும் நரேன்...''
''நான் தனியே இருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''
''தெரியும்...''
''அதான் எப்படித் தெரியும்ன்னு கேட்கிறேன்?''
''நான் ஒரு ஏர் ஹோஸ்டஸ் நரேன். என்னோட டியூட்டியே ஏர்போர்ட் சம்பந்தப்பட்டது தானே... உங்க ஒய்ப் ஆஸ்திரேலியாவுக்கு விமானத்துல பறந்து போறதை, உங்கள மாதிரியே நானும் பார்த்துக்கிட்டு இருந்தேன்...''
மீண்டும் அதே சிரிப்பு.
''ஐ சீ... எங்கிட்ட பேசி இருக்கலாமே...''
''அதான் இப்ப பேசறேனே... எதை, எப்போது, எப்படி பேசணும்ன்னு, எனக்கு சில ரிசர்வேஷன்ஸ் இருக்கு...''
''நீ சொல்றது வித்தியாசமா இருக்கு... எனி ஹவ்... தேங்க் யூ பார் காலிங் மீ...''
''இட்ஸ் ஓ.கே., உங்க மனைவி ஆஸ்திரேலிய டூர் முடிஞ்சு வர்றதுக்கு கொஞ்ச நாள் ஆகுமே... அதுவரைக்கும்...''
வார்த்தைகளை முடிக்காமல், சற்று நிறுத்தினாள் கவிதா. நரேன், அவனையும் மீறி, அவனுக்குள் ஏதோ ஒரு உஷ்ணம் பரவுவதைப் போல் உணர்ந்தான்.
''அதுவரைக்கும்...''
''எனக்கும் நேரம் போக மாட்டேங்குது... உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லேன்னா, நாம மீட் பண்ணலாமா... டோன்ட் மிஸ்டேக் மீ... நான் கட்டாயப்படுத்தல... உங்களுக்கு விருப்பமிருந்தா... ஜஸ்ட் டு பாஸ் டைம்...''
முதல் முறையாக நரேனுக்கு, கவிதா வித்தியாசமாகத் தெரிந்தாள்.
'ஒருவேளை அவள், நான் தனியே இருப்பதற்காக இரக்கப்பட்டு, என் நேரம் போக, என்னோடு பேசுவதற்காக ஆசைப்படுகிறாளோ... ஆசை, பேசுவதோடு நின்று விடுமா? எந்தப் பெண், எந்த நேரத்தில், எந்த விதமாக மாறுவாள் என்பது எவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் அல்லவா?'
''என்ன பதிலையே காணோம்?''
''ஓ.கே., நாளைக்கு மீட் பண்ணுவோம். எங்கே, எப்போன்னு, நானே இந்த நம்பர்ல கூப்பிடுறேன்...''
''குட் நைட் நரேன்... ஸ்வீட் டிரீம்ஸ்... உங்க மதுரிமாவோட...''
சிருங்கார சிரிப்போடு, போனைத் துண்டித்து விட்டாள் கவிதா. அவளைப் பற்றிய யோசனையுடன், மேஜை மேல் இருந்த தண்ணீரை எடுக்க நரேன் திரும்பிய போது, மதுரிமா விட்டுச் சென்ற அவளது டைரி, அவன் கண்ணில் பட்டது.
— தொடரும்.
