PUBLISHED ON : பிப் 27, 2011

*கா.பாலன், திண்டுக்கல்: நம்மிடமுள்ள, 'அவுத்து விட்ட ஜனநாயகத்தை' விட, கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்தான் நம் நாட்டுக்கு தேவை என்கிறேன்... உங்கள் கருத்து என்ன?
நூத்துக்கு நூறு உங்களுடன் ஒத்துப் போகிறேன்! 'இது ஜனநாயக நாடு; என்ன வேண்டுமானாலும் செய்வேன்...' என்ற திமிரில், அடுத்தவர் சுதந்திரத்தை, நிம்மதியை உருக்குலைக்கும் ஜனநாயகம் தேவையில்லை. சிங்கப்பூரில் இருப்பது போன்ற கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் நம்மூரில் நிச்சயம் தேவை. சுபாஷ் சந்திரபோஸ் சொல்லி இருக்கிறார்: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின், 20 ஆண்டுகள் இந்தியர்களை வெளி உலகத் தொடர்பில்லாமல் வைத்திருந்து, அவர்களை ஒழுக்கம் - கட்டுப்பாடுள்ள புதிய மனிதர்களாக மாற்றிய பின்தான் வெளி உலகை அறிமுகம் செய்வேன்! - அவர் உயிரோடு இருந்து, இதை செய்திருந்தால், இவ்வளவு தூரம் மோசமாகி போயிருக்க மாட்டோம்.***
*ஆர்.மாதவன், திருமங்கலம்: சினிமா பார்ப்பதை நிறுத்தி விடலாம் என முடிவு செய்துள்ளேன்...
'வெரிகுட்!' அத்துடன், 'டிவி'யில் வரும் சினிமா நிகழ்ச்சிகளையும் ஒதுக்கி விடுங்கள்... இன்னும் ஒருபடி மேலே போய், அரசியல் கூட்டங்களுக்கு செல்வதையும் நிறுத்தி விடுங்கள். எக்கச்சக்க நேரம் மிஞ்சும். உருப்படியாக சிந்தித்து முன்னேற முடியும்!***
* ஏ.சம்பத், கோரிப்பாளையம்: பொய் பேசாமல் இருக்க முடியவில்லையே... என்ன செய்வது?
ஒரு பொய்யால் பிறர் வாழ்வு கெட்டு, குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வரும், பொய்களைப் பேசாமல் இருக்கிறீர்களா? அது போதும்! ஒரு வாசகர் எழுதி இருக்கிறார்: பொய் பேசாமல் இருக்கவே முடியாது என்று! அதற்கு உதாரணமாக, வியாபாரிகளைச் சுட்டிக்காட்டி உள்ளார். 'பருப்பை 70 ரூபாய்க்கு வாங்கி, 85 ரூபாய்க்கு விற்கின்றனரே... இது பொய்யில்லையா?' எனவும் கேட்டு இருக்கிறார்... இதை எப்படி பொய்யாகக் கொள்ள முடியும்? வியாபாரம் அது! அதே வியாபாரி, 'இது ஆப்ரிக்காவில் இருந்து வந்த பருப்பு, கிலோ ஐந்து ரூபாய் தான்!' எனச் சொல்லி, பருப்பைப் போன்ற களிமண்ணை விற்றால்... அது பொய்! எனவே, பிறன் வாழ்வு உங்களது பொய்யால் கெடுமா? வாயை மூடிக் கொள்ளுங்கள்! மற்றபடி பிரச்னை இல்லாத, சின்னச் சின்ன, 'டூப்'புகளை நகைச்சுவையாக அவிழ்த்து விடுங்கள்; 'பிராப்ளம்' இல்லை! ***
*கே.மகேஸ்வரன், நெய்வேலி: வாரமலர் இதழில் வெளியாகும் போட்டிகளில் பங்கு கொண்டு, ஒருமுறை பரிசு வாங்கினால், பரிசு பெற்ற நபர் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்ளலாமா? இவர்களுக்கு ஒரு முறை கொடுத்தாகிவிட்டது என்று, முகவரியைப் பார்த்து தனியாக எடுத்து வைத்து விடுவீர்களா?
அப்படியெல்லாம் இல்லை என்கிறார் பொ.ஆ., போட்டியில் கலந்து கொள்ள வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், வேண்டியவர், வேண்டாதவர், ஏற்கனவே பரிசு பெற்றவர் - இது வரை ஒரு பரிசு கூட பெறாதவர் எனத் தரம் பிரிப்பது, 'பிசிக்கலி இம்பாசிபிள்' என்றும் கூறுகிறார். தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் - ஏற்கனவே பரிசு பெற்ற வாசகராக நீங்கள் இருந்தாலும், மீண்டும் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு!***
*எஸ்.ராதா, திருக்கோவிலூர்: இந்தியாவை தவிர, மற்ற நாடுகளில் ஜனங்கள் பகலிலும் சினிமா தியேட்டர் வாசலில் தவம் கிடப்பதுண்டா?
அங்கெல்லாம் சினிமா தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கவே பயமாக இருக்கும். 500 பேர் அமர்ந்து படம் பார்க்கும் தியேட்டரில், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஐந்தாறு பேர் தியேட்டரில் இருப்பதே அரிது! அவர்கள், விழித்துக் கொண்டு விட்டனர்.
***
