PUBLISHED ON : பிப் 27, 2011

குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேச யாத்திரிகர்களின் தென்னாட்டு பயண சீசன் துவங்கி விட்டது. மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என எல்லா புனிதத் தலங்களிலும், 'கச கச'வென வட மாநில பக்தர்களின் கூட்டம்.
மூவாயிரம், நாலாயிரம் கிலோ மீட்டர் தூரம் - 20 முதல், 30 நாள் பயணம் - பயணம் செய்யும் வாகனமோ நம்மூர்களில் காயலான் கடைக்கு அனுப்பப்பட்ட பஸ்கள். இந்தக் கொடுமையான பயணத்தை தாங்கிக் கொள்ளும் பயணிகளுக்கு, மிகுந்த மன உறுதி இருக்க வேண்டும். இந்தப் பயணிகளின் வரவு, நம்மூர் வியாபாரிகளின் நாணயத்தை முற்றிலும் மாற்றி விடுவதை, 'டூரிஸ்ட் ஸ்பாட்டு'களில் கண் எதிரே காண முடிகிறது.
மதுரை, நெல்லை, குமரி மாவட்டங்களில், ஒரு, 'சர்வே' எடுக்கும் பணி அலுவலகத்தில் தரப்பட்டது எனக்கும், லென்ஸ் மாமாவிற்கும்! சர்வேக்கான விண்ணப்பங்கள் மற்றும் எங்களது மூட்டை, முடிச்சுக்களுடன் கிளம்பினோம். மதுரை மாவட்டம் முடிந்து, நெல்லை மாவட்டத்தில் கடைசியாக வள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலும், 'சர்வே'யை முடித்து, கன்னியாகுமரி சென்றோம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டலில், 'எல்லா ரூமும் புக் ஆகி விட்டது...' என மோட்டு வளையைப் பார்த்தபடியே அலட்சியமான பதில் வந்தது.
லென்ஸ் மாமா என்னைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு, 100 ரூபாய் நோட்டு ஒன்றை தன் பையில் இருந்து எடுத்தார். நான், அவர் கையைப் பிடித்து, கண்ணாலேயே, 'இது தப்பு மாமா... லஞ்சம் கொடுத்து இடம் பிடிக்க வேண்டாம்...' எனக் கூறியதையும் பொருட்படுத்தாமல், ரிசப்ஷனில் நீட்டி, 'கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய முடியுமா பாருங்களேன்...' என்றார்.
ரிசப்ஷனில் இருந்தவர் வாயெல்லாம் பல்லாக, 'நெஜமாவே ரூம் இல்லே சார்... ரூம் இருந்தா கொடுத்திட்டு, நீங்க அன்பளிப்பா தர்றத மறுக்கவா செய்வோம்...' என்றார்.
ரூம் தேடி, ஒவ்வொரு லாட்ஜாக ஏறி, இறங்க, ரயில் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் ரூம் இருந்தது. அந்த லாட்ஜின் பணியாளர், 'சார்... இங்க உள்ள ரூம் உங்களுக்குப் பிடிக்காது... எங்க லாட்ஜே இன்னொன்னு கடற்கரை பக்கம் இருக்கு... அங்கே போங்களேன்...' என்றார்.
அங்கே —
'டபுள் ரூம், 'நான் - ஏசி' 1500 ரூபாய்!' எனக் கூசாமல் வாடகை கேட்டனர்.
லென்ஸ் மாமா, 'ஷூட்-அப்' ஆனார். 'டேரிப்' - வாடகைப் பட்டியல் கார்டு இருக்கிறதா? எனக் கேட்டார்.
'அதெல்லாம் அச்சடிக்கிறது இல்லே சார்... வேணுமுன்னா ரூம் எடுத்துக்குங்க... இல்லே, வாடகை பட்டியல் அச்சிட்டு வச்சிருக்கிற லாட்ஜா பாத்துக்குங்க...' என்றார்.
கோபம் குறையாமலே, 'சரி... சரி... ஒரு, 'டபுள்-ரூம்' கொடுங்க...' என லென்ஸ் மாமா அலட்சியமாகக் கேட்கவும், '2000 ரூபாய் அட்வான்ஸ் கொடுங்க...' என்றனர். அதைக் கொடுத்த பிறகு, 'ரசீது?' என்றார் மாமா. 'ரூமுக்கு போங்க, போட்டு அனுப்பி வைக்கிறோம்!' என பதில் வந்தது.
மகா எரிச்சலுடன் ரூமுக்கு வந்தார் மாமா. மாலையில் கடற்கரை அருகே உலவச் சென்றபோது, வட மாநில பயணிகளை, 'ரைட் ராயலாக' சிறு வியாபாரிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
முந்திரிப் பருப்பில் ஆரம்பித்து, கடல் சிப்பி மாலை வரை தரங்குறைந்த பொருட்களை யானை விலை, குதிரை விலை கூறி, விற்றுக் கொண்டிருந்தனர்.
இந்தக் கொள்ளை ஒரு பக்கம் ஜரூராக நடந்து கொண்டிருக்க, நிஜமான, 'பிக்-பாக்கெட்'டுகளும் தாராளமாக மிக உரிமையோடு செயல்படுவதை காண முடிந்தது.
இந்தியாவின் கடைக் கோடியைக் காண வந்துள்ள நம் வட மாநில சகோதரர்களிடம் இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனரே என்ற மன வருத்தம் ஏற்பட்டது.
மாலை ஏழு மணி அளவில் லாட்ஜை காலி செய்யும் போது, 'ரூமுக்கு ரசீது அனுப்புவதாகச் சொன்னீர்கள்; வரவில்லையே...' என்றார் மாமா.
'அதற்கென்ன சார்... இப்போதான் ரூமைக் காலி செய்யப் போறீங்களே... இந்தாங்க பேலன்ஸ்...' என்றபடி துண்டுச் சீட்டு ஒன்றில் அட்வான்ஸ், ரூம் வாடகை, மீதி என எழுதித் தந்தார்.
'பில் கிடையாதா?' என மாமா கேட்க, 'பில் போட்டா டாக்ஸ் வரும் சார்... போடவா?' என்றார்.
'வரி கொடுக்கப் போறது நான்... உங்களுக்கு ஏன் கசக்குது?' என்றார் மாமா.
பெரிய வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது. கடைசி வரையில் பில்லே தரவில்லை அந்த லாட்ஜ்காரர்கள்.
தமிழ் பேசத் தெரிந்த நமக்கே இந்த கதி என்றால், இந்தி மட்டுமே தெரிந்த வடமாநில சகோதரர்களின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்....
லோக்கல் போலீஸ்தான் இந்த அட்டகாசங்களை பல்வேறு காரணங்களுக்காக கண்டு கொள்ளவில்லை என்றாலும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காதுகளுக்கு இந்த அடாவடிகள், ஏமாற்றுகள் எட்டாமலா இதுவரை உள்ளது என எண்ணும்போது, வியக்காமல் இருக்க முடியவில்லை!***
அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர். '70களின் கடைசி வரை மார்க்கெட் இருந்தது அவருக்கு. அவர் நடிப்பை சில படங்களில் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன். 'சட்'டென கோபம் வந்து விடக் கூடிய, 'ஷார்ட்டெம்பர்ட் மேன்' என சினிமா பொன்னையாவும், சினிமா தொடர்புடையவர்களும் அவரைப் பற்றிக் கூறக் கேட்டு இருக்கிறேன்.
என் இருப்பிடத்தில் இருந்து, பணி இடத்திற்கு செல்லும் வழியில் அடிக்கடி அவரைப் பார்ப்பதுண்டு. காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து செல்வார். சில நேரங்களில் சைக்கிளில் செல்வதையும் கண்டதுண்டு.
இதை எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன் —
ஆங்கில மருந்துக் கடை ஒன்றின் வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார் மாமா.
'உடம்புக்கு என்ன?' என்றேன்.
'எனக்கு என்ன குறை? வீட்லே மாமிக்கு தான் கொஞ்சம் உடல் நல குறைவு...' என்றார்.
'அடடே... மாமாவுக்குக் கூட குடும்பப் பொறுப்பு வந்துடுச்சு போல இருக்கே...' என எண்ணியபடி, ரோடின் எதிர்புறம் பார்த்தால், 'அந்த' நடிகர்.
ஆட்டோ ஒன்றை நிறுத்தி, சவாரிக்கு அழைத்தார்... 'ஆட்டோ வராது...' என்பது போல ஓட்டுனர் சைகை செய்து, செல்வதைக் காண முடிந்தது. நடிகர், அடுத்த ஆட்டோவுக்காக காத்திருக்கவும், லென்ஸ் மாமா திரும்பினார். அவரிடம் விஷயத்தைச் சொல்லி, 'நாம் அவருக்கு ஒரு, 'டிராப்' கொடுக்கலாமா?' எனக் கேட்டேன். ஒப்புக் கொண்ட மாமா, நேராக நடிகரிடம் சென்று, அறிமுகம் செய்து, ஒப்புதல் பெற்று என்னை அழைத்தார். வண்டியைத் திருப்பி, இருவரையும், 'பிக்-அப்' செய்து, அவரது வீட்டுக்கு, வழி கேட்டு வண்டியைச் செலுத்தினேன்.
லென்ஸ் மாமா, அந்துமணி கேரக்டர்கள் அவருக்கு மிகப் பரிச்சயப்பட்டு போயிருந்தது அவரது பேச்சில் இருந்து தெரிந்தது, 'நீங்க, அவங்க ரெண்டு பேரையும் பார்த்து இருக்கீங்களா? எப்படி இருப்பாங்க; எப்படிப் பழகுவாங்க?' என்றெல்லாம் கேட்டார்.
சிரிப்பையே பதிலாக்கினோம்... 'சிரிக்கிறதைப் பார்த்தா நீங்கதான் அவங்களா?' என்றார்.
அதற்கும் சிரிப்பே!
மிக நீண்ட நேரம் கம்யூனிசம் பற்றியும், மார்க்ஸ் தத்துவம் பற்றியும் பேசினார்.
'எதுவுமே நிரந்தரமானது அல்ல... இன்று இருப்பது... நாளை இருக்காது...' என்ற மார்க்சின் தத்துவத்தை விளக்கினார்.
'நிரந்தரமானது ஒன்றே ஒன்று என்கிறான் மார்க்ஸ்; அது என்ன?' எனக் கேட்டார்.
பதில் தெரியவில்லை. கூறினார்... ஒரே சிரிப்பு!
உங்களுக்கும் அந்த பதில் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். மார்க்ஸ் தத்துவம் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!***
