PUBLISHED ON : பிப் 27, 2011

எம்..ஜி.ஆர்., அப்போது முதல்வராகி விட்டார். 'சினிமா எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையின் தொடக்க விழா நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்., சாண்டில்யன், நான் ஆகியோர் பேச்சாளர்கள். சாண்டில்யன் பேசிவிட்டு அமர்ந்து விட்டார். நான் பேசும் போது, எம்.ஜி.ஆரை நோக்கி, 'நீங்கள் படங்களில் நடித்த காலத்தில், 'தூங்காதே தம்பி தூங்காதே...' போன்ற பாடல்களைப் பாடி, ரசிகர்களுக்கு அறிவுறுத்தினீர்; நாங்களும் ரசித்தோம். இப்போது ரசிகர்களை விட்டு, விட்டு ஆட்சிக்குப் போய் விட்டீர்கள்...' என்றேன்.
எம்.ஜி.ஆர்., பேசும் போது, 'மாதத்தில் பாதி நாட்கள் முதல்வர்; பாதி நாட்கள் நடிகராக மாற முடிவு செய்துள்ளேன்...' என்று அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் எழுந்து சென்று, செய்தியைப் பத்திரிகைகளுக்கு போன் மூலம் தெரிவித்து விட்டனர். இந்த செய்தி, இரவு 11 மணிக்கு டில்லியை எட்டி விட்டது.
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உடனே, எம்.ஜி.ஆரை அழைத்து, 'ஒரு மாநில முதல்வர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது மரபுக்கு ஒவ்வாது. நீங்கள் முதல்வராகவே இருங்கள். நடிக்க வேண்டும் என்று தீர்மானித்தால், தங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை முதல்வராக்கிவிட்டு, நீங்கள் நடிப்புக்கே போய் விடுங்கள். மாநில முதல்வர் என்ற பணிக்கு, சில மரபுகள் இருக்கிறது. அது கெட்டுப் போய்விடக் கூடாது...' என்று கூறி விட்டார்.
உடனே, எம்.ஜி.ஆர்., ஆபிசில் இருந்து எல்லா பத்திரிகைகளுக்கும், 'அந்த செய்தியை வெளியிட வேண்டாம்...' என்று, தகவல்கள் போயின. அவ்வாறே செய்தி நிறுத்தப்பட்டது!
— இயக்குனர் முக்தா சீனிவாசன்,
ஒரு கட்டுரையில்...
நான் கதை, வசனம் எழுதிய, 'இல்லற ஜோதி' படத்தில் இடம் பெற்ற, 'அனார்கலி' ஓரங்க நாடகப் பகுதிக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதிக்கும், எனக்கும் இடையில் பகைமை உண்டாகி விட்டது. அப்போது, தி.மு.க.,வில் இருந்த சிவாஜி கணேசன், திருப்பதிக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்தார். என், 'தென்றல் திரை' பத்திரிகையில், அவரைக் கேலி செய்து எழுதி, அவரையும் என் எதிரி ஆக்கிக் கொண்டேன். இந்நிலையில், 1957 தேர்தலில், நான் தி.மு.க., சார்பில் போட்டியிட்டேன்.
சென்னையில் நான் பத்திரிகை நடத்திய இடம், ஆயிரம் விளக்கு பகுதி. அந்த தொகுதியிலேயே நான் தி.மு.க., சார்பில் போட்டியிட்டிருந்தால், என் கவுரவத்தையும் காப்பாற்றிக் கொண்டு, காலணா செலவும் இன்றி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், விதி என்னை திருக்கோஷ்டியூர் வரை இழுத்துக் கொண்டு போயிற்று. ஆயிரம் விளக்கு தொகுதியில், ஏ.வி.பி.ஆசைத்தம்பி போட்டியிட்டு, உண்மையிலேயே காலணா கூட செலவில்லாமல், வெற்றி பெற்றார். அவருக்கு, 'டெபாசிட்' பணம் கட்சி தான் கட்டிற்று.
நானோ திருக்கோஷ்டியூர் தொகுதியைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளாமல், அதில் என்னுடைய ஊரும் அடங்கி இருந்ததால், உடனே ஒப்புக் கொண்டு விட்டேன். அந்த நேரத்தில் என் பணமும் போச்சு; கவுரவமும் போச்சு!
— கண்ணதாசன் ஒரு கட்டுரையில்...
ஒரு நாள், ஒரு அரசனும், புலவனும் வந்தனர். அவ்வரசனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளிடம் வெறுப்பும், இளையவளிடம் அன்பும் கொண்டிருந்தான். அரசன் மேகத்தைக் காட்டி, 'இது எது போல் இருக்கிறது?' எனக் கேட்டான். உடனே புலவன், 'உங்கள் மூத்த மனைவியின் முகத்தைப் போன்று இருக்கிறது...' என்று, பதிலுரைத்தான். உடனே, அரசன் சிரித்தான். அப்போது இடி இடித்தது.
'இது, எதைப் போன்று இருக்கிறது?' என்று கேட்டான் அரசன். 'உங்கள் சிரிப்பைப் போல்...' என்று, பதிலுரைத்தான் புலவன். அப்போது மின்னல் தோன்றியது. 'இது எப்படி இருக்கிறது?' என்று கேட்டான். 'உங்கள் இளம் மனைவியின் சிரிப்பை ஒத்திருக்கிறது...' என்று கூறினான் புலவன்.
எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்ததையே இன்பம் என்று கூறுவர். இது தான் இன்பம் என, அறுதியிட்டுக் கூற முடியாது.
—'அண்ணாவின் உவமைகள்' நூலிலிருந்து..
