PUBLISHED ON : மார் 25, 2018

* எஸ்.ரங்கநாதன், சென்னை: உலகில் நல்லவர் யார், கெட்டவர் யார் எனக் கண்டுபிடிப்பது எப்படி?
உங்களைக் கண்டவுடன், 'என்ன... சாப்பிட்டீங்களா?' என ஒருவன் கேட்டால், அவன் நல்லவன்; 'என்ன விசேஷம்... எங்கே இந்தப் பக்கம்?' என்றால் ஓடிப் போய் விடுங்கள்!
எம்.மணி, கடலுார்: தற்பெருமை, ஒரு மனிதனிடம் எப்போது, எதனால் உண்டாகிறது?
நிறைகுடமாக இல்லாதவன் தற்பெருமைக்காரனாக இருப்பான்; இது, அவன் மடையனானதற்கு அடுத்த நாள், அழிவிற்கு முந்தைய நாளில் உண்டாகிறது.
பி.பாலாஜி, பொள்ளாச்சி: இந்தியாவில், எந்த நகரத்தில் வீட்டு வாடகை அதிகம்?
மும்பையில்! இந்நகரில் வசிக்கும், 'அப்பர் மிடில் கிளாஸ்' மக்களின் வருமானத்தில், 40 சதவீதம் வாடகைக்கே சென்று விடுகிறது. 'காஸ்ட் ஆப் லிவ்விங்'கும் இங்கு அதிகம் தான். ஐதராபாத்தை விட, 60 சதவீதம் மும்பையில் செலவு அதிகம்!
* பி.சுதா, ஊட்டி: மனிதனின் திகட்டாத, தீராத விருந்தாக எதைக் கருதுகிறீர்கள்?
எவன் ஒருவனிடம் திருப்தியுள்ள மனம் இருக்கிறதோ, அதுவே தீராத, திகட்டாத விருந்து!
என்.மலர்விழி, சிவகங்கை: ஈ.எஸ்.பி., சக்தி என்கின்றனரே... அதன் பொருள் என்ன?
'ஆங்கில புலவரான' என்னிடம் கேட்கிறீர்களே.... சரி... லென்ஸ் மாமாவிடம் விசாரித்து அறிந்த பதில் இது... 'எக்ஸ்ட்ரா சென்சரி பர்சப்ஷன்' என்பது, ஈ.எஸ்.பி.,யின் விரிவாக்கம். இந்த சக்தி உள்ளவர்களிடம், பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை உணரும் ஆற்றலும், எதிர் காலத்தை அறியும் திறனும் இருக்கும்; எங்கோ நடப்பதை கனவில் காணும் சக்தி இருக்கும்!
வி.செல்வம், சென்னை: ஊதாரித்தனம் என, எதைச் சொல்வீர்கள்?
பணத்தைத் தண்ணீராக செலவு செய்வதை கூட ஊதாரித்தனம் எனச் சொல்ல மாட்டேன்; திரும்பக் கிடைக்காத நேரத்தை, காலத்தை சோம்பி வீணாக்குவதே நம்பர் ஒன் ஊதாரித்தனம். வீணாக்கியப் பொழுதை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது!
எம்.பிரகாஷ், ராஜபாளையம்: பார்சிகள் என, ஒரு இனத்தை அழைக்கின்றனரே... அவர்கள் யார்?
இன்றைய ஈரான் நாடு, முன்பு பாரசீகம் என அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்தவர்கள் பார்சிகள். இவர்கள், சாரதுஷ்டிரம் என்ற மதத்தை பின்பற்றினர். கி.பி., 7ம் நுாற்றாண்டில் அரேபியர் படையெடுத்து, மத மாற்றம் செய்த போது, மதம் மாற விரும்பாத பார்சிகள், இந்தியாவில் தஞ்சமடைந்தனர். பாரசீகத்திலிருந்து இங்கு வந்ததால் பார்சிகள் என அழைக்கப்படுகின்றனர்!
