PUBLISHED ON : மார் 25, 2018

முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், இன்றைய பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார், வல்ல கோலாதிபதி எனும் பட்டபெயர் கொண்ட, லிங்கம் என்ற குறுநில மன்னர். இவர், கல்வி மற்றும் சிவ பக்தியில் தலை சிறந்தவராக விளங்கினார்; விரத அனுஷ்டானங்களில் ஆழ்ந்த பிடிப்புள்ளவர்.
இவருடைய மகன் அண்ணாமலையும், தந்தையை போலவே சிவ பக்தி உள்ளவர். விருத்தாசலத்தில் கோவில் கொண்டுள்ள, பழமலைநாதர் - பெரியநாயகி தாயார் மீது மிகுந்த பக்தி கொண்ட லிங்கம், ஒவ்வொரு பிரதோஷத்தன்றும், தன் மகனுடன் விருத்தாசலம் சென்று சிவபெருமானையும், அம்பாளையும் தரிசனம் செய்வது வழக்கம்.
ஒருமுறை, குதிரையில் தன் மகனுடன் பிரதோஷ வழிபாட்டிற்காக, விருத்தாசலம் நோக்கி பயணப்பட்டார், லிங்கம்.
வழியில், வெள்ளாற்றில் இரு கரைகளையும் தழுவியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திகைத்த மன்னர், 'இறைவா... இது என்ன சோதனை... இன்று, பிரதோஷ வேளையில், உன்னை தரிசிக்க முடியாமல் போய் விடுவோமோ...' என, மனம் கலங்கினார். பின், 'பழமலை நாதா... நான், உன் மீது கொண்ட பக்தி உண்மை என்றால், இவ்வெள்ளம் எங்களுக்கு வழிவிடட்டும்; இல்லையெனில், இந்நதி எங்களை அடித்துச் செல்லட்டும்...' என்று பிரார்த்தித்து, குதிரையுடன் ஆற்றில் இறங்கினார்.
சிவபெருமானின் திருவருளால், கணுக்கால் அளவு நீரோடு, நதி இரு கூராக பிரிந்து, மறுகரை வரை வழிவிட்டது. சிவபெருமானின் அருளை எண்ணி மனம் சிலிர்த்த மன்னரும், அவர் மகனும், பிரதோஷ பூஜையை கண்டு களித்தனர்.
அன்றிரவு, உள்ளம் நிறைய உவகையுடன், உமையொரு பாகனைத் தியானித்து, அங்கேயே உறங்கினார், மன்னர். கனவில் அவருக்கு காட்சியளித்த பழமலைநாதர், 'லிங்கா... இனி, நீ, என்னை தரிசிக்க இங்கு வரவேண்டியதில்லை; உன் ஆளுகைக்கு உட்பட்ட திருவெங்கை நகரிலேயே யாம், புதையுண்டுள்ளோம். அத்திருமேனிகளை எடுத்து, கோவில் எழுப்பு. சிறிது காலத்தில், வடக்கே, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சிற்பிகள் சிலர் இங்கு வருவர். அவர்களின் உதவியுடன் கோவிலை விரிவாக்கி, விழா நடத்து...' என்று அருளினார்.
மன்னருக்கு மெய் சிலிர்த்தது. 'பரம்பொருளே... இப்பாவியேன், மீண்டும் வெள்ளாற்று வெள்ளத்தில் அகப்பட்டுக் கொள்வேன் என்றா, தேடி வந்து அருள் செய்கிறாய்...' என்று கூறி துதித்தார்.
பின், இறைவனின் திருவருளால், திருவெங்கை என்னும் ஊரில் புதையுண்டு கிடந்த தெய்வ விக்கிரகங்கள் வெளியே எடுக்கப்பட்டன; சிறிய அளவில் கோவில் ஒன்றை உருவாக்கி, அதில், தெய்வ மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்தார்.
சில காலம் சென்றதும், வட மாநிலத்திலிருந்து வந்த சிற்பிகளால் விரிவாக்கப்பட்டது, ஆலயம்.
அடியாரின் வேண்டுகோளுக்கு அருள் புரிந்த இத்திருத்தலம், பெரம்பலுார் - சேலம் நெடுஞ்சாலையில், பெரம்பலுாரிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ளது.
அறிவோம் ஆன்மிகம்!
அதிகாலையில் வீட்டுக் கதவை திறக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவை திறக்கும் போது, அஷ்ட லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்; அப்படி உச்சரித்தால், அஷ்ட லட்சுமிகள் இல்லம் தேடி வந்து சகல ஐஸ்வர்யங்களையும் வழங்குவர். பணக்கவலை மற்றும் பணப் பற்றாக்குறை ஏற்படாது.
அதேபோல, கடை மற்றும் தொழிற்சாலைகளை திறக்கும் போது, அஷ்டலட்சுமிகளின் பெயரை உச்சரிக்க வேண்டும்; அப்போதுதான் வியாபாரம் விருத்தியாகும்.
