தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ராஜா, விழுப்புரம்: ஆண்களைப் போல் பெண்களும் ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கின்றனரே... என்ன காரணம்?

ஆண்களுக்கு என்ன காரணமோ... அதுவே பெண்களுக்கும் இருக்கக் கூடாதா?

* டி.தங்கவேலு, விருதுநகர்:அனைவருக்கும் நல்லவனாக இருக்கவே விரும்புகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களை அறியாமல், தெரியாமல், மற்றவருக்கோ, உங்களுக்கோ எந்த கெட்ட காரியத்தையும் செய்து விட முடியாது. அதனால், உங்கள் உள் மனம் சொல்வதை மட்டுமே கேளுங்கள்... அத்துடன், 'உனக்கு பகையே நீ தான்... வெளியில் எங்கும் தேட வேண்டாம்...' என்ற பழமொழியையும் நினைவில் வைத்திருங்கள்; நல்லவனாக இருக்க முடியும்.

அ.கிருஷ்ணன், பண்ருட்டி: நம்பிக்கை துரோகம் செய்த நண்பனை மன்னித்து விட்டேன்; நட்பைத் தொடரலாமா?

அது, தீ என்று தெரிந்து விட்டது; தொட்டு உணர முயற்சிக்கலாமா?

ப.ரம்பை, திருப்பூர்: என் தோழி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறாளே...

கவனமாக இருக்க அறிவுரை கொடுங்கள்; யாரிடமாவது ஏமாந்து கொண்டிருக்க போகிறாள்... இந்தக் காலத்தில் ஏமாந்து கொண்டிருப்பவர்களும், ஏமாற்றிக் கொண்டிருப் பவர்களுமே எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

* எம்.நாராயணன், மதுரை: எப்போது பணக்கார நாடாவோம்?

ஏன்... இப்போதே நம்மோடது பணக்கார நாடு தான்; உலகில் தயாராகும், 12 வைர நகைகளில், 11 நகை, நம் நாட்டில் வெட்டி, பாலீஷ் செய்யப்பட்டு கட்டப்படுகிறது. உலக நாடுகள் இறக்குமதி செய்யும் வைரத்தில், 85 சதவீதம் இந்தியாவின் பங்கு. இங்கு, 10 லட்சம் தொழிலாளர்கள், வைர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போ சொல்லுங்கள்... நாம் பணக்கார நாட்டில் வசிக்கிறோமா, இல்லையா?

ஏ.நித்திஷ், திருவண்ணாமலை: ஒரு விளம்பரம் கூட இல்லாமல் வரும் பத்திரிகை உண்டா?

இருக்கிறது... ஆனால், இங்கல்ல; பிரான்ஸ் நாட்டில். அதன் பெயர், 'லா மாண்டே!' விளம்பரத்துடன் வரும் பத்திரிகை விலை, மூன்று ரூபாய் என்றால், இதன் விலை, 15 ரூபாய். இங்கு, அப்படி செய்ய முடியுமா என்ன!

* அ.நடராஜன், பழநி: எத்தனை ஆண்களுக்கு, கற்பனை செய்து வைத்த மனைவி அமைகிறாள்?

'எதிர்பார்த்தது போல இல்லேப்பா...' என்ற பதிலைத்தான், 99.99 சதவீத ஆண்கள் சொல்கின்றனர். 'கற்பனை செய்தது போலவே மனைவி அமைந்து விட்டாள்...' எனக் கூறும், .01 சதவீத ஆணை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. பெண்கள் இடையேயும் இந்த மனக்குறை உள்ளது. அவர்கள் எனக்கு எழுதும் கடிதம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!

டி.சரவணன், சென்னை: செஞ்சிலுவை சங்கம் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது?

போரில் காயமடையும் வீரர்களுக்கு, மருத்துவ உதவி செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. இதன் பெயரில் சிலுவை இருப்பதால், இஸ்லாமிய நாடுகளில் இச்சங்கத்தின் பெயர், 'செவ்விளம்பிறைச் சங்கம்' என அழைக்கின்றனர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us