தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குப்பண்ணாவை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த குப்பண்ணாவின் மனைவி, 'கார்ப்பரேஷனிலிருந்து வரி கட்ட நோட்டீஸ் வந்திருக்கு...' என்று கூறி, குப்பண்ணா பக்கமாக ஒரு கடுதாசியை துாக்கிப் போட்டார்.

அதே வேகத்தில், 'இவனென்ன, மாதக் கடைசியிலும், ஆண்டு கடைசியிலும், வரி கேட்கிறான்... ஜனங்கள் கையில் பணம் புழங்குகிற நேரம் பார்த்துக் கேட்க கூடாதா...' என்றபடி உள்ளே போனார், குப்பண்ணாவின் மனைவி.

'பரவாயில்லயே... மாமி கூட பெரிய பொருளாதார நிபுணராக ஆகிக் கொண்டு வருகிறாரே...' என்றேன் குப்பண்ணாவிடம்!

'இதிலே என்ன பெரிய பொருளாதார நிபுணத்துவம் வாழுதாம்...' என்றார், குப்பண்ணா.

'ஆடம் ஸ்மித் தெரியுமா?'

'ஏதோ பொருளாதார தத்துவத்தின் தந்தை, ஒரு இங்கிலீஷ்காரன் என்றெல்லாம் பள்ளிக்கூட பாடத்தில் படித்தது லேசுபாசாக நினைவிருக்கிறது...' என்றார்.

'அவரே தான்... வரி விதிப்புக் கொள்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு அடிப்படையான கொள்கைகளை அவர் சொல்லியிருக்கிறார். முதலாவது, ஒரு மனிதனுக்கு அவன் வாழும் சமூகத்திலிருந்து எந்த அளவு பயன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு தகுந்தபடி வரி இருக்க வேண்டும்.

'இரண்டாவது, அவனுக்கு, அவன் கட்ட வேண்டிய வரி இவ்வளவு தான் இருக்கும் என்கிற நிச்சயம் இருக்க வேண்டும். மூன்றாவது, எந்த காலத்தில் அவன் கையில் பணம் புழங்குமோ அந்த காலத்தில் வரியை வசூலிக்க வேண்டும்.

'நாலாவது, வரிப்பணம் கட்டுகிறவனிடமிருந்து அரசாங்கத்திடம் போவதற்கு, குறைந்தபட்ச செலவே ஆக வேண்டும்...' என்றேன்.

'பரவாயில்லை... என் பொண்டாட்டி சொன்னதைத் தான் அந்த அறிஞனும் சொல்லியிருக்கிறானா?' என்றார் குப்பண்ணா பெருமையுடன்!

வாசலில், 'கிணி கிணி' என்று மணி ஒலித்தது. எதிர் வீட்டிலிருந்து வந்த குப்பண்ணாவின் மனைவி, வீட்டுக்குள் ஓடிப்போய் கையில் பணத்துடன் வந்தார்.

'வெண்ணை கடை ஆள், பாக்கிக்காக வந்திருக்கிறான்...' என்றார் குப்பண்ணா.

'சைக்கிளில் இவனுக்கு மணி எதற்கு... அவன் வருகையை அறிவிக்க வெண்ணை நாற்றம் ஒன்றே போதாதோ?' என்றார் அங்கு அமர்ந்திருந்த குப்பண்ணா வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்.

'நம் வீட்டில் தான் இப்படி டாண் டாணென்று பாக்கியைத் தீர்க்கிறோம்; ஒவ்வொருத்தர் வீட்டில் பத்து நடையாவது இழுத்தடித்து விட்டுத்தான் பணத்தை தருகின்றனர். கையில் பணமில்லாமலில்லை. இருக்கும் கொஞ்ச, நஞ்ச பணத்தையும் பத்து பேருக்குப் பங்கு தீர்த்து, வெறும் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதா என்கிற ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி தான்...' என்றார் குப்பண்ணா, தம் மனைவியிடம்!

'ஆமாமாம்... மாம்பலத்தில் என் மைத்துனர் இருக்கிறாரே... அவருக்கென்ன பணத்துக்கா குறைவு... இருந்தும் தயிர்க்காரனோ, பால்காரனோ வந்து நின்றால், 'போடா போ... ஐந்தாம் தேதியே வந்துட்டான்; பதினைந்தாம் தேதிக்கு முன் வந்தால் உதைப்பேன், என்று மிரட்டி அனுப்புவார்...' என்றார், பக்கத்து வீட்டுக்காரர்.

'சில பேர் முகராசிக்குத் தான் அது செல்லும். நாமெல்லாம் சொன்னால், 'எங்கே உதை பார்க்கலாம்...' என்று, கச்சை கட்டி வந்து விடுவர்...' என்றார் குப்பண்ணா.

பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தட்டில் நேந்திரங்காய், 'சிப்ஸ்' எடுத்து வந்து, எங்கள் முன் வைத்தார், குப்பண்ணாவின் மனைவி. அவர் ஒரு அடி கூட நகர்ந்திருக்க மாட்டார்; ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கை நிறைய சிப்ஸை அள்ளிக் கொண்டார், பக்கத்து வீட்டுக்காரர். 'ஓய்! மற்றவர்களுக்கும் பாக்கி வையும்...' என்றார் குப்பண்ணா.

'நான் கொஞ்சமாகத் தானே எடுத்துக் கொண்டேன்...'

'ஆமாமாம்... அதுதான் கையைப் பார்த்தாலே தெரிகிறதே...' என்றார், குப்பண்ணா.

'உங்க வீட்டு மாமி ஆளுக்கொரு தட்டில் கொண்டு வந்து வைத்திருந்தால், வம்பில்லாமல் இருந்திருக்குமே...' என்றேன்.

'மொத்தமாக வைத்தால் தான் என்ன... அவரவர் பங்கை அவரவர் எடுத்துக் கொண்டால் போயிற்று; சாப்பாட்டுப் பந்தியில் வெள்ளைக்காரர்கள் சாப்பிடும் போது பார்த்திருக்கிறாயா... பெரிய தட்டிலே ஒவ்வொரு வகையையும் வைத்து பட்லர் நீட்டுவான், சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் தான், தங்கள் பங்கு எவ்வளவு என்று கணக்கு பார்த்து தாங்களாகவே எடுத்து வைத்துக் கொள்வர்...' என்றார் குப்ஸ்!

'நீங்கள் சொல்வது, 'பபே' முறை இல்லயா?' என்றார், பக்கத்து வீட்டுக்காரர் வாயிலே வறுவலை அடக்கிக் கொண்டு!

'பபே முறை வேறு; அதில் பரிமாற ஆளே இருக்க மாட்டான். மேஜை மீது எல்லாவிதமான உணவு வகைகளும் குவிந்திருக்கும். அவரவருக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். அளவைப் பற்றி பேச்சே கிடையாது. ஆனால், நின்றபடி சாப்பிட வேண்டும்; ஓட்டல் என்றால், உட்கார்ந்து கொள்ளலாம்...' என்றேன்.

'என்ன வெள்ளைக்கார நாகரிகமோ...' அலுத்துக் கொண்டார் பக்கத்து வீட்டுக்காரர்.

'சிப்ஸ் பிளேட்' காலியானதும், குப்பண்ணா வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

'எ த்தனையோ குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார், ராமகிருஷ்ண பரமஹம்சர்; அதன் மூலம், ஆன்மிகக் கருத்துகளை பரப்பியிருக்கிறார். மறைந்த காஞ்சிப் பெரியவர் அப்படி கதைகள் சொன்னதில்லையே... அருளுரை, ஆசியுரை இப்படித் தானே சொல்லியிருக்கிறார்...' என்றேன், குப்பண்ணாவிடம்!

'இல்லயே, 1957ல் அவர் சென்னைக்கு வந்து உபன்யாசங்கள் செய்தார்; அப்புறம், கிட்டத்தட்ட, 30 ஆண்டுக்கு மேல் அவர் சென்னைக்கே வரவில்லை. அப்போது, நான் சிறுவன்; என் தாயாருடன் சென்று, தினமும் அவரது உபன்யாசங்களைக் கேட்பேன்.

'அவர் சொன்ன நிறைய கதைகள் இப்போதும் என் நினைவில் இருக்கிறது; எல்லாம் வரலாற்று உண்மைக் கதைகள்...' என்றார் குப்பண்ணா.

'உதாரணத்திற்கு ஒன்றிரண்டு கதைகளைச் சொல்ல முடியுமா?'

'தாராளமாக... பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில், பரம ஏழையாக இருந்தார், வித்தியாரண்யர். அதனால், மகாலட்சுமியைக் குறித்து, கடுமையான தபஸ் பண்ணினார். மகாலட்சுமி பிரசன்னமாகி, 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்ட போது, 'உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐஸ்வர்யம் கொடு...' என்று கேட்டார்.

மகாலட்சுமி, 'அப்பா... இந்த பிறவியில் உனக்கு ஐஸ்வர்யம் கிடைப்பதற்கு இல்லையே... வேண்டுமானால், அடுத்த பிறவியில் கொடுக்கிறேன்...' என்று சொன்னாள்.

வித்தியாரண்யர், உடனே சந்நியாசம் வாங்கி, 'சந்நியாசம் வாங்கினால், சாஸ்திரப்படி மறு ஜென்மமாக கருதப்படும். எனவே, இப்போது ஐஸ்வர்யத்தைக் கொடு...' என்றார். லட்சுமியும் சொர்ணத்தை அள்ளி வழங்கினாள்.

'நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும், ஒரே தங்கமாக இருந்தது; நவநிதியும் தெரிந்தது. இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரண்யர், 'சந்நியாசம் வாங்கிக் கொண்ட பின், நமக்கு தங்கம் எதற்காக... சந்நியாசிகள் இதைத் தொடவும் கூடாதே...' என்று அழுதாராம்!

'அப்போது தான், அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்கபூர், தென்னாட்டுக்கு படையெடுத்து வந்து, எல்லா கோவில்களும் சிதறுண்டு போகும்படியாகப் பண்ணிவிட்டுப் போயிருந்தான். அதனால், இந்த ஐஸ்வர்யத்தை வைத்து, இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்ய தீர்மானம் செய்தார், வித்தியாரண்யர்.

'அப்போது, அங்கே ஹரிஹரன், - புக்கன் என்ற, அண்ணன் - தம்பி -இருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அந்த இரு குறும்பர்களையும் அழைத்து, துங்கபத்திரைப் பிரதேசத்திலேயே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, அதற்கு ராஜாக்களாக அவர்களை நியமித்தார். அந்த ராஜ்யம் தான் விஜயநகர சாம்ராஜ்யம்...'

'பலே... அடுத்த கதை...'

ஒரு மடக்குத் தண்ணீரைக் குடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திய பின், ஆரம்பித்தார் குப்பண்ணா...

'அப்பைய தீட்சிதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும்; அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புத்தகம் எழுதினவர் யாரும் இல்லை. அத்தகைய பெரியவருக்கு, தம்முடைய பக்தியைச் சோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது.

'பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள் மற்றும் காம வார்த்தைகளை பிதற்றாமல், ஈசுவர பக்தி பண்ணினால், அப்போது, தம்முடைய பக்தி மெய்யானது தான் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்.

'ஊமத்தங்காய், ஊமத்தம் பூ இவற்றைச் சாப்பிட்டால், பைத்தியம் பிடித்து விடும் என்று அவருக்குத் தெரியும்; அதனால், அதைச் சாப்பிட்டார்; அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.

'உடனே உளற ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றை எல்லாம் சிஷ்யர்கள் எழுதிக் கொண்டனர். ஊமத்தம் பூவின் குணத்தை மாற்றக் கூடிய மருந்தைக் கொடுத்தனர்; பைத்தியம் தெளிந்து விட்டது.

'அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால், ஈசுவரன் மேல், 50 சுலோகங்கள் பாடியிருந்தார். அந்தக் கிரந்தத்துக்கு, 'ஆத்மார்ப்பண ஸ்துதி' அல்லது 'உன்மத்த பஞ்சாசத்' என்று பெயர்; உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ...' என்று முடித்தார் குப்பண்ணா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us