PUBLISHED ON : ஜூன் 10, 2018

அ.நாராயணன், கடலுார்: மனைவிக்கு உதவியாக, வீட்டு வேலைகள் செய்தால், நாளடைவில் கணவனை மதிக்க மாட்டாள் மனைவி என்கிறானே என் நண்பன்...
தான், சோம்பேறியாய் சுற்றி திரிவதற்கும், உங்களையும் தன்னைப் போல் மாற்றி விடவும், உங்கள் நண்பர் போடும் திட்டத்தின் வெளிப்பாடே அந்த, 'ஸ்டேட்மென்ட்!' நான் அறிந்த வரை மனைவிக்கு உதவியாக இருக்கும் கணவரை, மதிக்கின்றனரே தவிர, மிதிக்கவில்லை மனைவியர்!
கே.கமலா, காஞ்சிபுரம்: குற்றமே இல்லாத மனிதன் உலகில் உண்டோ?
இருக்கவே முடியாது. துளையே இல்லாமல் நாதஸ்வரம் செய்ய முடியுமா... யோசித்துப் பாருங்கள். மனிதனாக பிறந்தவன், குற்றமுள்ளவனாக தான் இருப்பான். அவற்றை போக்கிக் கொள்ள முயற்சி செய்பவன், பிறந்ததன் நோக்கத்தை அடைய முயல்கிறான். மற்றவன், சாதாரண மானுடனாகவே இருந்து மறைகிறான்!
* சண்முகபிரியா, திருவண்ணாமலை: ஜாதி பிரச்னை நம் நாட்டை விட்டு எப்போது ஒழியும்?
'இன்னும், 50 ஆண்டுகளுக்கு கலப்புத் திருமணத்திற்கு மட்டுமே இந்த நாட்டில் அனுமதி...' என, ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். பிரசாரத்தின் மூலமோ, அறிவுரையிலோ, எழுத்தினாலோ ஜாதியை ஒழிக்க முடியும் எனத் தோன்றவில்லை!
* வி.ராமன், சென்னை: அதிக அதிகாரம் கொண்டது நீதிமன்றமா, சட்ட மன்றமா?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இது, விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. நீதிமன்றங்கள், தாமே உயர்ந்த பீடம் என்பதும், சட்ட மன்றங்கள், நாங்களே, 'நம்பர் 1' என்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்த மெகா சீரியலை எப்போது, எவர் முடித்து வைக்கப் போகின்றனரோ!
க.கணேசன், திண்டுக்கல்: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர் என் பெற்றோர்... என் வயது, 28; திருமணம் செய்யலாமா?
வருபவளை வைத்துக் காப்பாற்றும் வசதியை பெற்று விட்டீர்களா? அப்படியானால், 'கோ-அஹட்' அந்த வசதியை பெறாதவர், இன்னொரு உயிரையும் திருமணம் என்ற பெயரில் இம்சிக்க வேண்டாம்!
* எல்.அரவிந்த், கோவை: மனிதனுக்கு மிக, மிகத் தேவை பணம் தான் என்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
உங்களது கருத்தை மறுக்கிறேன்; மனிதனுக்கு மிக மிக தேவையானது மூளை! மூளை இருப்பின் அதை பயன்படுத்தி, பணத்தை மட்டுமல்ல இன்னும் என்னென்ன தேவையோ அனைத்தையும் சம்பாதிக்கலாம். ஆனால், பணம் மட்டும் இருந்தால், மூளையை சம்பாதிக்க முடியுமா?
எஸ்.ஸ்ரீவர்ஷன், விழுப்புரம்: உங்கள் நண்பர் குழாமில் சீரியஸ் டைப் அதிகமா, ஜோவியல் டைப் அதிகமா?
இரண்டாவது டைப் தான் எனக்கு ஒத்துப் போகும்! பெரியசாமி அண்ணாச்சி துவங்கி, அன்வர் பாய் வரை அனைவருமே ஜோவியல் தான். ஒன்றிரண்டு, 'சீரியஸ்' பேர்களும் உண்டு... அவர்களை அடிக்கடி சந்திப்பதில்லை!
