PUBLISHED ON : ஜூன் 10, 2018

நண்பர் ஒருவருக்கு ஏழெட்டு அக்கா, தங்கைகள்... அவர்கள் அனைவருக்கும் மணமுடித்து தலை நிமிரும் போது, இவருக்கு தலை நரை கண்டு விட்டது. ஆசாமி, அரசாங்க பணியில் இருப்பதால், அவரது வயதைப் பொருட்படுத்தாது, நன்கு படித்த பெண்ணை மணம் செய்து கொடுத்தனர்.
அடுத்த ஆண்டே பெண் குழந்தை பெற்றார்... காலக்கிரமத்தில் பள்ளியிலும் சேர்த்தார். தன் மகளை அவரே பள்ளியிலும் விட்டு, மீண்டும் அழைத்து வருவார்... 'ஆஹா... மகள் மீது எவ்வளவு பாசம் என் கணவருக்கு...' என, அவர் மனைவி நினைத்துக் கொண்டிருக்கிறார்... ஆனால், அவருக்கு தெரியாது ஆசாமி, 'ஜொள்ளு' பார்ட்டி என்பது!
சுபாவத்திலேயே நகைச்சுவை உணர்வு அவரிடம் அதிகம் என்பதால், எவரையும் எளிதில் கவர்ந்து விடுவார். பள்ளியில், தம் குழந்தைகளை அழைத்து வரும் இளம் தாய்மார்களுடன், 10- நிமிடம், 'கடலை' போட்டு விட்டே ஆபீஸ் செல்வார்.
இப்போ, நான் சொல்ல வந்த, 'பாயின்ட்' இதுவல்ல... நண்பரின் மகள் நாலாவது வகுப்பை அடைந்தாள்... ஒரு நாள், தன் தந்தையிடம், 'ஏம்ப்பா... என் கிளாஸ் மேட் ரோகிணி, ரேவதி, ரம்பாவோட அப்பால்லாம் சின்னவங்களா இருக்காங்க... உங்கள, என் தாத்தாவான்னு பிரெண்ட்ஸ் எல்லாம் கேக்கறாங்க...' என்று கேட்டு விட்டாள்.
அன்று மாலை சந்திப்பின் போது புலம்பி தள்ளி விட்டார் நண்பர்...
நண்பர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தோம்!
அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின், மாலை நேரத்தில், அறிமுகமே இல்லாத நபர் ஒருவர் எதிரே வந்து, 'ஹலோ மணி...' எனவும், நானும், 'ஹலோ...' சொல்லி உற்றுப் பார்த்தால்... நம்ம ஆசாமி. தலைமுடி துவங்கி, மீசை, புருவம் என அனைத்து இடங்களிலும், கறுகறுவென, 'டை' அடித்து வந்திருந்தார்.
ஆச்சர்யத்திலும், சந்தோஷத்திலும் நண்பருக்கு உற்சாகமூட்டினோம். நண்பரின் மகளுக்கும் சந்தோஷமாம். அவளது தோழியரும், 'உங்கப்பா ஸ்மார்ட் ஆயிட்டார்டீ...' என்று சொல்கின்றனராம்!
வாரம் ஒருமுறை சலுான் சென்று, 500 ரூபாய் செலவு செய்து, 'டை' போட்டுக் கொண்டார். இரண்டு மாதம் சென்றிருக்கும்... காலை எழுந்ததும், விடாமல் தும்மல் வருகிறது என்றார்; சில நாட்களில் மாலையிலும் தும்மினார்!
எனக்கு சந்தேகம் தட்டியது; நண்பரிடம், 'நீங்கள் அடித்துக் கொள்ளும், 'டை' உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை; ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 'டை'யை மாற்றிப் பாருங்களேன்...' என்றேன்.
'பிராண்டு'கள் பலவும் மாற்றிப் பார்த்தார்... தும்மல் நின்றபாடில்லை. 'டை' போடும் நண்பர்களிடமெல்லாம் ஒரு, 'சர்வே' நடத்தினார். பலரும் பல கதைகளைக் கூறி இருக்கின்றனர்...
'டை' போட்ட ஒரு ஆசாமிக்கு, தொடர்ந்து வயிற்றுப் பொருமல் இருந்திருக்கிறது... இன்னொருவருக்கு வாயு பிடித்தம் ஏற்பட்டு, அது நெஞ்சை பிடிக்க, டாக்டரிடம் ஓடி இருக்கிறார்... அவர் ஹார்ட் அட்டாக்கோ என சந்தேகித்து, இ.சி.ஜி., அது, இது என, இரண்டாயிரம் ரூபாயை கறந்து, 'ஹார்ட் பிரச்னை ஒன்றும் இல்லை...' என, அனுப்பி வைத்திருக்கிறார்.
மேற்படி நபர்கள் எல்லாம், 'டை' போடுவதை நிறுத்திய பின், தும்மல்... இத்யாதி இத்யாதி ஏதும் இல்லை!
நண்பரின் இந்த அனுபவத்தைக் கேட்ட பின், எப்போதோ படித்த உண்மை சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது...
அவர், அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வரர்... திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பிரபல மருத்துவர்கள் பலரும் பார்த்தனர்... எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டன. வியாதி என்ன என்றே கண்டுபிடிக்க முடியவில்லை!
கையை பிசைந்த அமெரிக்க டாக்டர்கள், 'இது, புதுவிதமான நோய்... இதற்கு மருந்து, மாத்திரை எதுவும் கிடையாது; உங்களது அந்திம காலம் நெருங்கி விட்டது... எனவே, மீதியிருக்கும் உங்கள் வாழ்நாளை சுற்றுலா சென்று உல்லாசமாக கழியுங்கள். அதுவே, உங்கள் மனதுக்கு ஆறுதல் தரும்...' எனக் கூறினர்.
அடுத்த விமானத்தைப் பிடித்து, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் சென்றார், கோடீஸ்வரர். புதிய கோட் - சூட் தைக்க நினைத்து, ஊரிலேயே புகழ் பெற்ற பெரிய டெய்லரிடம் சென்றார்.
அளவெடுத்த டெய்லர், கோடீஸ்வரரிடம், 'உங்களுக்கு வயித்து வலி இருக்குமே... மூச்சு முட்டுமே...' என, அவருக்கு உள்ள அத்தனை உபாதைகளையும் புட்டு புட்டு வைத்தார்.
ஒரு டெய்லர், எப்படி தன் உடல் வேதனைகளை கண்டுபிடித்தார் என்று கோடீஸ்வரருக்கு ஆச்சர்யம்... அதைப் பற்றி கேட்ட போது...
'உங்கள் இடுப்பு சைஸ் இத்தனை... ஆனால், அதைவிட மூன்று இஞ்ச் குறைவாக உள்ள பேன்ட் போட்டிருக்கிறீர்கள்... அதனால்தான் அவ்வளவு பிரச்னை, - ஒவ்வாமை...' என்றார் டெய்லர்!
நம்மவர்களிலும் சிலர் இதே தவறை செய்கின்றனர்... குறிப்பாக அண்டர்வேரின் அளவுகளில்... 'லார்ஜ்' என்ற சொல்லைக் குறிக்கும், 'எல்' போட்ட சைஸ் தான் அவருக்கு வசதியாக இருக்கும்; ஆனால், அவர், 'ஸ்மால்' சைஸ் வாங்கி போட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்.
அப்படிப்பட்ட அவஸ்தை ஆசாமியாக நீங்களும் இருந்தால், இன்றே தொல்லையிலிருந்து விடுபடுங்கள்.
போனஸ் தகவல் ஒன்று: 2,000 வகை அலர்ஜி -உண்டாம்... யாருக்கு எது, ஏன் அலர்ஜி என்று கண்டுபிடிப்பதே பெரும் வேலையாம்!
கிறிஸ்துவ நண்பர் ஒருவர், தன் மகள் பிறந்த நாளுக்கு எங்களை அழைத்திருந்தார். அவர் வீட்டிலேயே பிறந்த நாள் விழா கேக் எல்லாம் வெட்டி கொண்டாடிய பின், அவரது வீட்டைச் சுற்றிப் பார்த்தேன்.
உதவாது என நாம் துாக்கி எறியும் பவுடர் டப்பா முதல், பழைய கார் பேட்டரி கூடு வரை பயன்படுத்தி, செடி வளர்த்தோ, பூ கொடிகள் வளர்க்கப்பட்டோ இருந்தன.
விசாரித்தேன்... தன், 88 வயது தந்தையை அறிமுகம் செய்து, 'எல்லாம் இவர் தான்...' என்றார். இளைஞர் போல் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார் அவர்.
மிக சுவாரஸ்யமாகப் பேசியவர், தான் வளர்க்கும் மீன்களைப் பற்றி கூறினார்... அது, கேள்விப்படாத செய்தியாக இருந்தது.
இதோ:
வீட்டில் ராமு, சீனு, காமு என்று குழந்தைகளை வளர்ப்பது சுலபம்...
ஏஞ்சல், சுமித்ரா, பார்ப், போனஸ் அயர்ஸ், ஹாக்கி ஸ்டிக், பெள்சில் ஆகிய இந்த மீன்களை மிகுந்த கவனமாக வளர்க்க வேண்டும். இவைகளும் குழந்தைகள் தான்; ஆனால், தொட்டியில் வளரும் குழந்தைகள்!
வளர்ப்பு மீன் விற்கும் கடையில் நல்ல கண்ணாடித் தொட்டி தயார் செய்ய வேண்டும்; வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றியாக வேண்டும்; குளோரின் கலந்த குழாய் தண்ணீரை ஒரு நாள் கழித்துத் தான் கண்ணாடித் தொட்டியில் ஊற்ற வேண்டும்.
மீன் குஞ்சுகளுக்கு ஆகாரம், உயிருள்ள புழு, பூச்சிகளே... வளர்ப்பு மீன் விற்பனைக் கடைகளில், இப்போது மீன்களுக்கு உரிய பலவித உணவுகளை விற்கின்றனர்.
வெறும் நீரில் மட்டும் மீன்கள் உயிர் வாழ்வதாக நினைக்கக் கூடாது; தண்ணீரில் உள்ள பிராண வாயு மீனுக்குப் போதாது. அதற்காகத் தொட்டித் தண்ணீரில் அமேஸான்ஸவர்ட், கபம்பா, மின்ட், வாலிஸ் நெரியா, ஹைட்ரல்லா முதலிய செடிகளை தேடிப் பிடித்து வைக்க வேண்டும். அலைந்து சுற்றினால் செடிகள் கிடைப்பது கஷ்டமில்லை; குறைந்த விலைக்கே கிடைக்கிறது.
நீங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து, வீட்டிலுள்ள குழந்தைகள், தொட்டியிலுள்ள மீன்களைப் பிடித்து விடக் கூடும். கண்ணாடித் தொட்டியை அவர்கள் சுலபமாக உடைத்து விடுவர். தொட்டியை சரியாக மூடாமல் வைத்திருந்தால் பல்லியோ, எலியோ இதுதான் சமயமென, 'லபக்' என்று உங்கள் அருமை மீன் குஞ்சுகளை விழுங்கி விடலாம்.
வீடுகளைத் துப்புரவு செய்யும் போது, தண்ணீரோடு மீன் தொட்டிகளைத் துாக்கலாகாது. தினம் காலையில் எழுந்ததும் வேறு என்ன காரியம் செய்தாலும் செய்யாவிட்டாலும், எல்லா மீன்களும் உயிரோடு இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலை வேளையில் தொட்டியின் அடிமட்டத்தில் அவை மேய்ந்து கொண்டிருக்கும்; இரவில் தான் அவை மேல் பக்கம் வரும்.
மீன், தன் உமிழ் நீரால் கட்டும் கொப்புளம் உடையாது. அதில் தான், பெண் மீன்கள் முட்டையிட, ஆண் மீன்கள் அவற்றைப் பாதுகாக்கும். பெண் இனத்திற்கு முட்டை இடுவதோடு வேலை முடிந்து விட்டது. மற்ற சமயங்களில் சும்மா சும்மா, சாப்பிடும். ஆண் மீன்கள், அப்போது அவைகளை அடித்து துரத்தும்; பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
சூரிய வெளிச்சம் படும்படியாகத் தொட்டியை தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். இரவில் மின் விளக்குகளும் பொருத்தி அலங்காரம் குறையாமல் காக்க வேண்டும். சரியாகப் பாதுகாத்தால், மூன்று ஆண்டு வரை தொடர்ந்து மீன்களைத் தொட்டியில் வளர்க்கலாம்.
இவ்வளவு முன்னேற்பாடுகளோடு நீங்கள் அவற்றைப் பராமரித்து வந்த போதிலும், திடீரென்று என்ன காரணம் என்று தெரியாமலேயே உங்கள் அருமை கோல்டு பிஷ் அல்லது நியான் டெட்ரா (இருட்டிலே கூட பளிச்சென்று வெளிச்சம் காட்டி உங்களை மயக்க கூடியவை) தண்ணீர் தொட்டி வாழ்வைத் துச்சமாகக் கருதி, உயிர் துறந்து நீர் மேல் மிதக்கலாம். நிச்சயம் நீங்கள் மனம் உடைந்து போவீர்கள்; வளர்த்த பாசம் சும்மாவா?
என்ன... மீன் வளர்க்கும் ஆர்வம் உங்களுக்கும் வந்து விட்டதா?
