PUBLISHED ON : ஜூன் 10, 2018

வேலைக்கு போகும் பெண்ணா...
ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் தோழிகளான நாங்கள் ஐந்து பேரும் விட்டுக் கொடுத்து, பிரச்னைகளை பகிர்ந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம்.
அத்துடன், குடும்பம் மற்றும் அலுவலக டென்ஷன் எல்லாவற்றையும் விடுத்து, எங்களுக்கே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கிக் கொள்வோம். எப்படி என்கிறீர்களா... ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒரு நாள் லீவு போட்டு, எங்களில் யாராவது ஒருவரது வீட்டில் ஆஜராவோம். மறக்காமல், 'லஞ்ச்' பாக்சையும் கையோடு எடுத்துச் செல்வோம்.
தோழியின் வீட்டில் நுழைந்த மறு நிமிடமே, சந்தோஷம் ஒட்டிக்கொள்ளும். குடும்பம், குழந்தையின் குறும்புத்தனம் மற்றும் கணவருடனான ஊடல் வரை, மனம் திறந்து பேசுவோம், இடையிடையே கதை பேசி குதுாகலித்து, மதிய உணவை பகிர்ந்து உண்போம். இப்படியான, 'கெட் டு கெதரில்' கிடைத்த ஆலோசனைகளால், எங்கள் குடும்பப் பிரச்னைகள் பல தீர்ந்துள்ளன.
சாப்பாடு முடிந்த கையோடு, மனதுக்கு பிடித்த காமெடி பட, 'சிடி'யை ஓட விட்டு, சிரித்து மகிழ்வோம். மாலையில், கிச்சனில் புகுந்து காபி தயாரித்து குடித்து, ஐந்து மணிக்கு புறப்பட்டு, அவரவர் வீடு திரும்புவோம்.
இந்த ஒரு நாள் தரும் உற்சாகம், அடுத்த ஆறு மாதங்களுக்கு எத்தகைய சூழ்நிலையையும், சிரித்து கடக்கும் மன தைரியத்தை எங்களுக்கு தரும்.
உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்க வேண்டுமா... உங்கள் தோழியருடன் ஒன்று சேர்ந்து, உங்களுக்கான நாள் அமைய இன்றே திட்டமிடுங்கள்!
— என்.குர்ஷித், பணகுடி.
திருமண பந்தியில்...
சமீபத்தில் நான் கலந்து கொண்ட திருமண விழாவில், விருந்தின்போது, வயதானோர் மற்றும் சிறுவர்களுக்காக தனியாக ஒரு வரிசையில், டைனிங் டேபிள் போட்டு, அந்த இடத்தில் வேறு யாரும் அமர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டனர். இதுகுறித்து கேட்டபோது, வயதானோரும், சிறுவர்களும் சற்று மெதுவாகதான் சாப்பிடுவர். மற்றவர்களுடன் சேர்ந்து அமரும்போது, பக்கத்தில் உள்ளவர் சாப்பிட்டு முடித்தாலும், இவர்கள் இலையில் பாதி கூட காலியாகி இருக்காது.
எல்லாரும் சாப்பிட்டு எழுந்து விடுவதால், தனியாக அமர்ந்து சாப்பிட கூச்சப்பட்டு, இலையை மூடி, எழுந்து விடுகின்றனர் அல்லது வரிசையில் ஒரு சிலர் மட்டும் இப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வரிசையை சுத்தம் செய்து, அடுத்த பந்திக்கு தயார் செய்ய தாமதமாகிறது.
எனவே, இப்படி மெதுவாக சாப்பிடுவோருக்கு, தனியாக ஒரு வரிசை ஒதுக்கிவிட்டால், இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கலாம், என கூறினார்.
இது, நல்ல யோசனையாகவே தெரிந்தது. விசேஷ வீட்டினர் இம்முறையை கடைப்பிடிக்கலாமே!
— ஆர்.ரேவதி, தஞ்சாவூர்.
வழி காட்டினால் போதுமே!
சமீபத்தில் ஒருநாள் காலையில், பக்கத்து வீட்டு பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தெருவுக்குள் நான்கைந்து திருநங்கைகள், கையில் பையுடன் நுழைந்தனர். அவர்களை பார்த்து, 'வசூல் வேட்டை'க்கு வருகின்றனரோ என பயந்து, அவரவர் வீட்டுக்குள் சென்று விட்டோம். சிறிது நேரம் சென்றதும், வெளியே வந்தோம்.
அப்போது, அந்த திருநங்கைகளுடன் சில பெண்களும், ஆண்களும் சிரித்து பேசிக் கொண்டிருக்கவே, என்ன விஷயம் என்று அறிவதற்காக, அருகே சென்றோம். 'வாங்கக்கா...' என்று வாய் நிறைய கூப்பிட்டவர்கள், 'வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் இருக்கு... வேணும்ன்னா வாங்கிக்கங்கக்கா...' என, மரியாதையுடன் பேசினர்.
பையில், அப்பளம், வடகம், மசாலாபொடி, ஊறுகாய் மற்றும் தின்பண்டங்களும் இருந்தன. எங்களுக்கு தேவையானதை வாங்கியதும், நன்றி கூறி கிளம்பியவர்கள், 'ஆரம்பத்தில் கை தட்டி பிச்சைதான் எடுத்தோம்; வெட்கமாக இருந்தது. ஒரு பெண் தொழிலதிபர் எங்களை பார்த்து, 'உதவி செய்கிறேன்; சுயதொழில் செய்து, உழைத்து பிழைக்கிறீர்களா?' என கேட்டார். 'சரி!' என்றோம். அவரும், அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து, ஆளுக்கு, ஐயாயிரம் ரூபாய் தந்து உதவினர். அதிலிருந்து நாங்களே பொருட்களை தயாரித்தும், விலைக்கு வாங்கியும் விற்றுப் பிழைக்கிறோம்...' என்றார்.
அனைவரும் நெகிழ்ந்து பாராட்டினோம். திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டினால், அவர்களும் வாழ்வில் உயர்வர் என, புரிந்தது. அரசும் இவர்களுக்கு உதவலாமே!
— பா.பாக்யலட்சுமி, ராஜபாளையம்.
