PUBLISHED ON : ஜூன் 10, 2018

குன்றக்குடி அடிகளார், தம், 'மண்ணும், மனிதர்களும்' நுாலில் சொல்கிறார்: மகா சன்னிதானம், நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் காட்டுவார்; ஆனால், சிரிக்க மாட்டார். அன்று ஒரு வேடிக்கை... அப்போது, 'பண்டாரக் கட்டு' எனும் பகுதியில் சுப்பையா முதலியார் என்பவர் வேலை செய்தார். நல்லவர்; மாடு போல உழைப்பார். புத்தியை அதிகமாக பயன்படுத்த மாட்டார்; சொன்னபடி செய்வார்.
மகா சன்னிதானம், பண்டாரக்கட்டு சுப்பையாவை அழைத்து, 'பரிகலம் (சமையற்கட்டு) அம்மியில் பல் குத்த பயன்படும் ஊசி குத்தி வைத்திருக்கிறது; எடுத்து வா...' என்றார். சுப்பையா ஓடினார்; அம்மியை தடவிப் பார்த்தார். ஊசி இல்லை; வந்து, 'ஊசி இல்லை...' என்றார்.
அம்மியில் ஊசி குத்தி வைக்க முடியுமா... இந்த பகுத்தறிவு அவருக்கு இல்லை என்று நினைக்காதீர். மடத்தில் பழக்கம் அப்படி! மகா சன்னிதானம் என்ன உத்தரவு போட்டாலும், அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும்; செய்ய வேண்டும். இந்த பழக்கத்தால் வந்த விளைவு இது!
'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து: 'டென் கமாண்ட்மென்ட்ஸ்' திரைப்படம் எடுத்து உலகப் புகழ் பெற்றவர், டெசிபிடிமில்!
'நீங்கள் ஏன் பைபிள் சம்பந்தப்பட்ட படங்களையே எடுக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அவர் சொன்னார், 'இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்த புத்தகத்திற்கு கிடைத்து வரும் விளம்பரத்தை, லாபகரமாக பயன்படுத்திக் கொள்ளத் தான்...' என்றார்.
'தெரிந்து கொள் தம்பி' சிறுவர் நுாலிலிருந்து: 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது... 'பவுஜி அஹ்குபார்' அப்படியென்றால், 'படைச் செய்திகள்' என்பது பொருள். இந்த, அஹ்குபார் என்பது தான் பின், அக்கப்போர் ஆயிற்று. தன் தரப்பு படைச் செய்திகளை உயர்வாகவும், எதிரி தரப்பு செய்திகளை மட்டமாகவும் பிரசாரம் செய்யும் வித்தை இது. பின், அஹ்குபார், 'அக்கப்போர்' ஆகி, உண்மைக்கு மாறான விஷயங்களை பேசுவதைக் குறிப்பதாயிற்று!
துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்: உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர், மார்க் டுவைன்; இவரிடம் ஒரு பழக்கம், யாராவது ஆராய்ச்சி செய்து, ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்றால், உடனே, முதலாவதாக முதலீடு செய்வார். எழுத்தில் நிறையவே சம்பாதித்தார். ஆனால், இப்படி, 'ஷேர்' எடுத்தே நொடித்துப் போய் விட்டார்.
அப்படி இவர் நொடித்திருந்த வேளையில் அவரிடம், 'இது என் புதிய கண்டுபிடிப்பு; கம்பெனி ஆரம்பித்து அதை உற்பத்தி செய்ய நீங்கள் உதவ வேண்டும்...' என்று வேண்டினாராம் ஒரு விஞ்ஞானி.
'இந்த விஷயத்தில் நான் நிறையவே பாடம் கற்றுக் கொண்டேன்...' என்று கூறி, விஞ்ஞானியை துரத்தி விட்டார் டுவைன். அவர் மட்டும் அந்த சமயத்தில் பங்கு எடுத்திருந்தால் கோடீஸ்வரராகி, கோட்டை விட்ட பணத்தை எல்லாம் மீட்டிருக்கலாம்.
காரணம், தேடி வந்த விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம்பெல்; அவர் கண்டுபிடித்த கருவி, டெலிபோன்!
இங்கிலாந்து அரசி, எலிசபெத்தின் மகன் சார்லஸ் (டயானாவின் கணவர்) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த போது, ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், 'தினமும் காலை, 7:00 மணிக்கு, என் அறைக்கு வெளியே இருக்கும் குப்பை தொட்டியிலிருந்து, குப்பை எடுப்பதற்காக ஒருவர் வருவார். அவர் பாடிக்கொண்டே இருப்பார்; அந்த பாட்டு தான் என்னை எழுப்பும். அவர் குரல் மிக நன்றாக இருக்கும்...' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வளவு தான்! அந்த குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்; அவரை ஒரு பிரபல இசைத்தட்டு கம்பெனி உடனே ஒப்பந்தம் செய்து விட்டது.
நடுத்தெரு நாராயணன்
