
பி.கல்பனா, மதுரை: காதலில் அதிகம் சிக்கிக் கொள்வது, கல்லுாரிப் பெண்களா அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களா?
கல்லுாரிப் பெண்களோ, வேலைக்குச் செல்லும் பெண்களோ... ஆண்களுடன், 'ப்ராக்சிமிட்டி' -- நெருங்கி பழகும் சந்தர்ப்பம் உள்ள பெண்கள், மிக சுலபத்தில் காதல் வலையில் விழுந்து விடுகின்றனர்!
* பா.பாண்டிசங்கர், சென்னை: விலைவாசி ஏற்றத்திலும், சிக்கனத்தை கடைபிடிப்பது எப்படி?
ஒரு பொருளை வாங்கும் முன், 'இது இல்லாம வாழ முடியுமா...' என, உங்களுக்குள்ளே கேள்வி எழுப்புங்கள்... 'முடியும்' என்ற பதிலை மனம் சொல்லும்... 'பர்ஸ்' காலியாகாது!
எம்.பாலசந்திரன், திண்டுக்கல்: இரக்க குணம், இயற்கையிலேயே பெண்களிடம் அதிகமா அல்லது ஆண்களிடம் அதிகமா?
சந்தேகமே இல்லாமல் பெண்களிடம் தான் அதிகம். ஒரு கொடுமையை, தீமையை, ஏழ்மையைக் கேட்டவுடன், கலங்கி விடுவர்; கண்ணீர் விடுவர்... இதனாலேயே சுலபமாக ஏமாந்தும் விடுகின்றனர்!
தீ.அசோகன், திருவள்ளூர்: வேலையில்லா திண்டாட்டம் எப்போது ஒழியும்?
பிறரிடம் வேலை கேட்கும் பழக்கம் என்று ஒழிகிறதோ, அன்று இப்பிரச்னை தீரும்! ஒவ்வொருவரும் தம் தகுதிக்கு ஏற்ப, தமக்கென ஒரு சொந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும்! அப்போது, வேலையில்லை என்ற சொல்லை கேட்க முடியாது!
வி.எஸ்.மோகன், தஞ்சாவூர்: எவரெவருக்கு ஆயுள் குறைவு?
பயந்த சுபாவம் உள்ள அனைவருக்குமே, ஆயுள் கெட்டி கிடையாது!
* எஸ்.முருகேசன், நீலகிரி: அரசியல்வாதிகளின், 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றால் என்ன?
ஓட்டு போடும் மிஷின்களான இளிச்சவாயர் காதில் பூ சுற்றுகின்றனர் என்பது பொருள்!
மு.சவுந்தர்யா, கன்னியாகுமரி: சென்னைக்கு வந்தால் பிழைக்கலாமா?
புத்திசாலித்தனமாக உழைக்கும் திறமை இருந்தால், உங்க ஊரிலேயே பிழைக்க முடியும். சென்னைக்கு வரவே வராதீர்... இங்கு குடியிருக்க இடமில்லை; குடிக்க தண்ணீருமில்லை!
கே.ராமசாமி, திருத்தங்கல்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவியை அனுசரித்துப் போவது எப்படி?
சிறந்த நடிகனாகிவிட வேண்டும் என்கிறார், லென்ஸ் மாமா... இல்லாதது குறித்தெல்லாம் சந்தேகப்படும் மனைவியிடம், 'சரண்டர்' நாடகம் தான் போட வேண்டும் என்று, மேலும் கூறுகிறார் அவர்... இல்லையெனில், குடும்ப நிம்மதி கெட்டு விடுமாம்!

