
காதலித்து மணம் புரிவோர், தம் வாரிசுகளை காதல் மணம் செய்ய பொதுவாக அனுமதிப்பதில்லை. இதை ஒட்டி, கள்ளக்குறிச்சி வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் இது... இவ்வாசகர், ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி.
கடிதத்தில் கூறுகிறார்...
தன் காதலே, குழந்தைக்கு எமனாகி விடுமோ என்று வெந்து தவிக்கும், என் நண்பனைப் பற்றி அவசியம் உங்களுக்குத் தெரிவிப்பதற்காக இதை எழுதுகிறேன்...
சினிமாவாகட்டும், மெகா சீரியலாகட்டும், காதல்... காதல் என்று கவர்ச்சிகரமாகக் காட்டி, திருமணத்தோடு முடித்து விடுகின்றனரே தவிர, அதன் பின், குழந்தைகள் வளரும்போது தான், பெரிய கண்டமே காத்திருப்பதை யாரும் எழுதுவதில்லை; சொல்வதுமில்லை.
அப்பப்பா... தினம் தினம் அவர்கள் வாழ்வில் கத்திரி வெயில் தான்!
காதல் திருமணமான என் நண்பனுக்கு, 'நிலா, நட்சத்திரா...' என்ற இரு அழகான - பெயர் மாற்றப்பட்டுள்ளது, புத்திசாலி பெண் குழந்தைகள்.
பெரிய பெண் நிலா, 10 வயதிலேயே வயதிற்கு வந்து விட்டாள். அதன் பிறகு தான் பூகம்பமே ஆரம்பம். 'உன் தாய், காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்தவள் தானே... நீ எப்படி இருக்கப் போகிறாய்...' என்பது போன்ற பேச்சுக்கள், சுற்றி இருப்போரிடம் இருந்து...
தினம் தினம் இதைக் கேட்டு, அந்த பிஞ்சு மனம் நஞ்சாகி விட்டது. 'பெற்றவர்களையே கொன்றுவிட தோன்றுகிறது...' என்று சொல்லி அழுகிறாள்.
காதலித்த காலத்தில் பெற்றோரைப் பிரிந்து வந்தது கூட, என் நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் கஷ்டமாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் காதல், குழந்தைகளையே நெறி தவற வைத்து விடுமோ என்று, வேதனையில் வெந்து போகின்றனர்.
ஒருநாள், பேப்பர் வாங்க, பெட்டி கடைக்கு நண்பன் சென்றபோது, அங்கிருந்த வேலையற்றோர் பட்டாளம், 'அப்பாவே, 'ரூட்டு' போட்டு வச்சிருக்காரில்லே... பெண்ணும் அப்படித்தான் இருக்கும்...' என்று இவனைப் பார்த்து ஜாடையாகப் பேச, கூனிக் குறுகிப் போய் விட்டான். என்ன செய்ய முடியும், இதென்ன சினிமாவா... ஒரு ஆள், 10 ஆட்களை அடித்துப் போட...
மற்றொரு நாள், குழந்தைகள் பெயரில் வங்கியில் பணம் கட்ட, நண்பனின் மனைவி போன போது, எதிர் வீட்டு மாமியும் பணம் கட்ட வந்தவர், அவருடன் பேசியிருக்கிறார்... 'ஏண்டியம்மா... என்னத்துக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு குழந்தைகள் பேர்ல பணம் சேக்கறே... எங்களாட்டம் நீயென்ன வரதட்சணை, சீர், செனத்தி, கல்யாணம்ன்னா கஷ்டப்பட போறே...
'ஏதாவது பெரிசா புளியங்கொம்பா பிடிச்சிறச் சொல்லு... இதெல்லாம் நான் சொல்லியா தரணும்... உனக்குத்தான் ஏகப்பட்ட அனுபவமாச்சே...'ன்னு, வாயால் நெருப்பை கொட்டியிருக்கிறாள்.
இதற்கெல்லாம், 'ஹைலைட்'டாக, நிலா படிக்கும் பள்ளியில் ஒரு விஷயம் நடந்தது... வீட்டுப்பாடம் சரியாக செய்யாமல் சென்றதால், அவள் வகுப்பு ஆசிரியை, 'ஏண்டி... வீட்டுப்பாடம் பண்ணலே... யாரைப் பார்த்து பல் இளிச்சிக்கிட்டு இருந்தே... பெத்தவ புத்தி தானே உனக்கும் வரும்...' என்று திட்டியுள்ளார்.
மேலும், மற்ற பிள்ளைகளை பார்த்து, 'இவளோடு சேர்ந்தா, நீங்களும் குட்டிச் சுவராக வேண்டியது தான்...' என்று சொன்னதும், நிலாவின் பிஞ்சு மனதில் வேதனை விசுவரூபமெடுத்து விட்டது.
அன்றிலிருந்து அவளுக்கு அம்மா, அப்பாவை பிடிக்கவில்லை. அவளை ஏதாவது கேட்டு விட்டால், வெடித்து விடுகிறாள்...
'உனக்கென்ன யோக்கியதை இருக்கு என்னை கேக்க... எனக்கொரு நல்ல அம்மா, அப்பாவை கடவுள் கொடுத்திருக்கக் கூடாதா... உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு...' என்ற வார்த்தைகளெல்லாம் தினசரி வாடிக்கைகளாகி விட்டன.
என் நண்பனும், அவன் மனைவியும் மனச்சிதைவுக்கு ஆளாகி விட்டனர். காதலே தங்களுடைய அன்பு மகளுக்கு எமனாகி, விபரம் புரியாத இந்த இளம் வயதில் அவளை நிலை தடுமாற வைத்து விடுமோ என்று, அஞ்சி அஞ்சி சாகின்றனர்.
ஆகையால், காதலர்களே யோசியுங்கள்... திருமணம் வரை மட்டும் யோசிக்காமல், உங்கள் குழந்தைகள் திருமணம் வரை யோசியுங்கள்.
இப்படி எழுதியுள்ளார் வாசகர்... என்ன... யோசிப்பீர்கள் தானே!
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல் கலாமுடன், திருச்சிக் கல்லுாரியில் படித்தவர், மு.சதானந்தம், புதுச்சேரிக்காரர். அவர், கலாமை நினைவு கூர்ந்து எழுதிய கடிதம்...
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்துல் கலாம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், அறிவியல் பிரிவு மாணவர்; நான், வரலாறு பிரிவு மாணவன். நாங்கள் இருவரும், நியூ ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தோம். அப்போது அவரும், நானும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
அவருக்கு பொழுது போகவில்லை என்றால், 106ம் எண்ணுள்ள, என் அறைக்கு வருவார், எனக்கு பொழுது போகவில்லை என்றால், 126ம் எண் உடைய, அவருடைய அறைக்கு போவேன். வேறு யாருடனும் நெருங்கி பழகாமல் தனிமையை விரும்பும் அவர், என்னிடம் மட்டும் நெருங்கி பழகினார்.
அந்த காலகட்டத்தில் அவர், வெள்ளை வேட்டியும், முழுக்கை சட்டையை பாதி வரை மடக்கி விட்டு இருப்பார். கைக்கடிகாரம் கூட அணிந்திருக்க மாட்டார். அவ்வளவு எளிமையாக இருந்த அவர், தனக்கு பொருளாதார வசதி குறைவு என்பதை கூட வெளிப்படுத்தியதில்லை.
ஒரு முறை, விடுமுறையில் ஊருக்கு சென்று வந்த அவர், ஒரு பெரிய சோழி ஒன்றை, 'பேப்பர் வெயிட்'டாக பயன்படுத்த, எனக்கு பரிசளித்தார். அதில், இயற்கை காட்சிகளுக்கு நடுவில், என் பெயர் இருந்தது.
'சோழியில் அழியாத அளவிற்கு எப்படி செய்கின்றனர்...' என்று கேட்ட போது, 'ஆசிட்'டை பயன்படுத்தி, எப்படி செய்வர் என்பதை விளக்கமாக சொன்னார்.
சங்கு மற்றும் சோழி போன்ற கடல் பொருட்கள் விற்பனை செய்யும் அவர் உறவினரிடம், எனக்காக செய்யச் சொல்லி பரிசளித்ததை, இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்...
'இன்டர்மீடியட்' இறுதி தேர்வு எழுதிய பின், 1952ல் ஊருக்கு செல்வதற்கு முன், 'ஆட்டோகிராப்' புத்தகத்தில் அவர் கைப்பட எழுதி, அவரது புகைப்படத்தையும் ஒட்டிக் கொடுத்தார்.
செயின்ட் ஜோசப் கல்லுாரியில், அவர், பி.எஸ்சி.,யும், நான், பி.ஏ.,வும் முடித்த பின், என் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் தங்கி, வேலை தேடி கொண்டிருந்தேன். அவர், சென்னையில் உள்ள, 'மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி'யில், 'ஏரோனாடிக் இன்ஜினியரிங்' படித்தார்.
சென்னையில் படித்த போது, நாகப்பட்டினத்தில் உள்ள, 'இந்தியா ஸ்டீல் ரோலிங் மில்'லுக்கு, ஏதோ வேலையாக வந்தார். நான் நாகையில் இருப்பதை அறிந்து, அவர் தங்கியிருந்த இடத்திற்கு என்னை அழைத்து பேசினார்; வெகுநேரம் பேசினோம். சந்திப்பு நடந்த ஆண்டு, 1955 என்று நினைக்கிறேன். அது தான், நான் அவரை கடைசியாக சந்தித்தது.
அதன்பின், நான் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியபோது, அப்துல்கலாமின் படிப்படியான வளர்ச்சியை, செய்தி தாள்களில் பார்த்து ரசிப்பதுண்டு.
அவரைப் பற்றி வரும் செய்திகளை கத்தரித்து, சேகரித்து வைத்துள்ளேன்.
அவருடைய சுயசரிதம், 'அக்கினி சிறகுகள்' புத்தகத்தை, பலமுறை படித்து பரவசமடைந்துள்ளேன்.
கடிதத்தைப் படித்ததும், சதானந்தத்திற்கு ஏற்பட்ட சந்தோஷம், என்னையும் தொற்றிய உணர்வு உண்டானது.

