
அப்பாவியை மிரட்டிய, 'ஸ்கூட்டர் மோகினி!'
சொந்த வேலையாக சென்னை வந்த உறவினர், வேலை முடிந்ததும், ஊருக்கு செல்ல, பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உறவினர் அருகே வண்டியை நிறுத்தி, அதில் ஏற சொல்லியிருக்கிறாள்.
'நான் போய் கொள்கிறேன்...' என, ஸ்கூட்டரில் ஏற மறுத்துள்ளார், உறவினர்.
அந்த பெண், மீண்டும் வற்புறுத்தவும், 'இது என்னடா வம்பு...' என்று, அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்துள்ளார்.
உறவினரை பின் தொடர்ந்த, ஸ்கூட்டர் மோகினி, 'இப்ப நீ வரமாட்டேல்ல... என்னை பார்த்து சிரித்து, ஏன் கூப்பிட்ட... பதில் சொல்லு...' என்றாள்.
'எங்க சிரிச்சேன்... நானா கூப்பிட்டேன்...' என, உறவினர் பதற... 'நீ, என்னை பார்த்து சிரிச்சு, கூப்பிட்ட, போலீசை கூப்பிடவா... இல்ல, 500 ரூபாயை எடுக்கறியா...' என, மிரட்டியுள்ளாள், அப்பெண்.
'என்னிடம் பணம் இல்லை...' என்றதும், 'மோதிரம், செயினெல்லாம் போட்டிருக்கே... பணம் இல்லன்ற... இருக்கற பணத்தை எடுக்கறியா... இல்ல, நடப்பதே வேறு...' என்று மேலும் மிரட்டியுள்ளாள்.
எதிரில் வந்த ஒருவரை, 'சார்...' என்று உதவிக்கு அழைக்க, வேகமாக அங்கிருந்து பறந்துள்ளார், ஸ்கூட்டர் மோகினி.
'நேரம் சரியில்லை...' என்று வீட்டுக்கு திரும்பிய உறவினர், நடந்த சம்பவத்தை எங்களிடம் கூறினார்.
பெண்களிடம், 'சில்மிஷம்' செய்யும் ஆண்களுக்கு எதிராக, கடுமையான சட்டம் இயற்றினால், அந்த சட்டத்தையே தங்களுக்கு பாதுகாப்பு கவசமாக்கி, ஆண்களை மிரட்டி, பணம் பறிக்கும் இதுபோன்ற, 'மோகினி'களை என்னவென்பது!
— மன்னை ஜி.நீலா, கும்பகோணம்.
உறவுகளை இப்படியும் புதுப்பிக்கலாம்!
என் உறவினர் ஒருவர், வெளி மாநிலத்தில் இருக்கிறார். அவருக்கு, எங்கள் குடும்பங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு பத்திரிகை அனுப்புவோம்; ஆனால், அவர் வருவதில்லை.
சமீபத்தில் ஊருக்கு வந்த அவர், உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும், தன்னுடன் துணைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்; அதன்படி அவருடன் சென்றேன்.
அப்போது, அவர் கையில் பழைய அழைப்பிதழ்கள் நிறைய இருந்ததை கண்டு, அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், 'வெளி மாநிலத்தில் இருக்கும் எனக்கும், ஊரில் உள்ள உறவினர்களுக்கும் இடைவெளி வந்துவிட கூடாது என்பதற்காக, அவர்களிடம் இருந்து வந்த அழைப்பிதழ்களை பத்திரப்படுத்தியவை தான் இவை... இப்போது சம்பந்தப்பட்ட உறவினர்களை சந்தித்து, அவர்களை வாழ்த்தி, பரிசு கொடுத்து வரலாம் என, முடிவு செய்திருக்கிறேன். இதனால், எனக்கும், உறவினர்களுக்குமான இடைவெளி குறைவதோடு, அவர்களும் என்னை துாரத்தில் வைத்து பார்க்க மாட்டார்கள்...' என்றார்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், உறவுகளை இப்படியும் புதுப்பிக்கலாமே!
— மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
தாத்தாவை அசத்திய பேரன்!
உடல் நலக்குறைவால், சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார், என் மனைவி. தஞ்சாவூரில் இருந்து, சென்னை வந்த நான், சென்னை, அசோக் நகரில் மகள் வீட்டில் தங்கி, தினமும் பேருந்தில், மருத்துவமனைக்கு சென்று வந்தேன். அரை மணி நேர பயணம் என்பதால், சிரமம் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை, மருத்துவமனைக்கு சென்று, வீடு திரும்புவதற்காக, போரூர் மருத்துவமனை வளாக பேருந்து நிறுத்தத்தில், என் பேரனுடன் காத்திருந்தேன்.
அவ்வழியாக செல்லும் பேருந்துகளில், இருக்கை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அடுத்த பேருந்தில், உட்கார்ந்து பயணம் செய்யலாம் என, அந்த பேருந்தில் ஏறவில்லை. அடுத்தடுத்து வந்த பேருந்துகளிலும் இதே நிலை.
'ஏன் தாத்தா, அந்த பஸ்ல ஏறல...' எனக் கேட்டான், பேரன்.
'சீட் காலியா வர்ற பஸ்ல, உட்கார்ந்துட்டு போகலாமே...' என்றேன்.
'இங்கே நின்னுக்கிட்டு இருக்கிற நேரத்தில, பஸ்ல நின்னுருந்தா... இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாமே...' என்றான், பேரன்.
அசடு வழிந்த நான், அடுத்து வந்த பேருந்தில் ஏறி, நின்றபடிதான் வீட்டிற்கு சென்றேன்.
என்னே, இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மை என நினைத்து, பெருமை அடைந்தேன்!
- மா.சின்னத்துரை, பட்டுக்கோட்டை.
ஒன்று போதுமே!
திருமண விழாவுக்கு சென்ற நானும், என் கணவரும் மணமக்களை வாழ்த்தினோம். அன்பளிப்பு வழங்கி, பழங்கள் மற்றும் ஐஸ்கிரீமுடன் வயிறார விருந்துண்டோம்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருமண வீட்டார், தாம்பூலப் பையை வழங்குகின்றனர்.
ஆனால், கணவன் - மனைவி இருவரும், தனித்தனி பை வாங்குவது மற்றும் குடும்பத்தில் எத்தனை பேர் போனாலும், கூச்சமில்லாமல் ஆளுக்கொன்று வாங்கி வருவது, பலரது வழக்கமாக உள்ளது.
திருமணம் என்றாலே, மண்டப வாடகை, பூ அலங்காரம், விருந்து, பிற செலவுகள் என, பெரும் பொருட் செலவில், திருமண வீட்டார் திண்டாடித் தவிப்பதை நாம் அறிவோம்!
இந்நிலையில், திருமணத்திற்கு செல்பவர்கள், பெருந்தன்மையுடன் ஒரே ஒரு பை மட்டும் பெற்று வருவது தான் நியாயம். சிந்தியுங்களேன்!
- சங்கரி சண்முகம், சென்னை.

