
* தி.சடகோபன், பொன்னமராவதி: 'கடன் கொடுக்காமல் எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாது...' என்கிற, என் நண்பனின் கருத்து பற்றி...
சினிமா தியேட்டர், பஸ், ஓட்டல் போன்ற தொழில்கள் எல்லாம், 'கையில் காசு; வாயில் தோசை' என்ற மாதிரி தானே நடக்கின்றன! ஆனால், இங்கெல்லாம் கூட, 'அக்கவுன்ட்' வைக்கும் கில்லாடிகளும் இருக்க தான் செய்கின்றனர்!
ஏ.மூர்த்தி, நீலகிரி: உண்மையைச் சொல்லுங்கள்... அழகான பெண்களைப் பார்க்கும் போது, உங்கள், 'ரியாக் ஷன்' எப்படி இருக்கும்?
சட்டென்று அனிச்சையாக தலை, பூமியை நோக்கும்... அந்த இடத்திலிருந்து நகர்ந்து, விரைந்து வெளியேற, மூளை வழி தேடும்... என் கூச்ச சுபாவம் அப்படி!
எல்.வி.வாசுதேவன், கோவை: பெண்களைப் போல ஆண்களும், சுய உதவி குழு அமைத்து பயன் பெறலாமே...
ஆண்கள் இணைந்து அமைத்த கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு தொழிற்கூடங்களின் இன்றைய நிலை என்ன... ஆண்களின், 'ஈகோ' சேர்ந்து செயல்பட விடாது அவர்களை! பெண்களுக்கோ, இயற்கையிலேயே விட்டுக் கொடுக்கும் சுபாவமும், இணைந்து செயல்படுவதிலும் ஆர்வம் இருக்கும். குடும்ப பொருளாதார உயர்வில், தம் பங்களிப்பு தாராளமாக இருக்க வேண்டுமென்ற மனப்பான்மையும், தளராத உழைப்பும் இருப்பதால், அவர்களின் சுய உதவி குழுக்கள் ஜொலிக்கின்றன!
எம்.ரங்கநாதன், வந்தவாசி: 'எட்டாவது படித்தவர்கள் முதல், டிகிரி படித்தவர்கள் வரை, வேலைக்கு ஆட்கள் தேவை... எமது நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்' என்று, நிறைய விளம்பரங்கள், நாளிதழ்களில் வருகிறதே...
வெட்டி வேலை; இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் எல்லாம், 'பிளேடு' கம்பெனிகள். இப்படிப்பட்ட விளம்பரங்களை, பத்திரிகைகள் வெளியிடவே கூடாது!
வி.முத்துராமு, வடலுார்: உலகிலேயே, 'காஸ்ட்லி'யான நகரம், ஜப்பான் தலைநகர், 'டோக்கியோ' என்கின்றனரே... இப்போது, அந்த நகர் எந்த இடத்தில் உள்ளது?
இப்போதும், அதே நகர் தான், நம்பர் ஒன். உலகிலுள்ள, மொத்த நகரங்களில், இரண்டாவது இடத்தை, லண்டனும், முறையே மூன்று, நான்கு, ஐந்தாவது இடங்களை, மாஸ்கோ - ரஷ்யாவின் தலைநகர், ஒசாகா - ஜப்பான் மற்றும் ஷாங்காய் - சீனா ஆகியவை பிடிக்கின்றன.
* தீபா ஆதித்யாநாதன், சென்னை: வசதியான, ஆடம்பரமான மாப்பிள்ளையை எதிர்பார்த்து, வரன்களைத் தட்டி கழிக்கிறாள் என் தோழி... இதனால், வயதும் கூடியபடி உள்ளது...
மலையாள மொழியில், ஒரு சொல் வழக்கு உண்டு... 'சாடிச் சாடி, நம்பூதிரி தீட்டத்தில் சாடி!' என்பர்.
குண்டும், குழியுமாகவே மலையாள தேசத்து சாலைகள் இருக்கும்... எப்போதும் மழை வேறா... ஆங்காங்கே நீர் தேங்கி இருக்கும்...
பட்டு வேட்டி கட்டிய நம்பூதிரி, சகதி பட்டுவிடக் கூடாதே என, தாவி தாவிச் சென்றாராம்... ஆனால், கடைசியில் காலை வைத்தது, நரகலில்! இந்தக் கதையை தோழியிடம் சொல்லுங்கள்... திருமணத்திற்கு சம்மதிப்பார் உடனே!

