
ஒரு ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தில் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நேரம், நண்பகலை நெருங்கி கொண்டிருந்தது.
நண்பர் ஒருவரிடமிருந்து போன் வந்தது...
'மணி... உன் மொபைல் போன் நம்பரை மாத்திட்டியா... எப்ப கூப்பிட்டாலும், 'கரன்ட்லி ஸ்விச்டு ஆப்' என்றே வருகிறதே...' என, கேட்டார்.
'இல்லை சார்... காரணம் ஒன்று: பில் பணம் கட்டுவதற்குள், 'தாவு' தீர்ந்து விடுகிறது... காரணம் இரண்டு: எப்போதும், நேரம் காலம் இல்லாமல் போன் வந்து தொலைக்கிறது... இதனாலேயே, போலீசில் மாட்டி, 1,000 ரூபாய் அபராதம் வேறு அழுதேன்.
'அதோடு, போலீஸ் தலை தெரிகிறதா என பார்த்து, பயந்து பயந்து பேச வேண்டியிருக்கிறது. அதனால், மொபைல்போனுக்கு ஒரேயடியாக, 'குட்பை' சொல்லி விட்டேன்...' என, ஒரு ராமாயணம் படித்தேன்...
'சரி... இன்று மதியம் சாப்பிட, ஓட்டலுக்கு போகலாம். நீயே, 'டேபிள் புக்' செய்து விடு... சரியாக, 1:15 மணிக்கு வந்து விடுகிறேன்... நிறைய விஷயம் பேச வேண்டி இருக்கு...' எனக் கூறி, போனை வைத்தார்.
ஞாயிற்றுக் கிழமை என்பதால், கிரவுன் பிளாசா (முந்தைய பெயர்: அடையார் பார்க்) ஓட்டலில் உள்ள, 'ரெசிடென்சி' உணவகம் நிறைந்து வழியும். 'டேபிள் ரிசர்வ்' செய்தால் தான் கிடைக்கும். அங்கு போன் போட்ட போது, '2:00 மணிக்கு முன் இடமே இல்லை' என்றனர்...
மனிதர், 1:15 மணிக்கு வருவதாக சொல்லி விட்டதால், உடனடியாக இன்னொரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், 'ரிசர்வ்' செய்து, தகவலையும் அவருக்கு போன் போட்டு சொன்னேன்...
ஓட்டல் இருக்கையில் வசதியாக அமர்ந்து, சாப்பிட ஆரம்பித்த போது, அவர் சொன்னார்...
'உலக நிகழ்ச்சிகளை, நேரடியாக, 'டிவி' சேனல்கள் ஒளிபரப்பி, மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை அளித்து வருகிறது. மக்களுக்கு பொது அறிவும் அதிகம் வந்து விட்டது என்று எல்லாம் சொல்கின்றனர்.
'உண்மையில், தமிழகத்தில், சினிமா, 'டிவி' மற்றும் கிரிக்கெட் மோகம், இளைஞர்களை குறிப்பாக, மாணவர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது தெரியுமா... பொது அறிவு அறவே இல்லாத அளவிற்கு, மாணவர்களை அழைத்து சென்று விட்டது...' என்று அவர், பொரிந்து தள்ளி விட்டார்.
அவர் நீளமாகப் பேசியதை, சுருக்கித் தருகிறேன்:
அவர் வேலை பார்க்கும், தமிழகத்தின் அந்த பிரபலமான நிறுவனம், சமீபத்தில், முக்கிய பொறுப்புகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய, பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தது.
சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணி என்பதால், அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க நினைத்தது. ஏராளமான இளைஞர்கள், போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். எல்லாருமே, எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.பில்., என்று பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் தான்.
அவர்களின் பொது அறிவுத்திறன் எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க, ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியது. அப்போது, மாணவர்கள் அளித்த பதில் தான், அவரை இந்த அளவிற்கு சூடாக்கி இருந்தது.
சேலத்தில் நடந்த, நேர்முக தேர்வில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் என்ன தெரியுமா...
'தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் இருக்கின்றனர்... ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், எந்த நகரங்களுக்கு இடையே செல்கிறது... இந்தியாவில், எத்தனை பெண் முதல்வர்கள் உள்ளனர்... அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பெயர் என்ன...' போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இதெல்லாம் என்ன கேள்விகள்... மிகவும் சாதாரணமானவை தானே...
தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு தெரிந்த விபரம் தானே இவைகள். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட, இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி விடுவர் என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை. எம்.ஏ., - எம்.எஸ்சி., -
எம்.பில்., படிப்பு முடித்து, வேலையில்லாமல் சும்மா இருக்கும் இளைஞர்களால் கூட, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றிய கேள்விகளுக்கு மட்டும், எல்லா மாணவர்களும் சரியாக பதில் சொல்லியிருந்தனர். அவை என்ன கேள்விகள் தெரியுமா...
'தேவயானியின் கணவர் பெயர் என்ன... உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா எத்தனை முறை கோப்பையை பெற்றுள்ளது... 'மீ டூ' விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலரது பெயர்களை கூறுக...' இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லியிருந்தனர்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், எந்த நகரங்களுக்கு இடையே செல்கிறது என்ற கேள்விக்கு, சிலர், ஏற்காட்டில் இருந்து சென்னை செல்வதாகவும், சிலர், சேலத்தில் இருந்து சென்னை செல்வதாகவும் எழுதியிருந்தனர். ஏற்காட்டில் ரயில்வே பாதையே இல்லை என்ற விபரம், சேலம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியவில்லை.
பத்திரிகைகளிலும், 'டிவி'யிலும் காவிரி பிரச்னை பற்றிய செய்தி, தினமும் இடம் பெற தவறாது. அந்த அளவு தமிழகத்தை பாதித்துள்ள இந்த பிரச்னை தொடர்பான கேள்விக்கும், யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. காவிரி, 'டிரிபியூனல்' இடைக்கால உத்தரவுப்படி, தமிழகத்திற்கு, கர்நாடகா, எத்தனை, டி.எம்.சி., தண்ணீர் தரவேண்டும் என்ற கேள்விக்கு, ஒருவர் கூட சரியாக பதில் சொல்லவில்லை.
அரசியல் ரீதியான உணர்வுடைய மாநிலமான, தமிழகத்தில், இளைஞர்கள் எல்லாரும் தினமும் அரசியல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்று தான், எல்லாரும் நினைக்கின்றனர். அது, உண்மையல்ல என்று இந்த, நேர்முக தேர்வு மூலம் தெரிகிறது. சினிமா சம்பந்தப்பட்ட விபரங்களை மட்டுமே தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், இளைஞர்கள்.
இப்படி எல்லாம் இளைஞர்கள் இருப்பதற்கு காரணம், நம் கல்வி முறை தான். கல்லுாரிகளில் பொது அறிவு பாடத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளாக இருந்தாலும் சரி, கலை கல்லுாரிகளாக இருந்தாலும் சரி, பொது அறிவு தொடர்பான ஒரு பேப்பரும் இருந்தால் தான், மாணவர்களுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியும்.
பாடங்களை மட்டும் மனப்பாடம் செய்து, படித்து தேர்வு பெறும் மாணவர்கள், பின், சினிமா மோகத்தில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுவர். இனியாவது, கல்வித்துறை நிபுணர்கள், இது பற்றி சிந்திக்க வேண்டும்...
இவை தான் அவர் கூறியதன் சுருக்கம்; நம் இளைஞர்களை நினைத்தால், பயமாக தான் இருக்கிறது!

