sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏவி.எம்., சகாப்தம்! (2)

/

ஏவி.எம்., சகாப்தம்! (2)

ஏவி.எம்., சகாப்தம்! (2)

ஏவி.எம்., சகாப்தம்! (2)


PUBLISHED ON : டிச 16, 2018

Google News

PUBLISHED ON : டிச 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடிக்கும் - தேவகோட்டைக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம், தேவகோட்டை ரஸ்தா. ஜமின்தார் சோமநாதன் செட்டியார் என்பவர், அங்கு, தகரத்தால் கூரை வேய்ந்த, நாடக கொட்டகையை போட்டிருந்தார். அதில், 'ஸ்டுடியோ' அமைத்து, திரைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தார், அப்பா.

அந்த இடத்தை, 3,000 ரூபாய் வாடகைக்கு எடுத்து, 'ஏவி.எம்., ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை நிறுவி, அதில், நாம் இருவர் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார், அப்பா.

இந்த படத்தில், டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாவும், டி.ஏ.ஜெயலட்சுமி கதாநாயகியாகவும் அறிமுகமாயினர். வி.கே.ராமசாமி அறிமுகமான முதல் படம் இதுவே.

அந்த ஸ்டுடியோவிலேயே அரங்கங்கள் அமைத்து, படப்பிடிப்பை நடத்தினார். படம் முடிந்து, வெளியாகும் நேரத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்த மகிழ்ச்சியை, நாம் இருவர் படத்தில் வெளிப்படுத்தி, மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சமயோசிதமாக செயல்பட்டார், அப்பா.

சுதந்திரம் கிடைத்த பின், மக்கள் எப்படியெல்லாம் அதை கொண்டாடுவர் என்பதை கற்பனையாக,

'ஆடுவோமே... பள்ளு பாடுவோமே...

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று...'

மற்றும்

'வெற்றி எட்டுத் திக்கும் என்று

கொட்டு முரசே...'

என்று பாடிய, மகாகவி பாரதியாரின் பாடல்களை, டி.கே.பட்டம்மாள் பாட, குமாரி கமலா இரண்டு தோற்றத்தில் முரசுகளின் மேல் நின்று ஆடி பாடுவது போல், அரங்கம் அமைத்திருந்தார்.

அந்நாளில், ஒரே நேரத்தில், ஒரு நடிகை, இரண்டு நபர்களாக தோன்றி ஆடுவது, புதுமையாக பேசப்பட்டது. அப்படி ஒரு புதுமையை இந்த பாடலில் புகுத்தினார்.

இதையடுத்து, காந்திஜியின் புகழை பாடும் விதமாக, 'காந்தி மகான்...' என்ற பாடலையும், எம்.எஸ்.ராஜேஸ்வரி பாட, குமாரி கமலா நடனமாடினார். அனைத்து பாடல்களுக்கும், ஆர்.சுதர்சனமே இசையமைத்திருந்தார்.

இந்த மூன்று பாடல்களையும், நாம் இருவர் படத்தில் இணைத்து, வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில் இருந்த மக்களின் மன நிலையை எதிரொலிப்பதாகவே, இந்த படத்தின் பாடல்கள் அமைந்திருந்ததால், பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதன் பின், 1948ல், வேதாள உலகம் என்ற படத்தை, தேவகோட்டை ரஸ்தா ஸ்டுடியோவிலேயே எடுத்து வெளியிட்டார். இந்த படமும் நன்றாக ஓடியது.

அப்போது, ராம்ராஜ்யா என்ற பக்தி படம், இந்தியில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு, வட மாநிலங்களில், மாபெரும் வெற்றி கண்டு, பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. புகழ்பெற்ற நடிகர் - நடிகையர் நடித்திருந்தனர். விஜய்பட் என்பவர் தயாரித்து, இயக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்து, வெகுவாக பாராட்டினார், காந்திஜி. அந்த பாராட்டு, ராம்ராஜ்யா படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

அதனால், அப்படத்தின் உரிமை பெற்று, தேவநாராயணன் என்பவர், தமிழ் வசனங்களை எழுத, தேவகோட்டை ரஸ்தா ஸ்டுடியோவிலேயே தமிழில், 'டப்பிங்' செய்தார், அப்பா.

வேறு மொழியில் உருவான திரைப்படத்தை, தமிழ் மொழியில், 'டப்பிங்' செய்வது, அதுவே முதல் முறை. அப்படி ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு, ராம்ராஜ்யா படத்தை வெளியிட்டார். தமிழகத்திலும் பிரமாதமாக ஓடி, வெற்றி கண்டது.

வெற்றி பாதையில் பயணம் செய்த வேளையில், சுதந்திர இந்தியாவில் முன்போல் கெடுபிடிகள் இல்லாமல் எங்கும் சகஜநிலை நிலவியது. அதனால், சென்னைக்கு திரும்பி, ஏவி.எம்., ஸ்டுடியோவை நிறுவி, படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தார், அப்பா.

தற்போது, கோடம்பாக்கம் பகுதியில் ரயில்வே பாதையின் மேல் உள்ள மேம்பாலம், அப்போது இல்லை. அங்கு, 'ரயில்வே கேட்' அமைக்கப்பட்டிருக்கும். அதை தாண்டினால், ஒரே காடாக தான் இருக்கும். அந்த காட்டின் நடுவே ஒரு வண்டி பாதை இருக்கும். அவ்வளவு தான். 'ரயில்வே கிராசிங்'கை தாண்டினால், கோடம்பாக்கம் பகுதி வந்துவிடும்.

கோடம்பாக்கம் பகுதியில், வடபழனி என்றழைக்கப்படும் பகுதியில், குதிரை லாயம் வைத்திருந்த ஒருவரிடம் இடம் வாங்கி, காடாக இருந்த நிலப்பகுதியை சீரமைத்தார். தேவகோட்டை ரஸ்தாவிலிருந்த ஸ்டுடியோவை சென்னைக்கு மாற்றம் செய்து, ஏவி.எம்., ஸ்டுடியோவை இங்கு துவங்கினார்.

இதில், வாழ்க்கை என்ற திரைப்படத்தை, 1949ல் இயக்கி, தயாரித்தார். இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, பெண் என்ற படத்தை தயாரித்தார். இப்படி தொடர்ச்சியாக பல படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களை தயாரித்து, இந்திய அளவில், 'ஏவி.எம்., ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனம் பிரபலமாவதற்கு வழிவகுத்தார். கன்னடம், வங்காளம் மற்றும் சிங்கள மொழிகளிலும் படம் எடுத்தார். வங்க மொழியில், ஆகாஷ் பாதாள் என்று ஒரு படம் தயாரித்தார். வங்காளத்தில் பிரபலமாக இருந்த நடிகர் - நடிகையர், சென்னையில் தங்கியிருந்து, ஏவி.எம்., ஸ்டுடியோவில் நடித்து செல்வர். வங்காளத்தை சேர்ந்தவரே இப்படத்தை இயக்கினார்.

எங்கள் ஸ்டுடியோவில் பணியாற்றிய, கே.சங்கர், சிங்கள மொழியில், டாக்டர் என்ற படத்தை இயக்கினார். அனைத்து படங்களுக்கும், ஆர்.சுதர்சனமே இசையமைத்தார்.

அந்தந்த மொழி பாடகர்கள் மற்றும் நடிகர்கள் என, சம்பந்தப்பட்ட அனைவருமே, ஏவி.எம்., ஸ்டுடியோவிற்கு வந்து பணியாற்றி சென்றனர். பல மொழிகளில் படம் எடுத்தாலும், பலமுறை ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார். குழந்தைகளுக்கான சிறந்த படம் எடுத்ததற்காக, அன்றைய பாரத பிரதமர், ஜவகர்லால் நேருவின் கரங்களால் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

ஒரு திரைப்படம் நன்றாக அமைய, எந்த எல்லைக்கும் சென்று, அதை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பார். அதுபோன்ற இரு நிகழ்வுகளை அடுத்த வாரம் சொல்கிறேன்.

— தொடரும்

ஏவி.எம்.குமரன்







      Dinamalar
      Follow us