
ஊர் கூடி தேரிழுப்போம்!
என் சகோதரி பணியாற்றும் தனியார் பள்ளியொன்றில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்தும், 'ஊர் கூடி தேரிழுப்போம்!' என்ற தலைப்பில், கதை சொல்லும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
பொதுவாகவே, வகுப்பில், ஆசிரியர் கதை சொல்ல, மாணவர்கள் அனைவரும் அதை கேட்டு ரசிப்பதைத் தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், அன்று நான் கண்ட, கதை சொல்லும் நிகழ்வில், ஆசிரியர், 'ஒரு அரண்மனையிலிருந்து...' என, கதையை துவங்க, பின், ஒரு மாணவன், அரசர், அவரது மூன்று மகன்கள் என, அவர்களது பெயர்களையும், குணநலன்களையும் விளக்கினான்.
உடனே, மற்றொரு மாணவி எழுந்து, கதையின் தொடர்ச்சியாக, இளவரசர்களுடன் தளபதி, சமையலுக்கு உதவியாக வேலையாட்கள் மற்றும் குதிரை வீரர்கள், வேட்டையாட சென்றனர் என, கூற, கதையின் நீட்சியாக, மாணவர்கள் மாறிமாறி கதை கூற ஆரம்பித்தனர்.
காட்டில் அவர்கள் சந்தித்த காட்டுவாசிகள், வினோத மிருகங்கள், எதிர்பாராத சம்பவங்கள், திருப்பு முனை என, சுவாரசியப்படுத்தினர்.
அத்துடன், அரசன், ராஜகுரு, இளவரசன், காட்டுவாசிகள், சிங்கம், யானை மற்றும் சூனியக்காரக் கிழவி என பலவிதமான முகமூடிகள் அணிந்து, நடித்துக் காட்டி, கதைக்கு பொருத்தமான முடிவுடன், இனிதே நிறைவு செய்தனர்.
மாணவர்களின் கற்பனை மற்றும் நடிப்பு திறமையும் பரவசப்படுத்தியது. அவர்கள் திறமையை வெளி கொண்டு வந்த ஆசிரியர்களின் முயற்சியை பாராட்டினேன்.
இன்றைய கல்வி சூழலில், இது போன்ற புதுமையானநிகழ்வுகளை, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு நடைமுறைப் படுத்தினால், ஒவ்வொருமாணவனுக்குள்ளும் இருக்கும் கற்பனைத் திறன் வெளிப்பட்டு, படைப்பாற்றலுடன் முடிவெடுக்கும் திறனும் மேம்படுமல்லவா!
— நா.உண்ணிகிருஷ்ணன், மேட்டுப்பாளையம்.
முதியோருக்கு தனி வழி அமைக்கலாமே!
வேண்டுதலை நிறைவேற்ற, குடும்பத்துடன், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன். என் வயது: 66. அங்குள்ள ஊழியர், என்னிடம், 'உங்களின், 'ஆதார்' அட்டையை காட்டி, கூப்பன் பெற்று, வயது முதிர்ந்தவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தனி பாதையில் சென்று தரிசனம் செய்யலாம்...' என்றார்.
அதன்படி நானும், என் மனைவி, மாமியாருடன், தனி பாதையில் சென்று தரிசனம் செய்தோம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி வழி அமைத்துள்ளனர். என் போன்ற வயதானவர்களுக்கு இது, மிக வசதியாக இருந்தது.
தமிழகத்தின் பெரிய கோவில்களிலும், பண்டிகை நாட்களில், இதுபோன்ற வசதிகள் செய்தால் நன்றாக இருக்கும். அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா!
— எஸ்.கணேசய்யர், பெங்களூரு.
தோசை மாவு மட்டும் போதுமா?
இரவு டிபனுக்கு, தோசை மாவு வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு, மாவு ஒரு பாத்திரத்திலும், சட்னி, சாம்பார், வடைகறி போன்றவை தனித்தனி பாத்திரத்திலும் வைத்து விற்றுக் கொண்டிருந்தனர்.
இது போன்று, மாவு வாங்கி டிபன் செய்யும் போதெல்லாம், மதியம் மீந்து போன சாம்பார் அல்லது இட்லி மிளகாய் பொடி, பருப்புப் பொடி போன்றவற்றை தொட்டுக் கொள்ளப் பயன் படுத்துவர்.
இரவு உணவு, ஒருவாறு முடிந்தது என்று வயிறு நிறைந்ததையே பெரிதாக எண்ணி பரவசப்பட்ட என் போன்றோருக்கு, இக்கடைக்காரரின் மாற்று சிந்தனை ஒரு வரப்பிரசாதம்.
இது குறித்து அவரிடம் கேட்டேன், 'சிறுகடை மற்றும் கையேந்தி பவன்களில், பஜ்ஜி, போண்டா விற்பவர்கள் கூட, 'சைடு-டிஷ்'ஷாக, சட்னி, சாம்பார் தருகிற போது, நாம் ஏன் இப்படி ஆரம்பிக்கக் கூடாது என, மாவுடன் கூடுதலாக, 'சைடு-டிஷ்' வகைகளும் செய்து விற்க முடிவு செய்தேன். பாட்டிலில் அடைக்கப்பட்ட வத்தக் குழம்பு இங்கு விற்பனைக்கு இருப்பினும், புதிதாக தயாரிக்கும் சட்னி, சாம்பார் மற்றும் வடைகறி விற்பனை சூடு பிடித்துள்ளது...' என்றார்.
மேலும், 'குறிப்பிட்ட நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்து விடுமாறு குறைந்த அளவே தயாரிக்கிறோம். புதிதாக கடைக்கு வருவோர் ஆச்சரியமாய் பார்ப்பதும், பின், அவர்களே எங்கள் வாடிக்கையாளர்களாகி, எங்களுக்கு ஆதரவு அளிப்பதாலும் நியாய விலையில் தரமாகவும் தயாரித்தளிக்க முடிகிறது...' என்றார்.
இங்கு பார்சலுக்கு, பாலிதீன் பைகள் பயன்படுத்துவதில்லை; பாத்திரம் கொண்டு வருவோருக்கு மட்டுமே, 'சைடு-டிஷ்' என்பதில் உறுதியாக இருக்கிறார், உரிமையாளர்.
தனி மனித அக்கறையோடு, சமூக அக்கறையுடன் இருப்பதை பாராட்டியதோடு, நானும், அவரின் வாடிக்கையாளராகி விட்டேன்.
— தி.பூபாலன், காவேரிபாக்கம்.
இணைப்பு பாலமாக இருக்கலாமே!
உறவினர் ஒருவரின் மகன் திருமண விழாவிற்கு, தனியார் திருமண மண்டபம் ஒன்றை பேசி, 'அட்வான்ஸ்' கொடுக்க, உறவினருடன், மண்டபத்திற்கு சென்றிருந்தேன்.
மண்டப நிர்வாக அலுவலகத்திலிருந்த மேலாளர், 10 கி.மீ., தொலைவில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் மற்றும் மாணவர்களின் இல்லத்தின், துண்டு பிரசுரம் ஒன்றை கொடுத்தார்.
'சார்... இந்த இல்லத்தில், 100 பேர் வரை தங்கி உள்ளனர். உங்கள் விழா நடக்கும் நாளில், காலை அல்லது மதிய வேளையில், கூடுதலாக, 100 பேருக்கு உணவு சமைத்து கொடுக்க விரும்பினால், உங்கள் முகவரியை, அந்த இல்லத்திற்கு கொடுத்து விடுவோம், நிர்வாகிகள், உங்களிடம் பேசுவர்.
'அவர்களிடம் உள்ள வாகனம் மூலம், உணவை அவர்கள் பாத்திரத்திலேயே எடுத்துச் செல்வர். மண நாள் அன்று, இதுபோன்று, 100 பேருக்கு உணவளிப்பது புண்ணியம் தானே...' என, கூறினார்.
நாங்களும், 100 பேருக்கு உணவளிக்க விருப்பம் தெரிவித்தோம். பல லட்சம் ரூபாய் செலவில் நடக்கும் விழாக்களில், இதுபோன்று, 100 பேருக்கு உணவு வழங்குவதால், நாம் குறைந்துவிட போவதில்லை.
விழா மண்டபங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், இதுபோன்ற அனாதை இல்லங்களுக்கு உதவிட, விழா வீட்டாருடன், ஓர் இணைப்பு பாலமாக இருக்கலாமே!
— சோ.ராமு, செம்பட்டி.

