PUBLISHED ON : டிச 16, 2018

பெருமாளை சுந்தரராஜன் என்பர். 'சுந்தரம்' என்றால், அழகு. அந்த அழகுக்கும் அழகு செய்பவர், சுந்தரராஜா. 'சவுமியம்' என்றாலும், அழகு என்று பொருள். சவுமிய நாராயணர் என்றால், அழகாக பாற்கடலில் படுத்திருப்பவர்... என்று பொருள்.
இந்த இரண்டு அழகர்களையும் காண வேண்டுமானால், மதுரை அழகர் கோவிலுக்கும், சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கும் செல்ல வேண்டும். இரண்டு கோவில்களுமே திவ்ய தேசங்கள்.
இந்த இரண்டு கோவில்களுக்கும் போகாமல், ஒரே கோவிலில் ஒருசேர இவர்களைத் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை பேருந்து நிலையம் அருகிலுள்ள, சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால், 17ம் நுாற்றாண்டில், இக்கோவில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு உடைய இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம் மற்றும் வைகானசம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில், இக்கோவிலை அமைத்தார்.
பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும், இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பின், அவருடைய தாயார் மகமுநாச்சியார், இக்கோவிலின் திருப்பணிகளைச் செய்தார். இவர்கள் இருவருக்கும், மண்டபத்தில் சிலை உள்ளது.
கருவறை வட்ட வடிவில் உள்ளது. விரிந்த தாமரை இதழ் மேல், ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக சுந்தரராஜ பெருமாள் உள்ளார். வேட்டைக்குச் செல்லும் மன்னனை போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள் மற்றும் காலில் தண்டை ஆகியவை அணிந்து, வேடர் அம்சத்தோடு உள்ளார்.
வேடர்கள் பரணில் ஏறி, மிருகங்களைக் கண்காணிப்பது போல, இவரும் உயரமான இடத்தில் இருந்து, பக்தர்களை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார்.
மற்றொரு பெருமாளான சவுமிய நாராயணர், தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னிதி முன் ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மகா மண்டபத்தில், ராமபிரானை வணங்குவது போல, கை குவித்து, அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார், அனுமன். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர், 'வரசித்தி ஆஞ்சநேயர்' எனப்படுகிறார். சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார், 16 கரங்களுடனும், இவருக்கு பின்புறம், யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர்.
படிப்பு முடித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருப்போர், சக்கரத்தாழ்வாருக்கு, சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றுகின்றனர். அழகர்கோவில் போல, இங்கும், பதினெட்டாம் கருப்பசாமி, காவல் தெய்வமாக வாசலில் இருக்கிறார். நாளை மறுநாள், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இந்த இரண்டு பெருமாளையும் தரிசித்து வரலாம்.
தி.செல்லப்பா

