
எஸ்.கீதா, மதுரை: உங்களுக்கு மிகவும் பிடித்த வாகனம் எது? காரா, மோட்டார் சைக்கிளா, ஸ்கூட்டரா?
இந்த மூன்றுமே கிடையாதம்மா... காலால் மிதித்து செல்லும், சைக்கிள் தான்... அதைத் தான், டீ கடை முன் சுலபமாக நிறுத்தி, அலுவலக ஊழியர்களுக்கு, டீ, காபி வாங்கிச் செல்ல முடியும்!
* எம்.பாரதி, நெல்லை: வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறேன்... இதற்கு யாரைக் கும்பிட வேண்டும்? கடவுளையா, மனிதரையா?
கடவுளைக் கும்பிடுங்கள்... ஆனால், உங்கள் தன்னம்பிக்கை, தளராத முயற்சி, தைரியம் ஆகியவற்றை விடாமல் கும்பிடுங்கள்... இவை தான் உங்களுக்கு தவறாமல் உதவும்!
ஆர்.ஹேமா, மாயவரம்: நீங்கள் விரும்பிப் பார்க்கும், செய்தி, 'சேனல்'கள் எவை... சினிமாவில் வரும், தமாஷ் காட்சிகளை ஒலி - ஒளிபரப்பும், 'சேனல்'களை பார்ப்பீர்களா?
தமிழ் செய்தி, 'சேனல்'களில் இரண்டு மட்டும் பார்ப்பேன்; அவை, நடுநிலையாக இருக்கும். ஆனால், அதில் ஒன்று, சமீப காலத்தில், கொஞ்சம் நிலை தடுமாறுவதாகத் தோன்றியது... 
அதன் அதிபர், சமீபத்தில் என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார்... சிறிது நேரம் பொது விஷயங்களைப் பேசி, அவர் கிளம்பும்போது, 'நடுநிலை' பற்றிய விஷயத்தைக் கூறினேன்!
நடுங்கிப் போனவர், 'கவனித்து கொள்கிறேன்' எனக் கூறிச் சென்றார்!
நான் ரசித்து பார்க்கும் இரண்டு தமாஷ், 'சேனல்'கள், ஒளிபரப்புக்கு இடையே, 'சிறிது இடைவேளைக்கு பிறகு...' என கூறி, 15 நிமிடம் விளம்பரங்களை ஒலி - ஒளிபரப்புவதால், இப்போது, அவற்றை பார்ப்பதைத் தவிர்க்கிறேன்!       
* ஜி.கதிர்வேல், சென்னை: 'அனுபவம், அனுபவம்' என்று கூறுகின்றனரே... அது என்ன?
ஒரு மனிதன் செய்யும் தவறுகளை, 'அனுபவம்' என்பர்; அதை உணர்ந்து தம்மை மாற்றிக் கொள்பவர்கள், எல்லா நன்மைகளையும் அடைவர்!
மா.மூர்த்தி, சேலம்: 'சொர்க்கம்... சொர்க்கம்...' என்று சொல்கின்றனரே... அது எங்கே இருக்கிறது?
யார் ஒருவன் கடன் வாங்காமல் வாழ்கிறானோ, அவன் வீட்டில்! 'நரகம் எங்கிருக்கிறது...' என, நீங்கள் கேட்கவில்லை... நானே சொல்லி விடுகிறேன்... அது, கடன் வாங்கியவன் வீடு!
* கு.மணிகண்டன், கோவை: ஆசை என்பது என்ன... அது, வெட்கம் அறியாது என்கின்றனரே... அது குறித்து விளக்குங்களேன்!
இன்றுள்ள அரசியல்வாதிகள் தான் உதாரணம்! எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவுவது... அடுத்த தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறாது என, கனவு கண்டவுடன், மீண்டும், வெளியேறிய கட்சியை சென்று அடைவதும், அவர்கள், அவரை ஏற்றுக் கொள்வதும் தான்!

