
கே
தற்போது, பதவி உயர்வு பெற்று, போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் நண்பர் ஒருவரை, விழா ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.
பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் கூறிய சுவையான அனுபவம்...
வடிவேலுவின் பரம ரசிகரான இந்த அதிகாரி, அப்போது, வடபழனியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
வடிவேலுவை நேரில் சந்திக்க விரும்பும் தன் ஆவலை, துணை நடிகர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். வடிவேலுவின் நண்பரான அந்த துணை நடிகரும்,எஸ்.ஐ., யை,
ஏவி.எம்., ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
சீருடையில், கம்பீரமாக சென்றால், 'கெத்'தாக இருக்குமே என்ற எண்ணத்தில், மிடுக்காக சென்ற இன்ஸ்பெக்டரை, வடிவேலுவிடம், 'அண்ணே... இவரு, உங்க தீவிர ரசிகர்...' என்று அறிமுகம் செய்து வைத்தார், அந்த துணை நடிகர்.
கஞ்சி போட்டு, 'அயர்ன்' செய்யப்பட்ட காக்கி சீருடையில் விறைப்புடன் இருந்த,
எஸ்.ஐ.,யும், மலர்ச்சியாக
புன்னகைத்து தலையசைக்க, வடிவேலுவோ அலட்சியமாக, 'ஆங்... ஆங்...' என்றபடி திரும்பிக் கொண்டார்.
வெறுத்து போன போலீஸ் நண்பர் கிளம்பி வந்து விட, மறுநாள், 'சார்... நீங்க நேத்து, சீருடையில் வந்திருந்ததால, போலீஸ் வேஷம் போட்டிருக்கிற, 'ஜூனியர் ஆர்டிஸ்ட்'ன்னு நினைச்சுட்டாராம், அண்ணன். நீங்க நிஜ போலீஸ்ன்னு சொன்னதும், ரொம்ப, 'பீல்' பண்ணினாரு...' என்றாராம், துணை நடிகர்.
- இது எப்படி இருக்கு!
ப
ஒரு புத்தகத்தில் படித்தது...
எல்லாரையும் போல, சம்பிரதாயமான வாழ்க்கை நடத்தும் சாது பிராணியா நீங்கள்... நாலு பேர் உங்களை கவனிக்கிற மாதிரியோ, மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாகவோ இருப்பதென்றால், உங்களுக்கு வேப்பங்காயாக கசக்குமா...
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இருப்பது மடத்தனம்; ஆனால், தனிப்பட்ட தன்மை என்று எதுவும் இல்லாமல் அமுங்கிப் போவதும் புத்திசாலித்தனமாகாது.
கீழே உள்ள கேள்விகளுக்கு, ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லி, நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
பலவகைப்பட்ட மனிதர்களுடன் பழகுவதில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?
ஒரு நிகழ்ச்சிக்கு போகும்போது, மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு பகட்டாகவோ, மோசமாகவோ உடை அணிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு பிறகும், அந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்களா?
உங்களிடம் உள்ள ஆடை வகை, 'லேட்டஸ்ட்' நாகரிகமானதல்ல; ஆனால், அணிவதற்கு வசதியாக இருக்கிறது. அதை உடுத்துவீர்களா?
அண்மையில் வெளிவந்த புத்தகங்களில் ஏதேனும் படித்து, பரபரப்பும், மகிழ்ச்சியும் அடைந்தீர்களா?
வயதில் இளையவர்களுடன் பழகுவது உங்களுக்கு, இன்பம் தருகிறதா?
ஒரு பாதுகாப்பான வேலை... அது, போரடிக்கும் பட்சத்தில், விட்டு விடுவீர்களா?
உங்களுடைய பந்தாவான அலுவல்கள் கெட்டு விட்டால், கோபம் வருமா?
வெளிநாட்டில் வாழ்க்கை நடத்த வேண்டி வந்தால், முயன்று பார்க்க ஆசைப்படுவீர்களா?
சில சமயங்களில், பண விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதுண்டா?
நண்பர்களின் பிறந்த நாள், விழா தினம் முதலியவற்றை நினைவு வைத்திருப்பது கஷ்டமாக இருக்கிறதா?
புதிய சொற்கள் மற்றும் பரிபாஷைகள் ஆகியவற்றை அவ்வப்போது கையாளுவீர்களா?
கடந்து போன, 50 ஆண்டுகள், வரப்போகும், 50 ஆண்டுகள் - இந்த இரண்டில் எது விருப்பமோ, அதை வாழலாம் என்று உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்பட்டால், வரப்போகிற, 50 ஆண்டை தேர்ந்தெடுப்பீர்களா?
'புல்லை மிதிக்காதே, பூவை பறிக்காதே...' என்பது போன்ற கட்டளையை, எப்போதேனும் நீங்கள் மீறியதுண்டா?
உங்கள் பெற்றோருக்கு பிடித்திருந்த அரசியல் கட்சிக்கு எதிரான வேறொரு கட்சியில், நீங்கள் சேருவீர்களா?
சாஸ்திரீய கலைகளில் உங்களுக்கு ஆர்வமும், ஈடுபாடும் உண்டா?
உங்கள் வீடு, நண்பர்களின் வீடுகளிலிருந்து வித்தியாசமான அமைப்பும், அலங்காரமும் கொண்டதா?
நாலு பேர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில், பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளாத ஒரு கருத்தை, நீங்கள் பிடித்து வைத்து வாதாடுவீர்களா?
சதுரம் சதுரமான டிசைன்களை காட்டிலும், சுழி சுழியான டிசைன்கள் உங்களுக்கு பிடிக்குமா?
கல்யாணம் செய்து கொள்வதென்றால், அதிகம் பேருக்கு தெரியாத, ரகசிய திருமணத்தை விரும்புவீர்களா?
வித்தியாசமாக இருப்பது குறித்து, உங்களுக்கு ஓரளவு கர்வம் உண்டா?
விடை:
ஒவ்வொரு, 'ஆமாம்' என்ற பதிலுக்கும், ஐந்து மதிப்பெண்கள்.
மொத்தம், 80லிருந்து, 100க்குள் வாங்கினால்: கருத்துகளும், கற்பனைகளும் கொழிக்கும் நபர் நீங்கள். உங்களுடைய தீவிரமான தன்மையால், கஷ்டம் ஏற்பட்டால் கூட, விடாப்பிடியாக பழைய பழக்க வழக்கங்களை எதிர்த்து நிற்பீர்கள்.
மதிப்பெண் 55 - 75: அசாதாரண செயல்களை புரியும் துடிப்பு, அடிக்கடி உங்களுக்கு ஏற்படும். துணிச்சலுள்ள மனிதர்களையே நீங்கள் நாடுவீர்கள். வழக்கத்துக்கு விரோதமான இடங்களுக்கு செல்லவும், மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை காணவும் ஆசை உண்டாகும்.
மதிப்பெண் 30 - 50: நன்மை உண்டு என்று தோன்றினால் மட்டுமே, வழக்கத்துக்கு விரோதமானதை செய்ய முற்படுவீர்கள். உங்களை பிறர் விமர்சிப்பது பிடிக்காது. ஆனால், பிறரை நீங்கள் விமர்சிப்பீர்கள்.
மதிப்பெண் 0 - 25: புதிய கருத்துக்களையோ, விஷயங்களையோ தொடவே அஞ்சுகிறவர் நீங்கள். நாலு பேர் கவனிக்கிற மாதிரி இருப்பதை வெறுப்பீர்கள். பின்னணியில் இருப்பதே உங்களுக்கு பிடிக்கும்.

