
'காதல் படத்தை இயக்கும் என்னை, குழந்தைகள் படத்தை இயக்க செய்து விட்டாரே அப்பா...' என்று வருத்தப்பட்ட, பி.எல்.சந்தோஷி, இந்திய அளவில் விருது கிடைத்ததும், மகிழ்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இயக்குனர், எம்.வி.ராமன், எங்கள் நிறுவனத்திலிருந்து விலகினார். வைஜெயந்தி மாலா வேறு படத்தில் நடிக்க போய் விட்டார். அடுத்து, இந்தி பட தயாரிப்பில் ஈடுபடவே முடியாதா என்ற அதிர்ச்சியில் இருந்த என் அப்பா, இந்த எதிர்பாராத சவாலை சமாளிப்பது எப்படி என்ற சிந்தனையில் மூழ்கினார்.
அப்போது, எங்கள் நிறுவனமும், திருநெல்வேலியை சேர்ந்த, எஸ்.கல்யாணசுந்தரம் பிள்ளை என்பவரின், 'எஸ்.கே.பிக்சர்ஸ்' என்ற கம்பெனியும் இணைந்து தயாரித்த, குலதெய்வம் தமிழ் படத்தை, இந்தியில் எடுத்தால் என்ன என்று, அப்பாவுக்கு தோன்றியது.
குலதெய்வம் படத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, பண்டரிபாய், எஸ்.வி.சகஸ்ரநாமம் மற்றும் ராஜகோபால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அறிமுகமாகி, சிறப்பாக நடித்து பெயர் பெற்றதால், ராஜகோபால், தன் பெயருக்கு முன், படத்தின் பெயரைச் சேர்த்து, 'குலதெய்வம் ராஜகோபால்' ஆனார்.
வங்க மொழியில் வெளி வந்த இதன் மூலக் கதையை, தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து கதை, வசனம் எழுதியவர், முரசொலி மாறன். இசை: ஆர்.சுதர்சனம், இயக்குனர்கள்: கிருஷ்ணன் - பஞ்சு. 1956ல் வெளியான, குலதெய்வம் படம், தமிழகம் முழுவதும் ஏகோபித்த வரவேற்பை பெற்று, பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இப்படத்தை இந்தியில் எடுக்கலாம் என்ற, தன் எண்ணத்தை, இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவிடம் தெரிவித்தார், அப்பா.
'குலதெய்வம் படத்தை, தாராளமாக இந்தியில் எடுங்கள். ஆனால், எங்களை விட்டு விடுங்கள். எங்களுக்கு இந்தி தெரியாது...' என்றனர், கிருஷ்ணன் - பஞ்சு.
'தமிழில் இயக்கிய உங்களுக்கு, வேறு மொழியில் இயக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆங்கிலமும், இந்தியும் நன்றாக அறிந்த ஒரு உதவியாளரை உங்களுக்கு தருகிறோம். அவரை வைத்து சுலபமாக இந்த படத்தை இயக்கி முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்...' என, அப்பா கேட்டதும், ஒப்புக்கொண்டனர், கிருஷ்ணன் - பஞ்சு.
நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடித்த வேடத்திற்கு, பால்ராஜ் சஹானி என்ற குணசித்திர நடிகரை ஒப்பந்தம் செய்தனர். முக்கிய பாத்திரமாக, பண்டரிபாய் நடித்த வேடத்திற்கு, யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, அவரையே நடிக்க வைத்தால் என்ன என்று அப்பா சொல்ல, இயக்குனர்கள், தயங்கினர்.
'இந்தியில் பிரபலமான நடிகை நடித்தால் தானே நன்றாக இருக்கும். தமிழ் நடிகையான, பண்டரிபாயை இந்தியில் எப்படி ஏற்றுக்கொள்வர்... படத்தை எப்படி வியாபாரம் செய்வீர்கள்...' என்று கேட்டனர்.
'வியாபாரத்தை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்களுக்கு சொந்த, 'டிஸ்டிரிபியூஷன்' கம்பெனி இருக்கிறது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். பண்டரிபாய் சிறந்த நடிகை. தமிழில் நடித்ததை, இந்தியில் மனப்பாடம் செய்து, பாத்திரத்தின் தன்மை குறையாமல் நடிக்கப் போகிறார். அவர் நன்றாக நடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது...' என்றார், அப்பா.
குலதெய்வம் ராஜகோபால் நடித்த பாத்திரத்திற்கு, ஜகதீப் என்ற நடிகரை தேர்வு செய்தார், அப்பா. ஹம் பஞ்ச் ஏக் தால்கே என்ற இந்தி படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், ஜகதீப்.
அப்போது, வளர்ந்து, வாலிபனாகி இருந்தார். ஆனால், மெலிந்த தேகம், இள வயது. அதனால், தமிழில் இருந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் அவரை மாற்றுவதற்கு, கோட்சூட் தைக்கும்போது, அதன் உள்ளே மெத்தென்று பஞ்சினால் பட்டைகளை சேர்த்து வைத்து தைத்து, அவருக்கு அணிவித்து பார்த்தனர். மிடுக்கான வாலிபர் தோற்றத்தில், சிறப்பாக தெரிந்தார்.
எங்களின் முந்தைய இந்தி திரைப்படங்களுக்கு, வசனம் எழுதிய, ராஜேந்திர கிருஷ் தான், இந்த படத்திற்கும் வசனகர்த்தா என்று முடிவாகியது. படத்தின் பெயர், பாபி - தமிழில், அண்ணி. அதே நேரத்தில், எங்கள் நிறுவனத்திலிருந்து விலகி போன, எம்.வி.ராமன், மும்பையில், 'ராமன் ஸ்டுடியோஸ்' ஆரம்பித்து, வைஜெயந்தி மாலா நடிக்க, ஆஷா என்ற இந்தி படத்தை பிரமாண்டமாக எடுத்துக் கொண்டிருந்தார். ஆஷா படத்துக்கும், ராஜேந்திர கிருஷ் தான் வசனம்.
படப்பிடிப்பிலிருந்த, எம்.வி.ராமனிடம், ஏவி.எம்., சாதாரண நடிகர் - நடிகையரை வைத்து சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கும், பாபி படம் பற்றி பேசி, அதற்கு, வசனம் எழுதும் விபரங்களை சொல்லியிருக்கிறார், ராஜேந்திர கிருஷ்.
'ஏவி.எம்., துணிச்சல்காரர் தான். ஆனால், அந்த துணிச்சலை இப்படியா வெளிக்காட்டுவது... இந்தி தெரியாத சாதாரண தமிழ் நடிகை, பண்டரிபாய். அவரை போய் இந்தியில் அறிமுகப்படுத்தலாமா... இயக்குனர்களுக்கும் இந்தி தெரியாது... என்ன துணிச்சலில் இப்படி இந்தி படம் எடுக்கிறார்... விஷப் பரீட்சை பண்ணுகிறார்...' என்று கேலியாக பேசியிருக்கிறார், எம்.வி.ராமன்.
அவர் கேலி பேசிய, ஏவி.எம்.,மின், பாபி படப்பிடிப்பு முடிந்து, வெளியாகி, டில்லி, மும்பை மற்றும் கோல்கட்டா என, எல்லா நகரங்களிலும், பத்திரிகையாளர்களின் பாராட்டுதல்களோடும், பொதுமக்களின் வரவேற்போடும் பிரமாண்ட வெற்றி பெற்றது.
ஆனால், வைஜெயந்தி மாலா நடித்து, ராமன் ஸ்டுடியோஸ் பிரமாண்டமாய் தயாரித்த, ஆஷா படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.
பாபி படம், டில்லியிலும், மும்பையிலும், 25 வாரங்கள் ஓடின. கோல்கட்டாவில், பாபி படத்தின் கதையை முதன் முதலில் வங்க மொழியில் எடுத்து திரையிட்டபோது, ராக்சி தியேட்டரில், 100 நாள் ஓடியது. அதே தியேட்டரில், ஏவி.எம்.,மின், பாபி, 50 வாரங்கள் ஓடி, சாதனை படைத்தது.
— தொடரும்
ஏ.வி.எம்.குமரன்

