
எதிர்பாராத பரிசு!
உறவினர் பெண், இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். சில நெருக்கடிகளால், அப்பெண்ணின் படிப்பு தடைபடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நன்றாக படிக்கும் பெண்ணின் படிப்பு தடைபடக் கூடாது என, உறவினர்கள் அனைவரும் கலந்து பேசினோம்.
அந்த பெண்ணுக்கு, உடை, புத்தகங்கள் வாங்குவது, கல்லுாரி கட்டணம் கட்டுவது மற்றும் இதர செலவுகளுக்கு யார் யார் உதவ முடியும் என திட்டமிட்டு, எங்களுக்குள் பேசி, 'பட்ஜெட்' தயார் செய்து உதவினோம். அப்பெண் தேர்வு எழுதி, 'கேம்பஸ்' தேர்வில் வெற்றி பெற்று, பெங்களூரில் உள்ள, 'விப்ரோ' நிறுவனத்தில், மென்பொருள் இன்ஜினியராக பணியில் சேர்ந்தாள்.
நம்மால் முடிந்ததை செய்து, அப்பெண்ணின் வாழ்க்கைக்கு உதவினோம் என, அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
பணிக்கு சேர்ந்த முதல் மாத முடிவில், அந்த பெண்ணிடமிருந்து எங்களுக்கு ஒரு, 'பார்சல்' வந்தது. அதில், ஒரு புடவை, ஜாக்கெட் மற்றும் வேட்டி, டவலுடன் ஒரு கடிதமும் இருந்தது.
'முதல் சம்பளத்தில், எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்... உங்கள் உதவியால் இன்று நான் உயர்ந்துள்ளேன்...' என, எழுதியிருந்தார். உதவிய உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும், கடிதமும், பார்சலும் சென்றுள்ளது என்பதை, பின்னர் அறிந்தேன்.
'நன்றி மறப்பது நன்றன்று' என பேசியும், கேட்டும் வருகிறோம். எனினும், அந்த மகா உணர்வை அனுபவிக்கும்போது, கண்கள் பனித்தன. எங்களில் யாரும் பெரிய செல்வந்தர்கள் இல்லையாயினும், தக்க சமயத்தில் உதவியது குறித்த பெருமை இருந்தது. ஆனால், ஒரு சிறிய பெண், தன் முதல் சம்பளத்தில், எல்லாரையும் கவுரவித்தது, மறக்க முடியாத நிகழ்வாக என்னுள் பதிந்தது.
— எஸ்.பாலசுப்ரமணியன், ஐதராபாத்.
'சிம் கார்டை' துாக்கி எறிபவரா நீங்கள்?
பல தொலை தொடர்பு நிறுவனங்கள், இலவசமாக கொடுக்கும், 'சிம் கார்டு'களை வாங்கி, அவன் பயன்படுத்தாமல், தன் மற்ற நண்பர்களுக்கு கொடுத்து விடுவான், என் நண்பன்.
சமீபத்தில், விசாரணைக்கு என்று கூறி, என் நண்பனை அழைத்து சென்றனர், காவல் துறை அதிகாரிகள்.
பிரச்னை என்னவென்றால், இவன் கொடுத்த, 'சிம் கார்டை' பயன்படுத்தி, எவனோ ஒருவன், பல பெண்களுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளான்.
அந்த மொபைல் எண்ணை தெரிவித்து, காவல் நிலையத்தில், புகார் கூறியுள்ளனர், அப்பெண்கள்.
'சிம் கார்டு' நிறுவனத்தை தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், அந்த எண்ணுக்கான, 'அட்ரஸ் புரூப்'பை வைத்து, என் நண்பனை, விசாரணைக்கு அழைத்துள்ளனர். பல சிரமங்களுக்கு பின், இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்தான், நண்பன்.
எனவே, உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டாலோ, 'சிம் கார்டு' தொலைந்து விட்டாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், 'சிம் கார்டை' செயலிழக்க சொல்லி, தகவல் சொல்வது மிக முக்கியம்.
இதுபோல், இலவசமாக கிடைக்கும், 'சிம் கார்டு'களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். இல்லையேல், இதுபோன்று மாட்டி, அவஸ்தைப்பட வேண்டும்!
— கே.சசிகுமார், நாகப்பட்டினம்.
புத்தகம் கொடுக்க விரும்புகிறீர்களா?
சமீபத்தில், நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்து வெளியே வரும்போது, தாம்பூல பையை கொடுத்து, அருகில் மேஜையிலிருந்த புத்தகங்களை காட்டி, 'இதில், உங்களுக்கு தேவையான புத்தகங்கள் இருந்தால், எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றனர்.
அங்கு, குழந்தைகளுக்கான, தெனாலிராமன், பீர்பால் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள். பெண்களுக்கான, கோலம், மெஹந்தி, சமையல். மாணவர்களுக்கான, கட்டுரை, இந்தி, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' மற்றும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவரவருக்கு, தேவையானதை எடுத்துச் சென்றனர்.
பலரும், புத்தகங்கள் தருகிறோம் என்ற பெயரில், அவர்களுக்கு பிடித்த புத்தகத்தையோ அல்லது நம்மிடம் இருக்கும் புத்தகத்தையோ கொடுத்து, பயனில்லாமல் செய்து விடுவர்.
ஆனால், இங்கு, விருந்தினர்களுக்கு பிடித்தமான பல்வேறு புத்தகங்களை வழங்கியது, பாராட்டும்படி இருந்தது.
அவர்களை பாராட்டி, எனக்கு பிடித்த ஒரு பழமொழி புத்தகத்தை எடுத்து வந்தேன்.
புத்தகம் கொடுக்க விரும்புவோர், இந்த வழியை பின்பற்றலாமே!
—பா.சின்மயானந்தம், மதுரை.

